வேலை கொட்டிக்கிடக்கு... கவலைப்படாதீங்க!



பொதுவாக, ஐடி துறையிலிருந்து வெளியேறும் இளைஞர்கள் அடுத்தகட்டமாக இயற்கை விவசாயம் சார்ந்தே பயணிப்பார்கள். ஆனால், இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறார் சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் ராமானுஜம்.
தான், சார்ந்த ஐடி துறையிலேயே விதவிதமாகக் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகளை வருங்கால இளைஞர்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, ஒரு வேலைவாய்ப்பு ஆலோசனை மற்றும் பயிற்சி மையத்தை திருச்சியில் உருவாக்கி திறம்பட நடத்தி வருகிறார் இவர். கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த மையத்தின் பெயர் கேரியர் முத்ரா. இதுவரை முந்நூறு பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்குமே வேலைவாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது இந்நிறுவனம்.

‘‘எங்க நிறுவனத்தின் நோக்கமே வருங்காலத் தலைமுறையினருக்கு தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புக்கான சரியான வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் அளிக்கிறதுதான். பிறகு, அவங்களுக்கு  துறை சார்ந்து வேலைவாய்ப்புகளைப் பெற்றும் தருகிறோம்’’ என்றபடியே பேசத் தொடங்கினார் சீனிவாசன் ராமானுஜம்.

‘‘சொந்த ஊர் செஞ்சி பக்கத்துல தென்பாலைனு ஒரு கிராமம். நான் படிக்கிறப்ப மேற்கொண்டு எப்படி போகணும்னு வழிகாட்ட ஆட்களில்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்னாடி எனக்கிருந்த அதே சூழல் இப்பவரை இருக்கு. தொழில்நுட்பமா எவ்வளவோ மாற்றங்கள் வந்திருந்தாலும் இதுல எந்த மாற்றமும் வரல. அதாவது டிகிரியோ, டிப்ளமோவோ முடிச்சபிறகு என்ன பண்ணணும்னு தெரியாமல்தான் இன்னமும் இருக்காங்க.

எஞ்சினியரிங் படிக்கிறவங்களும் அது சம்பந்தமான வேலைக்குப் போறதில்ல. காரணம், சரியான வழிகாட்டுதல் அவங்களுக்குக் கிடைக்கிறதில்ல. அப்ப பிரச்னை பள்ளியிலும், கல்லூரியிலும் முறையான வழிகாட்டுதல்கள் இல்லங்கிறதுதான். இதை ஏன் ஒரு விஷயமா எடுத்து பண்ணக்கூடாதுனு தோணுச்சு. எனக்கு பதினாறு ஆண்டுகள் ஐடி துறையில் வேலை பார்த்த அனுபவம் இருக்கு.என்னுடைய பலம்னு யோசிக்கும்போது எனக்கு சொல்லிக் கொடுக்குறது ரொம்ப பிடிச்சிருந்தது. பதினாறு வருஷமா ஒரு டீமை நிர்வகிச்சிருக்கேன். ஆயிரக்கணக்கான பேருக்கு பயிற்சி அளிச்சிருக்கேன். எனக்கு புரிகிற மாதிரி சொல்லித் தர்றது ரொம்பப் பிடித்தமான விஷயமா இருந்தது. இப்பவும் என் நண்பர்கள், ‘நீ சொல்லித் தரலேனா இப்படி வந்திருக்கமாட்டேன்’னு பெருமையா சொல்வாங்க. அதெல்லாம் எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்தது.

கடைசியா, ஐபிஎம்ல இருந்து வெளியேறி 2017ல் முறையா பதிவு செய்து இந்த நிறுவனத்தை திருச்சியில் ஆரம்பிச்சேன். திருச்சி, தமிழகத்தின் மையப்பகுதி. தவிர, கல்வி நிறுவனங்கள் நிறைய இருக்கிற ஊர். தலைநகரமா இல்லாம இரண்டாம்பட்ச ஊரா இருந்தால் நல்லதுனு தோணுச்சு. அதனால, அங்கிருந்து தொடங்கினேன். இந்நிறுவனத்தின் பெயரை கேரியர் முத்ரானு வைக்கக் காரணமே கேரியர்ல ஒரு முத்திரை பதிக்கணும் என்பதற்காகத்தான். எந்த ஒரு தொழில் செய்தாலும் நாம் அதில் பிடிச்சு செய்தால்தான் முத்திரை பதிக்க முடியும்கிற நம்பிக்கை எனக்குண்டு. பிறகு, வேலூர்லயும், சென்னையிலும் கிளைகள் ஆரம்பிச்சேன். சிறப்பா போயிட்டு இருக்கு...’’ என்கிறவர் தொடர்ந்தார்.

‘‘ஆனா, ஒரு தொழில்முனைவோராவது அவ்வளவு சுலபமா இருக்கல. ஏன்னா, சாஃப்ட்வேர்ல பெரிய போஸ்ட்ல மாசம் மூணு லட்சத்துக்கும் அதிகமா சம்பளம் வாங்கினவன். இதையெல்லாம் விட்டுட்டு ஜீரோவுல இருந்து என்னுடைய கேரியரை ஆரம்பிக்கணும். தொழிலும் புதுசு. குடும்பத்தைப் பார்த்துக்கிறது, குழந்தைங்கள படிக்க வைக்கிறதுனு மற்ற விஷயங்களும் இருக்கு. எந்த பின்புலமும் கிடையாது. எல்லாமே நான்தான் செய்யணும். அந்நேரம் என் மனைவி யும், குடும்பமும் நிறைய சப்போர்ட் பண்ணினாங்க.

முதல்ல நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எடுத்ததுமே ஆலோசனை, பயிற்சினு போறப்ப பள்ளி, கல்லூரி அளவுல பெரிய தயக்கம் இருந்தது. அவங்கள பெரிய அளவில் ரீச் பண்ண முடியல. ஆனா, பள்ளியில் இருந்தே நாம் கேரியரை ஆரம்பிச்சாதான் அதை சிறப்பா எடுத்திட்டு போக முடியும். வெளிநாடுகள்ல எட்டாவது படிக்கிறப்பவே தங்களுடைய கேரியரை தேர்ந்தெடுக்கிற மெச்சூரிட்டியை வளர்த்திடுறாங்க. ஆனா, இங்க அதற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்கப்படல.

இப்ப, ‘இந்த மாதிரி ஒரு கோர்ஸ் இருக்கு. அதை வந்து கத்துக்கோங்க’னு சொன்னால், ‘அது இலவசமா கிடைக்குமா’னுதான் முதல்ல பார்க்குறாங்க. ஒரு தொழில்சார்ந்த கல்விக்கான செலவை மூன்றாம் பட்சமாகவே வச்சிருக்காங்க. அதுல முதலீடு செய்யத் தயங்குறாங்க. சமீபமா இந்த மனநிலை மாறிட்டு வருது...’’ என்கிற சீனிவாசன் ராமானுஜம், கோர்ஸ் பற்றி பேசினார்.  
‘‘நான் ஆரம்பிக்கும்போது முதல்ல சில விஷயங்கள்ல தீர்மானமா இருந்தேன். குறிப்பா, கோர்ஸ். அதாவது, சாதாரண கோர்ஸ் நடத்துறதுக்கு நிறைய பேர் இருக்காங்க. ஆனா, சில கோர்ஸ் நடத்த ஆட்களே இல்ல. அதுமாதிரியான கோர்ஸா எடுத்துக்கிட்டேன்.

அதாவது, Data science, Artificial intelligence, Digital marketing, Deep learning... இப்படி பல கோர்ஸ்கள் இருக்கு. டேட்டா சயின்ஸ், அதாவது தரவு அறிவியல்னு சொல்வாங்க. இப்ப நாலு பேர் இருக்கிற குடும்பத்துல நாலு போன் வைச்சிருக்காங்க. ஒவ்வொருத்தரும் நிறைய டேட்டா அனுப்புவாங்க. ஆடியோ, வீடியோ எல்லாம் டேட்டாதான். டேட்டாவா நாம் உற்பத்தி பண்ணிட்டே இருக்கோம். இதெல்லாம் எங்கபோய் யாருக்கு பயன்படுது. இது பெரிய மார்க்கெட். இந்த டேட்டாவை எல்லாம் பகுப்பாய்ந்து சில முடிவுகளை மேற்கொள்ள பயன்படுத்துறாங்க.

இது நிறைய பேருக்குத் தெரியாது. இதுக்குனு ஒரு அறிவியல் இருக்கு. இதைப் பத்தி படிக்கிறதுக்கு பெயர் டேட்டா சயின்ஸ். இதுல வேலை செய்றவங்கள டேட்டா சயின்டிஸ்ட்னு சொல்வாங்க.
அடுத்து ஆர்ட்டிஃபிஷல் இன்டலிஜன்ஸ். அதாவது, எல்லா பொருட்களுக்கும் பின்னால ஒரு செயற்கை நுண்ணறிவு இருக்கு. மனிதமூளை மாதிரி அங்கொரு மூளை இருக்கு. அதைப் பத்தி படிக்கிற கோர்ஸ்தான் ஆர்ட்டிஃபிஷல் இன்டலிஜன்ஸ். அடுத்து டிஜிட்டல் மார்க்கெட்டிங். உலகமே டிஜிட்டல்ல போயிட்டு இருக்கு. இதுல பல பிரிவுகள் இருக்கு. போலவே வேலைவாய்ப்புகளும் நிறைய.  

இதுல டேட்டா சயின்ஸ் மூன்று மாச கோர்ஸ். டிஜிட்டல் மார்க்கெட்டிங்கும், ஆர்ட்டிஃபிஷல் இன்டலிஜன்ஸும் ரெண்டு மாச கோர்ஸ். நாங்க இப்ப அப்ராடு என்கிற ஆன்லைன் நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் போட்டிருக்கோம். அவங்க வெளிநாடுகள்ல உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்காங்க. அவங்க மூலம் இந்த கோர்ஸ் பண்றோம். இதுல ஒரு வருஷ, ஒன்றரை வருஷ டிகிரி கோர்ஸ் எல்லாம் இருக்கு. ப்ளஸ் டூ முடிச்சவங்களும் இந்த கோர்ஸ்களை படிக்கலாம்.

நாங்க டேட்டா சயின்ஸ் கோர்ஸுக்கு 60 ஆயிரம் ரூபாய் வாங்குறோம். ஆனா, எப்பவுமே 30 டூ 50 சதவீதம் ஆஃபர் இருந்திட்டே இருக்கும். காரணம், இந்த கோர்ஸ் எல்லோருக்கும் சென்றடையணும்; எல்லோருமே வேலைவாய்ப்பு பெறணும் என்பதே எங்க நோக்கம். நாங்க வெறும் கோர்ஸ் மட்டும் கத்துத் தர்றதில்ல. இப்ப ஒருநபரை இண்டஸ்ட்ரி எப்படி எடுக்கும்னா, வெறுமே தொழில்நுட்பம் தெரிந்தவரை எடுக்கமாட்டாங்க. அவங்க எப்படி பேசுறாங்க, நடந்துக்கிறாங்கனு எல்லாம் பார்ப்பாங்க. இதையும் நாங்க சொல்லித் தர்றோம்.

அதாவது, இண்டஸ்ட்ரிக்கு நூறு சதவீதம் தயார்படுத்தி வேலையும் வாங்கித் தர்றோம். குறிப்பா, டிஜிட்டல் மார்க்கெட்டிங்குக்கு நூறு சதவீதம் வேலை உத்தரவாதம் தர்றோம். இந்த கோர்ஸ் படிக்க 30 ஆயிரம் ரூபாய்தான். படிச்சா வேலை நிச்சயம். இப்ப எங்களுக்கே ஆட்கள் நிறைய தேவை. அடுத்து, ஆர்ட்டிஃபிஷல் இன்டலிஜன்ஸ் கோர்ஸுக்கு 25 ஆயிரம் டூ 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

டேட்டா சயின்ஸ் கோர்ஸ் முடிச்சா குறைந்தபட்சம் அவங்க படிக்கிற பல்கலைக்கழகத்தைப் பொறுத்து ரூ.25 ஆயிரத்துல இருந்து சம்பளம் தொடங்குது. ஆறு மாசத்திலிருந்து ஒரு வருஷத்துக்குள்ள நல்ல வளர்ச்சி இருக்கும். டிஜிட்டல் மார்க்கெட்டிங்ல பனிரெண்டு துறைகள் வரை இருக்கு. அதுல என்ன டிபார்ட்மென்ட் தேர்ந்தெடுக்கிறாங்களோ அதைப் பொறுத்து சம்பளம் மாறும். குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய்ல இருந்து ஆரம்பிக்கும். ஆனா, நல்ல கிரியேட்டர், நல்ல மார்க்கெட்டிங் இருந்தா உடனே சம்பளம் எகிறிடும். இதுக்கு வருங்காலத்துல பெரிய எதிர்காலம் இருக்கு.

இப்ப நான் சென்னையில் இருந்து எல்லா கிளைகளையும் கவனிச்சுக்கிறேன். என்கூட வினோத்குமார் ஒரு பார்ட்னரா இருக்கார். தவிர, ஒன்பது பேர் பயிற்சியளிக்கும் பணி செய்றாங்க. இவங்கெல்லாம் துறை சார்ந்து பணி செய்றவங்க. அதனால, துறைக்கு எப்படிப்பட்டவங்க தேவைனு அவங்களுக்கு தெரியும். அதுக்கேற்ப பயிற்சி அளிப்பாங்க.

இது இல்லாமல் சாஃப்ட்வேர் டெவலப்பர்ஸ் இருக்காங்க. நான் கேரியர் பயிற்சி மையத்துடன் 2018ல் சாஃப்ட்வேர் நிறுவனமும் ஆரம்பிச்சேன். அதன் பெயர் முத்ரா சாஃப்ட்வேர் சர்வீஸஸ். இதுல சில புரொஜெக்ட எடுத்து அங்கங்க இருக்கிற நண்பர்களுக்கு அனுப்பிடுவேன். அவங்க பணி செய்து கொடுப்பாங்க...’’ என்கிறவரின் லட்சியம் பத்து லட்சம் பேரை உருவாக்க வேண்டும் என்பது.

‘‘அடுத்த ஐந்து ஆண்டுகள்ல பத்து லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கணும்னு குறிக்கோளுடன் செயல்பட்டுட்டு வர்றேன். குறிப்பா, இந்த நிறுவனத்துக்குப் போனா சிறப்பா படிக்கலாம், நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைக்கும்னு பரவலான நம்பிக்கையை விதைக்கணும்னு ஆசைப்படுறேன். அதேமாதிரி சாஃப்ட்வேர் நிறுவனத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள்ல பில்லியன் டாலர் நிறுவனமா கொண்டு வரணும்னு நினைச்சிருக்கேன். இந்த ரெண்டு குறிக்கோள்தான் என் மனசுல நிழலாடிட்டு இருக்கு. அதை லட்சியமா வச்சே பயணிச்சிட்டு இருக்கேன். நிச்சயம் என் இலக்கை அடைவேன்...’’ நம்பிக்கை பொங்க சொல்கிறார் சீனிவாசன் ராமானுஜம்.

பேராச்சி கண்ணன்