தமிழ்நாடு 100 கலைஞர் 60!
சென்னை மாகாணமாக முன்பு தமிழ்நாடு இருந்தபோது, முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை 1921ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த வகையில், தமிழக சட்டசபைக்கு இது நூற்றாண்டு விழாவாகும். இந்த விழாவுடன், தமிழக முதல் அமைச்சராக 5 முறையும், எம்எல்ஏவாக 13 முறையும் இருந்த மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.
மக்களாட்சி என்ற தத்துவத்தின் முதல் இந்திய செயல்வடிவம் என்று 1921ம் ஆண்டின் சட்டமன்றத்தைக் கூறலாம். அவ்வாறான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவை என்பது தமிழகத்தில் மட்டும் கூடவில்லை. இந்திய அளவிலான ஓர் அவையும், தமிழகம் தவிர மேலும் எட்டு மாகாணங்களின் அவைகளும் உருவாயின.
ஆனால், தமிழக சட்டமன்றம் மட்டுமே தன் வரலாற்றுத் தொடர்ச்சியை உணர்ந்து நூற்றாண்டு விழா எடுத்தது. 1920ல் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தெளிவான ஒரு சித்தாந்தத்துடன் தன்னை வடிவமைத்துக்கொண்ட நீதிக்கட்சி என்ற ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தது. நீதிக்கட்சி அரசு 1921ம் ஆண்டே முதன்முறையாக கம்யூனல் ஜிஓ என்ற வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தாலும், 1928ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தாலும், அதற்கான அச்சாரம் 1921ம் ஆண்டிலேயே இடப்பட்டுவிட்டது. அதேபோல பெண்களுக்கு வாக்குரிமையும், பிரதிநிதியாகும் உரிமையும் உறுதி செய்யப்பட்டது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி முதல் சட்டமன்ற பெண் உறுப்பினர் ஆனார்.
தமிழக சட்டமன்றத்தின் நூறாண்டுகளில் அறுபதாண்டுக் காலம் அதில் இடையறாது பங்கேற்றவர் கலைஞர். 13 முறை சட்டப்பேரவை உறுப்பினர், ஒரு முறை சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர், பொதுப்பணி - போக்குவரத்துத் துறை அமைச்சர், 5 முறை முதல்வர், 19 ஆண்டுகால ஆட்சி நிர்வாகம்... என ஒன்றிய, சட்டமன்ற வரலாற்றில் கிட்டநெருங்க முடியாத சாதனையாளர்.
1957ம் ஆண்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வென்று சட்டமன்றத்தில் நுழைந்த அவர், அதன் பிறகு நடந்த எந்த தேர்தலிலும் தோல்வியைச் சந்திக்கவில்லை. இது மட்டும் அவரது பெருமையல்ல. நீதிக்கட்சி எந்த அதிகாரப் பரவலைக் கொள்கையாகக் கொண்டு தொடங்கப்பட்டதோ, அந்த சமூக நீதிப் பார்வையை தமிழக அரசியலின் பொதுப்புத்தியாக மாற்றியதில் அளப்பெரும் பங்காற்றியவர் கலைஞர் என்றால் மிகையாகாது.
அதனால் சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் அவருடைய திருவுருவப் படத்தை சட்டமன்றத்தில் திறந்துவைத்தது சாலப் பொருத்தம். அதிலும் இந்தியக் குடியரசுத் தலைவர் அதைத் திறந்துவைத்தது, இது தமிழ்நாட்டின் தனி வரலாறல்ல, இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத தனித்துவமான அங்கம் என்பதை உணர்த்துகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை 16 தலைவர்களின் திருவுருவப் படங்கள் திறக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் பி.சுப்பராயன் படம் திறக்கப்பட்டது. பின்னர், நாடு சுதந்திரம் அடைந்தபோது ஆட்சியிலிருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் படம் திறக்கப்பட்டது. மகாத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா, காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத், முகமது இஸ்மாயில், ராமசாமி படையாச்சியார், வஉசி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார். காமராஜரின் திருவுருவப் படத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி திறந்துவைத்தார். இப்போது கலைஞரின் திருவுருவப் படத்தை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார். அந்தவகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்திய குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட்ட 2வது (காமராஜருக்குப்பிறகு) தலைவரின் திருவுருவப் படம் கலைஞருடையதுதான்!
|