2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை!
ஆமாம். தலைப்பில் இருப்பதுதான் செய்தியே! 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றதன் வழியாக தனிப்பட்ட வகையில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அடைகிறார் பி.வி.சிந்து.சிந்துவுக்கு முன் இந்தியாவைச் சேர்ந்த இரு ஆண்கள் இருமுறை ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றிருந்தாலும், முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றிருப்பவர் சிந்துதான்.
1900 ஒலிம்பிக் போட்டியில் நார்மன் பிரிட்சார்ட், இரு பதக்கங்களைப் பெற்றார். அதன்பின் சுஷில் குமார், மல்யுத்தத்தில் பீய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலமும், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். அதன் பிறகு இரு பதக்கங்களை ஒலிம்பிக்கில் பெற்றிருப்பவர் சிந்துதான்.1995 ஜூலை 5ம் தேதி பிறந்த சிந்து, தன் 8வது வயதிலேயே பேட்மிண்டன் ஆடத் தொடங்கிவிட்டார். இவரது அப்பாவும் அம்மாவும் சர்வதேச வாலிபால் வீரர்கள். இவரது தந்தை அர்ஜுனா விருது பெற்றவர். அவர் செகந்திராபாத் ரயில்வே மைதானத்தில் வாலிபால் விளையாடும்போது, அருகில் பேட்மிண்டன் மைதானங்கள் இருக்கவே அதில் ஆடத் தொடங்கிவிட்டார் சிந்து.
2009 சப் - ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இவர், அதன்பிறகு தன் வெற்றிப் பயணத்தில் பின்னோக்கிப் பார்க்கவே இல்லை. 18 வயதான போது, 2013 உலக சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை ஒருவர் உலக சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்றது அதுவே முதல் முறை. அதன் பிறகு சிந்துவுக்கு நிறைய சாம்பியன் பட்டங்கள் கிடைத்தன.2017 மற்றும் 2018ல் நடந்த உலக சாம்பியன் போட்டிகளில் இறுதிச் சுற்றுகளில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து. தங்கம் கை நழுவியதில் வருத்தமடைந்தவர் முன்னிலும் அதிகமாக பயிற்சி எடுத்து 2019ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
2018ல் நழுவிய தங்கப் பதக்கம் இம்முறை இவரது மடியில் வந்து விழுந்தது. தான், பெற்ற வெற்றிகளில் உலக சாம்பியன் பட்டம் மிக முக்கியமானது என்கிறார் சிந்து. ஏனெனில் இந்தப் போட்டிகளில் 2 வெண்கலம், 2 வெள்ளி என முன்னேறி கடைசியாக தங்கப்பதக்கத்தை வென்றார்.உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை இவர்தான்!
ஜான்சி
|