அப்பா திமுகவுல முக்கியப் பொறுப்புல இருக்கார்... கெத்து காட்டுகிறார் மாரியம்மா -துஷாரா விஜயன்
முதலிரவில் மூச்சு முட்ட நடனம், ஆசான் அசந்த நேரம் கணவனுக்கு அசால்ட்டாக முத்தம், அதே கணவனை காப்பாற்றி காலில் விழ வைத்து ‘நானும் இல்லன்னா நீ நாதி இல்லாமதான் நிப்ப...’ என வசனம் பேசி அதட்டுவது... என ‘சார்பட்டா பரம்பரை’ மாரியம்மா வரும் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் இளைஞர்கள் ஹார்ட்டின் போட்டு அம்பு விடுகிறார்கள். ‘மாரியம்மா... மாரியம்மா...’ என்றே எல்லோராலும் அழைக்கப்படும் இவரது ஒரிஜினல் பெயர் துஷாரா விஜயன்.
அதென்ன துஷாரா?
என் பெயரைக் கேட்டு பலரும் ஏதோ மும்பை பொண்ணு, தமிழ் தெரியாதுன்னு நினைச்சு இங்கிலீஷ்ல பேசுறாங்க. ஆக்சுவலா நான் பத்து பக்கத்துக்கு வசனமே பேசுவேன். ஏன்னா சொந்த ஊரு திண்டுக்கல்தான்! அப்பா விஜயன், அம்மா பிரேமா. அப்பா திமுக கட்சில முக்கியப் பொறுப்புல இருக்கார். திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர். சாணார்பட்டி தெற்கு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர். ஆங். துஷாரான்னா மலைகளின் கடவுள்.
சினிமா ஆசை எங்கே, எப்படி உண்டானது?
சின்ன வயசிலேயே சினிமா ஆர்வம் அதிகம். குறிப்பா எனக்கு கைதட்டல், பாராட்டு ரொம்பப் பிடிக்கும். அப்படியே அந்த ஆசைய வீட்ல சொன்னேன். ஆரம்பத்திலே அடிக்காத குறைதான். அப்பறம் சரி ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிறேன்னு சொல்லி சென்னைக்கு வந்தேன். சினிமா நடிகை அப்படின்னாலே மாடலிங் மேப்தான் பெரும்பாலும் போடுவாங்க. நானும் ஃபேஷன் டிசைனர், மாடல், அப்புறம் சில ஃபேஷன் நிகழ்ச்சிகள், ஷார்ட் ஃபிலிம்ஸ், ஃபேஸ் ஆஃப் சென்னைனு பட்டம் வாங்கி அப்படியே ஆசைப்பட்ட சினிமாவுக்கு வந்துட்டேன். முதல் பட அனுபவத்தைப் பத்தி சொல்லுங்க..?
‘சர்கார்’ படத்துல காலேஜ் கேன்டீன் சீன் வருமில்லையா... அதுல ‘ஆமா’ அப்படீன்னு ஒரு டயலாக் சொல்லிட்டுப் போவேன். அப்புறம் ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்திலே ஜனனின்னு ஒரு ரோல் செய்திருப்பேன். அது முக்கியமான ரோல்.
‘சார்பட்டா பரம்பரை’ எப்படி அமைஞ்சது?
இப்ப நினைச்சாலும் கனவு மாதிரி இருக்கு. என் போட்டோவை டுவிட்டர்ல பார்த்துட்டு ஒரு நாள் எனக்கு பா.இரஞ்சித் சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு. ‘வாங்க ஒரு ஆடிஷன் இருக்கு’ன்னு கூப்பிட்டாங்க. ஆரம்பத்திலே நான் யாரோ ஃபிரண்ட்ஸ் பிராங்க் பண்றாங்கன்னு நினைச்சேன். அப்படியே விட்டுட்டேன்.
அடுத்த நாள் கொஞ்சம் லேட்டா எழுந்து மொபைலை பார்த்தா அவ்ளோ மிஸ்ட் கால். திரும்ப கூப்பிட்டா அந்த சைட் யாரோ... சாரோட அஸிஸ்டெண்ட்டா யாருன்னு தெரியல... ‘என்னம்மா உனக்கு அவ்ளோ திமிரா? கூப்பிட்டா வரமாட்டியா?’ன்னு செம டோஸ். ஐயய்யோ! உண்மைதான் போலன்னு அடிச்சுப் பிடிச்சுப் போயி நின்னா மாரியம்மாவுக்கான ஆடிஷன். லுக் டெஸ்ட், அவுட்டோர் டெஸ்ட் எல்லாமே நடந்துச்சு. இதோ இப்ப மாரியம்மாவா உங்க முன்னாடி நிற்கறேன்.
மறக்க முடியாத பாராட்டு யார் கிட்ட இருந்து கிடைச்சது?
ரஞ்சித் சார்தான். ‘பேய் மாதிரி நடிச்சிருக்கே’ன்னு சொன்னாரு. அப்புறம் அப்பா எதுவுமே சொல்லலை, அழுதுட்டார். ‘பெருமையா இருக்கு’ன்னு சொன்னார். திண்டுக்கல்ல இருந்து நிறைய பேர் போன்ல பாராட்டினாங்க. என் தம்பி சத்தமா கூட பேச மாட்டான். அவன் ஒரே வார்த்தையிலே ‘கெத்துதான் போ’னு சொன்னான். ஆர்யா சார்லாம் கொஞ்சமும் ஒரு புது ஹீரோயின்னு நினைக்காம, நான் சில இடங்கள்ல டேக் வாங்கினா கூட அதைப் பொருட்படுத்தாம ரொம்பவே ஃபிரெண்ட்லியா பழகினார்.
படத்திலே அத்தனை பேரும் நடிப்பு ஜாம்பவான்கள். அவங்கள்ல ஒருத்தர் கூட என்னை புது ஹீரோயினா நடத்தவே இல்லை. பை த வே, என்னை ரிஜெக்ட் செய்த அந்த பிரபல இயக்குநரை திரும்பப் பார்க்கணும்னு ஆசைப்படறேன். அவர் இப்ப என்ன நினைச்சுட்டு இருப்பார்னு யோசிக்கிறேன்!
யார் உங்களை நிராகரித்தது..?
பெயர் வேண்டாம். ஆனா, அவர்கிட்ட நேருக்கு நேரா ஒண்ணு கேட்கணும். ஏதோ கேரக்டர் கொடுத்து ஆடிஷன் அல்லது டெஸ்ட் ஏதாவது எடுத்து என்னை ரிஜெக்ட் செய்திருந்தா கூட நான் காயப்பட்டிருக்க மாட்டேன். சரி... அந்த கேரக்டருக்கு நாம செட்டாகலை போலனு நினைச்சிருப்பேன்.
ஆனா, பார்த்த உடனே ‘இந்தப் பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் எல்லாம் இல்ல... சைட் ரோல் வேணும்னா ஒரு கேரக்டர் இருக்கு... நடிக்க சொல்லு’ன்னு சொன்னார். அதனாலதான் அவரைப் பார்த்து ‘ஏன் சார் டெஸ்ட் கூட வைக்காம என்னை ரிஜெக்ட் செய்தீங்க’ன்னு கேட்க விரும்பறேன்.
எந்தக் காட்சி ரொம்ப சவாலா இருந்துச்சு?
ஆர்யா சாரை நைட்டு சிலர் கொலை செய்யப் பார்ப்பாங்க. அதிலே குழந்தையும் வெச்சிட்டு நான் சண்டை போடணும். குழந்தைக்கு ஆறு மாசமோ என்னவோதான். எனக்கு அந்த சீன் ரொம்ப சவாலா இருந்துச்சு. ‘சார்... நான் வேணும்னா பாதியிலே குழந்தைய யார் கிட்டயாவது கொடுக்கவா’ன்னு கேட்டேன். ரஞ்சித் சாரும் சரினு சொன்னார். அப்படிதான் ‘அக்கா இங்க வாக்கா குழந்தைய பிடி’ன்னு கொடுத்தனுப்புவேன். இப்போ நினைச்சாலும் அந்த சீன் புல்லரிக்கிது.
முதல் பிரேக்கா அமைஞ்ச ‘சார்பட்டா பரம்பரை’ தியேட்டரில் வெளியாகலையேன்னு வருத்தம் இருக்கா?
நிறையவே இருக்கு. என் சீன்ஸ்ல ஆடியன்ஸ் என்னல்லாம் ரியாக்ட் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்க முடியலை. என்ன செய்ய... சூழல் அப்படி. அதேநேரம் ஓடிடி மூலம் நிறைய மக்கள் கிட்ட படம் சேர்ந்திருக்கு. ஆனாலும் தியேட்டர் தியேட்டர்தானே. முன்னாடியே சொன்ன மாதிரி பேசிக்கலி எனக்கு கைதட்டல் அவ்வளவு பிடிக்கும். அதை மிஸ் பண்றேன்.அடுத்தடுத்த படங்கள் குறித்து சொல்லுங்களேன்! வசந்தபாலன் சார் டைரக்ஷன்ல ஒரு படம். அதுல அர்ஜுன் தாஸ் ஜோடியா நடிக்கிறேன். அந்தப் படத்திலே எனக்கு கேர்ள் நெக்ஸ்ட் டோர் கேரக்டர். சில புராஜெக்ட் பேசிட்டு இருக்காங்க.
இனிமே உங்க கிராஃப் எப்படி இருக்கும்?
நடிச்சா ஹீரோயின்னெல்லாம் கிடையாது. சின்ன ரோல் செய்தாலும் நச்சுன்னு நடிச்சுட்டு கைதட்டல் வாங்கிட்டு போகணும். மாஸ் ஹீரோயின் என்கிறதை விட நல்ல நடிகைங்கற பெயர் வாங்கறதுதான் கஷ்டம். அப்படியொரு பெயரை வாங்கணும்னுதான் என் ஆசை.
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|