ரத்த மகுடம்- 159



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

பெருவளநல்லூரை சாளுக்கியப் படை அடைந்தபோது இரவு தொடங்குவதற்கு அறிகுறியாக சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தான்.தனக்கு முன்பாக வந்து சேர்ந்திருந்த பல்லவப் படையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் விக்கிரமாதித்தர். ‘‘மன்னா...’’திரும்பிய விக்கிரமாதித்தர் தன் போர் அமைச்சரைக் கண்டு புன்னகைத்தார். ‘‘சொல்லுங்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபரே...’’‘‘தாக்குதலை மேற்கொள்ளலாம் அல்லவா..?’’ சாளுக்கிய மன்னரின் புருவங்கள் உயர்ந்தன.‘‘தாங்கள் வடிவமைத்த வியூகத்தின்படிதான் நம் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்கள் வாளைச் சுழற்றி சமிக்ஞை செய்வதற்காகத்தான் தளபதிகளும் உபதளபதிகளும் காத்திருக்கிறார்கள்...’’‘‘அதற்கு அவசியமில்லை...’’‘‘மன்னா...’’‘‘நாளை கருக்கலில் நம் படை அணிவகுத்தால் போதும்...’’ திட்டவட்டமாக அறிவித்தார் விக்கிரமாதித்தர்.

‘‘ஏன், இப்பொழுது தாக்கினால் என்ன..?’’
‘‘இரவில் தாக்குவது தர்மமல்ல...’’
‘‘மன்னா...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் நாசி துடித்தது. ‘‘இது துவாபர யுகமல்ல... கலியுகம். இந்த யுத்தமும் மகாபாரத யுத்தமல்ல. இங்கு தர்மபுத்திரரோ, பீஷ்மரோ இல்லை...’’
‘‘இருவரும் இணைந்த பரமேசுவரவர்மர் பல்லவ மன்னராக நம் எதிரே கூடாரம் அடித்து தங்கியிருக்கிறார்! கலைப்பொக்கிஷங்கள் அழியாதிருக்கக் காஞ்சியை நம்மிடம் கொடுத்துவிட்டுச் சென்ற மகான் அவர். கோயில்கள் நாசமாகாமல் இருக்க தன் தலைநகரையே நமக்கு பரிசாக அளித்தவர். அந்த தர்மாத்மாவை தர்மப்படி எதிர்கொள்ளவே விரும்புகிறேன்!’’

‘‘தர்மவானா... பல்லவனா..?’’ சாளுக்கிய போர் அமைச்சரின் வதனத்தில் இகழ்ச்சி தாண்டவமாடியது. ‘‘அப்படி தர்மம் பார்ப்பவர்கள்தான் நம் தலைநகரான வாதாபியைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள் என்பதை இக்கணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன் மன்னா..!’’‘‘அதற்குக் காரணம் எனது சிறிய தந்தையான நாகநந்தி என்பதை எக்கணத்திலும் தங்களுக்குத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன் அமைச்சரே! அவர் மட்டும் ஆயனச் சிற்பியின் மகளான சிவகாமி அம்மையாரை சிறையெடுக்காவிட்டால் மணிமங்கலத்தில் பல்லவர்கள் அசுரப் போரைக் கையாண்டிருக்க மாட்டார்கள்... பின்வாங்கிய என் தந்தையின் தலைமையிலான படையைத் துரத்தி வந்து வாதாபியை எரித்திருக்க மாட்டார்கள்...

அன்று சாளுக்கியர்களின் மீது படிந்த பெண் பாவத்துக்கு பரிகாரம் தேடத்தான் இந்த பெருவளநல்லூரில் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறேன்... பெண் சாபம் பொல்லாதது ராமபுண்ய வல்லபரே... அது குலத்தையே வேரோடு சாய்த்துவிடும்... என் தந்தையின் மறைவுக்குப் பிறகு சாளுக்கிய தேசமே உறுதியான மன்னரில்லாமல் தத்தளித்ததை மறந்துவிட்டீர்களா..?

ஆயனச் சிற்பியின் மகளான சிவகாமி அம்மையார் சிறை வைக்கப்பட்ட இடத்தில் கொற்றவைக்கு ஆலயம் எழுப்பி பரிகார பூஜை செய்த பிறகுதானே நம் ஆட்சி நிலைத்தது? மீண்டும் அப்படியொரு நிலையை எக்காலத்திலும் சாளுக்கிய தேசம் சந்திக்க வேண்டாம்... தர்மப்படி இந்தப் போரை நடத்த விடுங்கள்... ஏனெனில் இந்தப் போரே சாளுக்கியர்கள் செய்யும் சாப விமோசனத்துக்கான பரிகாரம்தான்!’’

சொல்லிவிட்டு விடுவிடுவென்று தன் கூடாரத்துக்குச் சென்ற விக்கிரமாதித்தரை இமைக்காமல் பார்த்தார் சாளுக்கிய போர் அமைச்சர்.‘‘புரிகிறதல்லவா..?’’ அழுத்தமாகச் சொன்னார் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மர். ‘‘சாளுக்கியர்களை வெற்றி கொள்வது அல்ல... இழந்த நமது அரசை மீட்பதே நமது நோக்கம்... அதற்குத்தான் இந்தப் போரே தவிர நாடு பிடிக்கும் ஆசை அல்ல... இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவோம்.

உங்கள் ஒவ்வொருவரின் வீரத்தையும் அறிந்தே இதை உறுதியுடன் சொல்கிறேன். ஆனால், சாளுக்கியப் பகுதிகளை பல்லவப் பகுதிகளுடன் இணைக்க மாட்டோம்... அவ்வளவு ஏன்... கப்பம் கட்டும் சிற்றரசாகக் கூட சாளுக்கியர்களை நாம் தாழ்த்த மாட்டோம்... பல்லவ, சாளுக்கிய எல்லைப் பகுதிகள் இதற்கு முன் எப்படி இருந்தனவோ அப்படித்தான் இந்தப் போரில் நாம் வெற்றி பெற்ற பிறகும் இருக்கும்... இருக்க வேண்டும்! புரிகிறதல்லவா..?’’கட்டளையிட்ட தங்கள் மன்னரை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்தார்கள்.

அந்தத் திகைப்பை அதிகரிக்கும் வகையில் பல்லவ மன்னர் தொடர்ந்தார்.‘‘யுத்தத்தில் வெற்றி தோல்வி சகஜம். உயிர்ப்பலியும் தவிர்க்க இயலாதது.  ஆனால்... இந்தப் போரில் சாளுக்கிய மன்னரின் உயிருக்கு எந்த ஆபத்தும்  ஏற்படக் கூடாது... எந்த பல்லவ வீரனும் அதற்கான முயற்சியில் இறங்கக் கூடாது.

அவரது ஆயுதம் பறிபோகும்படி செய்யலாம்... அவரை நிராயுதபாணியாக நிறுத்தலாம்... மற்றபடி அவரது மார்பை நோக்கியோ  பின்புறத்தில் இருந்து ஆயுதங்களை அவர் மீது வீசுவதோ கூடவே கூடாது... அப்படி மட்டும் நிகழ்ந்துவிட்டால் அக்கணத்திலேயே என்  உயிரை மாய்த்துக் கொள்வேன்...’’ தன் நயனங்கள் சிவக்க பரமேஸ்வரவர்மர் முழக்கமிட்டார்.

அடுத்த கணமே எழுந்து நின்று மன்னரை வணங்கினார் புலவர் தண்டி. ‘‘தங்களை அரசராகப் பெற இந்தப் பல்லவநாடு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...’’
‘‘இல்லை புலவரே... விக்கிரமாதித்தரை சாளுக்கிய மன்னராகப் பெறத்தான் இந்த பாரதம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...’’ நிதானமாகச் சொன்னார் பரமேசுவரவர்மர். ‘‘அவர் யுகபுருஷர் புலவரே... அவர் வாழும் காலத்தில் நானும் ஒரு பிரதேசத்துக்கு மன்னனாக இருக்கிறேன் என்பதை எண்ணி எம்பெருமான் ஈசனுக்கு நன்றி சொல்கிறேன்...’’

‘‘மன்னா...’’‘‘உணர்ச்சிவசப்பட்டு சொற்களை உதிர்க்கவில்லை புலவரே... தீர ஆலோசித்துதான் சொல்கிறேன்... என் பாட்டனார் நரசிம்மவர்மர் அவர்களது தலைநகரையே எரித்து சாம்பலாக்கினார்... இப்படியொரு சம்பவம் நடந்தால் எந்த சத்ரியனும் அதற்கு பழிக்குப் பழி வாங்கியே தீருவான்... தன் தேசத்தின் மீது படிந்த அவமானத்தைத் துடைக்க தன் உயிரையே பணயம் வைப்பான்... அது தர்மமும் கூட. அதன் பொருட்டுதான் விக்கிரமாதித்தரும் படை திரட்டி வந்திருக்கிறார்... ஆனால்...’’ நிறுத்திய பல்லவ மன்னரின் கண்கள் கலங்கின.

‘‘நம் காஞ்சியின் மண்துகளைக் கூட அவர் அப்புறப்படுத்தவில்லை புலவரே... பல்லவர்களிடம் எப்படி காஞ்சி மாநகரம் இருந்ததோ அப்படித்தான் சீரும் சிறப்புமாக விக்கிரமாதித்தரின் ஆளுகைக்குக் கீழும் திகழ்கிறது...  நம் காலத்தின் தர்மபுத்திரர் சந்தேகமே இல்லாமல் விக்கிரமாதித்தர்தான்... அவர் நினைத்திருந்தால் விளிந்தையிலேயே கரிகாலனையும் சோழ மன்னரையும் வீழ்த்தியிருக்க முடியும்...

கங்க மன்னரை நம் மீது பாயும்படி கட்டளையிட்டிருக்க முடியும்...ஆனால், சாளுக்கிய மன்னர் அப்படி செய்யவேயில்லை புலவரே... இத்தனைக்கும் சாளுக்கிய தேசத்துக்கு உட்பட்ட சிற்றரசுதான் கங்க நாடு... அதுமட்டுமா..? விக்கிரமாதித்தரை வளர்த்து ஆளாக்கி சாளுக்கிய மன்னராக அவரை அமர வைத்ததுகூட கங்க மன்னர்தான். அப்படிப்பட்ட கங்க மன்னரை இந்தப் போரில் இருந்து விலகியிருக்கும்படி கட்டளையிட்டிருக்கிறார் விக்கிரமாதித்தர்.

ஏன் தெரியுமா..? தங்களை வீழ்த்திய பல்லவர்களை நேருக்கு நேர் போரிட்டு, தான் வீழ்த்த வேண்டும் என அவர் நினைக்கிறார். இதன் வழியாக சாளுக்கியர்களின் பெருமையை மீட்க முற்படுகிறார். அந்த தர்மபுத்திரர் கடைப்பிடிக்க முற்படும் அறத்துக்கு தலைவணங்கி, எந்த பாதிப்பும் அதற்கு ஏற்படுத்தக் கூடாது என கவனமாக இருக்கிறேன் புலவரே... அதனால்தான் இந்தப் போருக்கு கரிகாலனை தளபதியாக நியமித்திருக்கிறேன்... என் பாட்டனார் காலத்தில் சாளுக்கியர்களை நிர்மூலமாக்கியது பல்லவ தளபதியான பரஞ்சோதி.

சோழ நாட்டுக்கு உட்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அவர், மணிமங்கலத்தில் அசுரப்போரைக் கையாண்டார்... அதே சோழ நாட்டின் இளவரசனான கரிகாலன் இப்பொழுது தர்மப்படி போர் புரிந்து அதே சாளுக்கியர்களை வெற்றி கொண்டு பல்லவர்களின் பெருமையை நிலைநிறுத்துவான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதனால்தான் தர்மப் போர் புரிய நினைத்த விக்கிரமாதித்தரை காஞ்சிக்கு வரவழைத்தது முதல் அனைத்து செயல்களையும் கரிகாலன் சுதந்திரமாகச் செய்ய புலவர் தண்டியின் ஆசியுடன் அனுமதித்தேன்...’’பல்லவ மன்னர் இப்படிச் சொல்லி முடித்ததுமே கரிகாலன் எழுந்து அவர் அருகில் வந்து அவரது கால்களைத் தொட்டு வணங்கினான்.

அவனை இறுக அணைத்தார் பரமேஸ்வரவர்மர்.இக்காட்சியைக் கண்ட பல்லவ இளவல் இராஜசிம்மன் முதல் சீனத்து வானவில்கள் வரை அங்கிருந்த அனைவரும் மெய்மறந்து நின்றார்கள்.

சாளுக்கிய மன்னர் கட்டளையிட்டபடி சக்கர வியூகத்தை கருக்கலில் அமைத்தார் ஸ்ரீராமபுண்யவல்லபர்.அருணன் உதித்ததுமே பல்லவப் படை கரிகாலன் தலைமையில் பாய்ந்தது. சிவகாமியின் மேனியில் சக்கர வியூகத்தை உடைக்க, தான் எப்படி திட்டமிட்டிருப்பதாக கரிகாலன் விவரித்தானோ, அதை பெருவளநல்லூர் நிலத்தில் செயல்படுத்திக் காட்டினான்.

ஏழு சக்கரங்களையும் தகர்த்து மையத்துக்கு வந்த கரிகாலனை விக்கிரமாதித்தர் எதிர்கொண்டார். கதிரவன் அஸ்தமிக்கத் தொடங்கிய நேரத்தில், சாளுக்கிய மன்னரின் வாளைத் தட்டிவிட்ட கரிகாலன், நிராயுதபாணியாக நின்ற அவரை வணங்கினான்.

இமைகளை மூடித் திறந்த விக்கிரமாதித்தர் சுற்றிலும் பார்த்தார். சாளுக்கியர்களின் படுதோல்வி எல்லா இடங்களிலும் பிரதிபலித்தது.நிமிர்ந்து கரிகாலனை ஏறிட்டார். ‘‘என்னைக் கொல்ல வேண்டாம் என்று பரமேசுவரர் ஆணையிட்டாரா..?’’ கரிகாலன் தலையசைத்தான்.‘‘ஏன்..?’’‘‘மீண்டும் போர்க்களத்தில் தங்களைச் சந்திப்பதற்காக...’’ சொன்ன கரிகாலன், திரும்பி பல்லவப் படையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.‘‘கரிகாலா...’’திரும்பினான். ‘‘மன்னா...’’உதடுகள் துடிக்க விக்கிரமாதித்தர் உச்சரித்தார். ‘‘நன்றி, சாளுக்கியர்களின் மானத்தைக் காத்ததற்கு!’’
கரிகாலன் பதிலேதும் சொல்லாமல் தலைகுனிந்தான்.

‘‘ஆயனச் சிற்பியின் மகளான சிவகாமி அம்மையாரின் பாதங்களில் விழுந்து, என் சிறிய தந்தை செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்க நினைத்தேன்... அதற்காகவே நீ என்னை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது வரவேற்றேன்... ஆனால், இறைவனின் சித்தம்... என்னைச் சந்திக்காமலேயே அவர் காலமாகிவிட்டார்...

இதை தெரிவித்தால் எங்கே நான் வருத்தப்படுவேனோ என்று என்னிடம் இருந்து அச்செய்தியை மறைத்தாய்... அதேநேரம் சாளுக்கியர்களுக்கு ஏற்பட்ட கறை என்னால் துடைக்கப்பட வேண்டுமென்று சில காலம் காஞ்சி மாநகரை என்வசம் ஒப்படைத்தாய்... கூடவே தர்மப்படி போர் புரிந்து என்னை வீழ்த்தி பல்லவர்களுக்கு வெற்றியும் தேடிக் கொடுத்துவிட்டாய்...’’கரிகாலன் அமைதியாகவே நின்றான்.

‘‘காபாலிகன், நங்கை, உதயணன், பொன்னன் என புலவர் தண்டியின் ஒற்றர் படையைச் சேர்ந்த பலரும் பல்லவர்களின் வெற்றிக்காக பலவாறு உழைத்திருக்கிறார்கள்... ஆனால், புலவரின் முதன்மையான மாணவன் நீயே என்பதை நிரூபித்துவிட்டாய்! மல்லைக்கு செல்லும் வழியிலுள்ள சத்திரத்தில் சிறை வைக்கப்பட்ட என் சகோதரனை வைத்து ஏதோ காரியம் செய்வதுபோல் நீயும் சிவகாமியும் நன்றாகவே நாடகமாடி என்னை ஏமாற்றினீர்கள்!

கடிகை பாலகனை வேளிர்களின் தலைவனாக என் கரங்களாலேயே நியமிக்கும்படி செய்து நாட்களைக் கடத்தினீர்கள்! எல்லாம் நீங்கள் படைதிரட்டுவதற்கான அவகாசத்துக்காக! மெச்சுகிறேன் கரிகாலா... நீதான் தலைசிறந்த பல்லவ ஒற்றன்!’’ நிறுத்திய சாளுக்கிய மன்னர் அவனை உற்றுப் பார்த்தார்.

‘‘மீண்டும் யுத்தத்தில் சந்திப்போம்... என் தந்தையின் தோல்விக்கு நான் பழிவாங்க வந்தேன்... எனது இந்தத் தோல்விக்கு என் மகன் விநயாதித்தன் கண்டிப்பாகப் பழிவாங்குவான்... நீயும் பரமேசுவரவர்மரும் இராஜசிம்மனும் தயாராக இருங்கள்...’’ காஞ்சியே வெற்றிக் களிப்பில் இருந்த நேரத்தில், சிவகாமி யும் கரிகாலனும் ஒருவரையொருவர் மூர்க்கத்துடன் பார்த்தபடி பஞ்சணையில் கிடந்தார்கள்.

‘‘சோழன் மகனே! என்னை நெருங்காதே!’’ ‘‘நெருங்கினால் என்ன செய்வாய் சைலேந்திர மன்னரின் மகளே?!’’ கேட்டவன் பாய்ந்தான். பாய்ந்தவனைத் தடுத்தாள். போர் ஆரம்பித்தது. யுத்தத்துக்கு முடிவு ஏது?!

(முற்றும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்