வைக்கோல் காலணி



நூறு வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் வாழ்ந்த மக்களிடம் வைக்கோலினால் ஆன காலணிகளை அணியும் பழக்கம் இருந்தது. இதை ஒரு மரபாகவே பின்பற்றி வந்தனர்.

நெல் வைக்கோலை கைகளால் பின்னி உருவாக்கப்படும் இந்த காலணிகளின் எடை மிகவும் குறைவு. தவிர, பாதத்தின் தோல்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதது இதன் சிறப்பு.
தோலினால் ஆன காலணிகளைப் போல வைக்கோல் காலணியும் வெயில், முட்கள், கற்களிலிருந்து பாதங்களைப் பாதுகாக்கிறது.  தோல், ரப்பர் போன்ற மெட்டீரியல்களில் காலணிகள் வர, வைக்கோல் காலணிக்கான மவுசு குறையத் தொடங்கியது. நாளடைவில் அதன் சுவடே காணாமல் போனது.

இந்நிலையில் வடக்கு காஷ்மீரில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்துவரும் அப்துல் சமத் என்பவர் வைக்கோலில் காலணிகளைச் செய்யத் தொடங்கியிருக்கிறார். இந்தத் தலை
முறைக்கு வைக்கோல் காலணியை அறிமுகம் செய்யும் நோக்கில் இந்தப் பணியை ஆரம்பித்திருக்கும் அப்துலின் வயது 110.  

த.சக்திவேல்