நீயல்லால் தெய்வமில்லை...விநாயகனே வினை தீர்ப்பவனே...பாடல்களுக்கு எல்லாம் இசை இவர்தான்!



நீயல்லால் தெய்வமில்லை
எனது நெஞ்சே
நீ வாழும் எல்லை
முருகா
நீயல்லால்
தெய்வமில்லை...
- பக்தி மணம் கமழும் இந்த பாடலை பாடியவர்  பத்ம சீர்காழி கோவிந்தராஜன் என்பதும், பாடலை எழுதியவர் கலைமாமணி உளுந்தூர்பேட்டை சண்முகம் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த பாடலுக்கு இசையமைத்தவர் யார் என்பது பலருக்குத் தெரியாது.

திரையிசை பாடல்களுக்கு கிடைக்கும் மதிப்பு பக்தி பாடல்களுக்கு கிடைப்பதில்லையென்று இன்றைய பல பாடகர்கள், பாடகிகள் பக்தி இசைக்குள் வருவதே இல்லை.
ஆனால், அந்தப் காலத்தில் டி.கே.புகழேந்தி, குன்னக்குடி வைத்தியநாதன்,  சூலமங்கலம் சகோதரிகள், கே.வீரமணி, மதுரை சோமு, பித்துக்குளி முருகதாஸ், டி.ஆர்.மகாலிங்கம், டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர்  திரையிசையில் மட்டுமின்றி பக்தி இசையிலும் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்.

இறை உணர்வைத்தாண்டி இலக்கியச்சுவை கொண்டவை என இவர்கள் பாடிய பல பாடல்களை நம்மால் உதாரணம் காட்ட முடியும்.அப்படிப்பட்ட ஜீனியஸ் ஒருவர், மெல்லிசை மன்னர் கொடிகட்டிப்பறந்த காலத்தில் சினிமாவிற்குள் நுழைந்து தனது தனித்த அடையாளத்தை நிரூபித்ததோடு மட்டுமின்றி பக்தி இசையில் தனக்கான நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அவர் இசையமைத்த பக்திப் பாடல் இல்லாமல் எந்த கோயில் நிகழ்ச்சியும் நடப்பதில்லை. கடை திறப்பு விழா, ஆயுதபூஜை விழா, கிராமத்து திரையரங்குகளில்  காட்சி துவங்குவது கிடையாது. ‘விநாயகனே... வெவ்வினையை வேரறுக்க வல்லான்...’ என்று ஹைபிட்ச்சில் தொகையறாவைப் பாடி விட்டு -

விநாயகனே
வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே
ஞால முதல்வனே...

என சீர்காழி கோவிந்தராஜன் ஊன் உருகப் பாடிடும் பாடல்தான் அது. இந்தப் பாடல் வெளிவந்து சுமார்  40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.  ஆனால், பாடல் வரிகளை நினைவில் வைத்திருப்பதற்கு காரணம் இப்பாடலின் இசையமைப்பாளர்.இந்த பாடல் மட்டுமின்றி, ‘நீயல்லால் தெய்வமில்லை...’ பாடலுக்கும் இவர்தான் இசையமைத்தார். அவர் பெயர் டி.பி.ராமச்சந்திரன். காலத்தால் அழியாத ஏராளமான பக்தி பாடல்களுக்கு  இசை வழங்கிய சங்கீத சக்கரவர்த்தி அவர்.இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய விநாயகர், முருகன் பாடல்களுக்கு  டி.பி.ராமச்சந்திரன் போட்ட மெட்டுக்கள் காலக்கரையான் அழிக்க முடியாதவை.

‘கணபதியே வருவாய் அருள்வாய்...’, ‘பன்னிரு விழிகளே...’,  ‘சுழி போட்டு செயல் எதுவும் துவங்கு...’, ‘முத்தமிழும் அருள்வாய் மூத்தவனே...’, ‘காக்கும் கடவுள் கணேசனை நினை...’, ‘வெற்றிவேல் அது வீரவேல்...’, ‘கார்த்திகை பெண்கள் தாலாட்ட...’, ‘உன்னுடைய வேல் ஒன்றே உறுதுணையாக வருகிறது...’, ‘வேலவனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே...’, ‘காலை இளங்கதிரில் உந்தன் காட்சி தெரியுது...’, ‘முருகன் திருமால் மருகன்...’, ‘ஆறுமுகம் இருக்க அவன் கை வேலிருக்க...’, ‘அருணகிரி பரவ...’, ‘வரம் தருவாய் முருகா...’, ‘எனக்கென்ன மனக்கவலை என் தாய்க்கன்றோ...’, ‘தமிழான உருவம்தான் தண்டபாணி...’, ‘தங்கமயம் முருகன் சந்நிதானம்...’, ‘ஆடும் மயிலோடு விளையாடும்...’,  ‘முதல் பிள்ளை இவனுக்கு மூத்த பிள்ளை...’, ‘வெற்றிமுகம் தரும் வேழமுகம் வரும்...’, ‘மங்கல வாழ்வளிக்கும் கணபதியே...’, ‘முருகா உன் பாட்டெல்லாம் இனிக்கின்றது...’, ‘தணிகை என்றால் அமைதி...’ என சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அத்தனை பக்தி கானங்களுக்கும் இசை வழங்கியவர் டி.பி.ராமச்சந்திரன். சமஸ்கிருதத்தில் ஒலித்த ‘ஸ்ரீராஜராஜேஸ்வரி சுப்ரபாத’த்திற்கும் இவர்தான் இசையமைத்தார்.

இப்படி இவர் உருகி உருகி  இந்து பக்தி பாடல்களுக்குத் தான் இசையமைத்தார் என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவீர்கள். டி.பி.ராமச்சந்திரன்  இசையமைத்த பாடல் இல்லாமல் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுவதில்லை.

ஓசன்னா பாடுவோம்
ஏசுவின் தாசரே
உன்னதத்திலே தாவீது
மைந்தனுக்கு ஓசன்னா...
பாடல் ஒலிக்காத கிறிஸ்தவ வீடு இருக்கிறதா?

பி.சுசீலா குரலில் ஒலித்த பாடல் வெளியாகி எத்தனை ஆண்டுகளாகி விட்டது. இப்பாடலுக்கு இசையமைத்தவர் டி.பி.ராமச்சந்திரன்தான். இயேசுநாதர் பிறந்த வரலாற்றை ஒரே பாடலில் சொல்லிய பெருமைக்குரியவர் இந்த இசைமையப்பாளர். எல்.ஆர்.ஈஸ்வரி, டேப் ராதா மாணிக்கம் பாடிய -

ஏழைக்கு பங்காளராம்
பாவிக்கு இரட்சகராம்
ஏசு என்னும் திருமகனாம்
இதயத்திலே வாழ்பவராம்...
பாடல் கேட்போரின் மனதிற்குள் பதியும் வகையில் டி.பி.ராமச்சந்திரனால் மெட்டமைக்கப்பட்ட இயேசுவின் புகழ் பாடும் பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி, டேப் ராதாமாணிக்கம் பாடிய மற்றொரு பாடலான -

ஆதவன் உதிக்கும்
முன் எழுவீர்
நம் ஆண்டவர்
தோன்றி விட்டார்
இயேசு ஆண்டவர்
தோன்றி விட்டார்...

பாடல் எவ்வளவு வேகமான தாளக்கட்டு என்பதை கேட்போர் உணர்ந்திருப்பார்கள். ‘இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே...’, ‘இயேசு பிரான் எங்கள் இயேசு பிரான்...’ என எத்தனையோ கிறிஸ்தவ பக்தி பாடல்களுக்கும் டி.பி.ராமச்சந்திரன் இசை மீட்டியுள்ளார். மதம் கடந்து அவரிடம் இருந்தது இசை மட்டும்தான். அவருடன்  சில பக்தி பாடல்களுக்கு டி.ஏ.கல்யாணம், டி.கே.புகழேந்தி ஆகியோரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

பக்தி இசையில் மயக்கிய டி.பி.ராமச்சந்திரன், நடிகரும் கூட. 1948ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் உருவான ‘வேதாள உலகம்’ படத்தில் அர்ஜுனனாக நடித்தவர் டி.பி.ராமச்சந்திரன்தான்.

இன்றைய நவீன சினிமாவிற்கான முயற்சியை 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் முயற்சித்து வெற்றி பெற்ற  மகா கலைஞன் வீணை பாலச்சந்தரின் நெருக்கமான நண்பர்தான் இந்த டி.பி.ராமச்சந்திரன்.

1970ம் ஆண்டு  வீணை பாலச்சந்தர் இயக்கிய ‘நடு இரவில்’ படம் துவங்கிய 15வது நிமிடத்தில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி டைட்டிலில் காட்டி அசத்தியவர். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திகில் படமிது. இப்படத்திற்கு இசை வீணை பாலச்சந்தர் என்றாலும், படத்தின் பின்னணி இசையில் மிரட்டியவர் டி.பி.ராமச்சந்திரன்.

இந்தப் படத்தின் திகில் தன்மைக்கு அவர் வழங்கிய இசை, அந்தக் காலத்தில் படம் பார்க்க திரையரங்கு வரவே ரசிகர்கள் பயந்தார்கள் என்று சொல்லப் படுகிறது. அப்படி மிரட்டலான இசையமைப்பாளர் டி.பி.ராமச்சந்திரன்தான் வீணை பாலச்சந்தர் இயக்கிய ‘பொம்மை’ படத்திற்கும் பின்னணி இசை வழங்கினார்.

இசையமைப்பாளர், நடிகர் மட்டுமல்ல... டி.பி.ராமச்சந்திரன் மிகச்சிறந்த பாடகரும் கூட.1953ம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த மூன்றாவது படமான ‘பூங்கோதை’யில் ஜிக்கியோடு டி.பி.ராமச்சந்திரன் பாடிய  எவர்க்ரீன் டூயட் மறக்க முடியாது.

நான் ஏன் வரவேண்டும்
ஏதுக்காகவோ
யாரைக்
காண்பதற்கோ
வான்நட்சத்திரம்
மாங்குயில்
அழைத்தாலும்
வையகம்
தனிலே வருமோ
வலைக்கண்டும்
மான் வீழ்ந்திடுமோ...

1947ம் ஆண்டு வெளியான ‘ராமராஜ்யம்’ படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் ‘பாரத தேசத்தில் நாரிமணியின் கதையைச் சொல்வோமே நாம்...’ என்ற புகழ்பெற்ற தேசபக்தி பாடலை கே.பி.சந்திரனுடன் இணைந்து டி.பி.ராமச்சந்திரன் பாடினார். 1952ம் ஆண்டு வெளியான ‘தர்மதேவதா’, 1953ம் ஆண்டு வெளியான ‘திரும்பிப்பார்’, 1955ம் ஆண்டு வெளியான ‘கதாநாயகி’, 1956ம் ஆண்டு வெளியான ‘கோகிலவாணி’, 1957ம் ஆண்டு வெளியான ‘ராணி லலிதாங்கி’ உட்பட பல படங்களில் டி.பி.ராமச்சந்திரன் பல  பாடல்களைப் பாடியுள்ளார்.
1967ம் ஆண்டு சி.என்.சண்முகம் இயக்கத்தில் வெளியான ‘கற்பூரம்’ படத்திற்கு டி.பி. ராமச்சந்திரன் முதல் முதலாக இசையமைத்தார். இப்படத்தில் தாராபுரம் சுந்தரராஜன், பி.சுசீலா இணைந்து பாடிய -

அழகு ரதம்
பொறக்கும்
அது அசஞ்சி
அசஞ்சி நடக்கும்
தமிழைப்போல
இனிக்கும்
தகப்பன் போல
சிரிக்கும்...

என்ற குழந்தை பிறப்பு குறித்து  கவிஞர் மாயவநாதன் எழுதிய புகழ் பெற்ற பாடலுக்கு உயிரூட்டியவர் டி.பி.ராமச்சந்திரன். இதே படத்தில் பூவை செங்குட்டுவனின் அழகிய கற்பனையில் உருவான பாடலை பி.சுசீலாவுடன், சூலமங்கலம் ராஜலட்சுமி இணைந்து பாடினார்.

வணங்கிடும் கைகளின்
வடிவத்தைப் பார்த்தால்
வேல் போல் இருக்குதடி
வேல் போல் இருக்குதடி
வேல் கொண்டு
நின்றவன் திருமுகம்
பார்த்தால்
பால் போல் தெரியுதடி
பால் போல் தெரியுதடி...

கர்நாடக சங்கீதம் தவழும் இந்த பாடல் டி.பி.ராமச்சந்திரனின் இசைப்புலமைக்கு  சான்று. இப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா...’ பாடல் துள்ளல் இசை.1967ம் ஆண்டு ஏ.டி.கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் ஏ.வி.எம்.ராஜன், முத்து ராமன், கே.ஆர்.விஜயா நடிப்பில் உருவான படம் ‘மனம் ஒரு குரங்கு’. சோவின் திரைக்
கதையில் உருவான இப்படத்தில் டி.பி.ராமச்சந்திரன் இசையில் அத்தனை பாடல்களும் புகழ்பெற்றவை. இப்படத்தில் வி.சீத்தாராமன்  எழுதிய பாடல், கவியரசர்  கண்ணதாசன் எழுதிய தத்துவப்பாடலாகவே இன்றளவும் கருதப்படுகிறது. டி.எம்.சௌந்தரராஜன் பாடிய அந்தப் பாடல் -

மனம் ஒரு குரங்கு
மனித மனம் ஒரு குரங்கு
அதைத் தாவ விட்டால்
தப்பி ஓட விட்டால்
நம்மைப் பாபத்தில்
ஏற்றி விடும்
அது பாசத்தில்
தள்ளி விடும்...

டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய ‘போகிறேன் புதிய உலகம் போகிறேன்...’, சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய ‘பட்டணத்து சந்தையிலே கூடைக்காரி...’, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘அருப்புக்கோட்டை மச்சான்...’, சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘பியூட்டிபுல் மார்வெலஸ் எக்சலண்ட்...’ பாடல்களும் வி.சீத்தாராமனின் கற்பனையில் இந்தப் படத்தில் உருவானவைதான். தத்துவமும், காமெடி கலக்கலுமாக உருவான இத்தனை பாடல்களிலும் விதவிதமான மெட்டுக்களை வாரி வழங்கியிருப்பார் டி.பி.ராமச்சந்திரன்.

1969ம் ஆண்டு வி.டி.அரசு இயக்கத்தில் ஏ.வி.எம்.ராஜன், புஷ்பலதா நடிப்பில் வெளியான படம் ‘மகிழம்பூ’. இசை டி.பி.ராமச்சந்திரன். படத்தின் தலைப்பை வைத்து கவிஞர் மாயவநாதன் எழுதிய பாடலை தனது பாணியில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார்.

மாம்பூ மகிழம்பூ
மனசுக்கேத்த தாழம்பூ
காம்பு கறுப்பு
கைப்படாத தாமரைப்பூ...

ஒரு பாடலில் எத்தனை பூ, பு என எண்ணி வியக்கும் வகையில் கவிஞரின் கற்பனை சிறகு விரிக்கும். வித்வான் வே.லட்சுமணன் எழுதிய ‘வேண்டியத வாரிக்கொள்ள வாருங்க அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க...’ பாடலை சூலமங்கலம் ராஜலட்சுமி பாடியுள்ளார். குமாரி பத்மினி கவர்ச்சியாய் இப்பாடலுக்கு தோன்றியிருப்பார்.

எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.பி.கோமளா போட்டி போட்டு  பாடிய ‘ஊரான் போட்ட தோட்டத்திலே...’ பாடல், ஸ்ரீவள்ளி திருமண நாடகக் காட்சிக்குத் தகுந்தவாறு டி.பி.ராமச்சந்திரன் மெட்டமைத்திருப்பார். ‘தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே...’ என்ற தத்துவப்பாடலுக்கு ஏ.வி.எம்.ராஜன் ஒருவருக்கு  டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய இருவர் குரல்களில் பாடல்  ஒலிக்கும். இப்படி வித்தியாசமான சிந்தனை கொண்டு பல பாடல்களைத் தந்த மாபெரும் இசைக்கலைஞரான டி.பி.ராமச்சந்திரன் பெயரோ, படமோ தமிழ்நாடு திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வெப்சைட் பக்கத்தில் இல்லை!

ப.கவிதா குமார்