எடிட்டிங் நல்லா இருக்குனு சொன்னாலே கதையை மீறி இவர் பண்ணி இருக்கிறார்னு அர்த்தம்!
“படத்தொகுப்பு என்பது கதையை கெடுக்கக் கூடாது. ஆடியன்ஸுக்கு போர் அடிக்கிற மாதிரி பண்ணக் கூடாது. குறிப்பா தனித்து தெரியக் கூடாது...” என்கிறார் படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார். தேசிய விருது பெற்ற திரைப்படமான ‘குற்றம் கடிதல்’ தொடங்கி சமீபத்தில் ‘சோனி லிவ்’வில் வெளியாகியுள்ள ‘திட்டம் இரண்டு’ வரை இருபது படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்கிறார். கிராஃபிக்ஸ் படிக்கத்தான் ஆசைப்பட்டேன். 2001ல் அதுகுறித்து விசாரிக்கும்போது ஒரு கோர்ஸ் ஐந்தாறு லட்சம் ஆகும்னு சொன்னாங்க. அது நமக்கு சரிவராது என்று கிராஃபிக்ஸ் துறையிலிருந்த நண்பரை அணுகினேன். அவரும் சில விஷயங்கள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், சினிமா உதவி இயக்குநர்கள், ‘எடிட்டர் ரெஃபரன்ஸ் அனுப்புங்க’னு கேட்பாங்க. அதைப் பார்த்த நான், இயக்குநரைவிட எடிட்டர்தான் பெரிய ஆள் என்று நினைத்தேன். ஆனால், நண்பரோ ‘இயக்குநர்தான் இறுதியில் எல்லாம் முடிவு செய்வார். நாம் கிராஃபிக் செய்தது சரியாக அந்த நேரத்திற்குள் வருகிறதா என்பதை பார்ப்பதற்காக கேட்கிறார்கள்’ என்றார். இருந்தாலும் எடிட்டிங் மீது ஏதோ ஒரு ஈடுபாடு உண்டானது. அதைப்பற்றி அதிகமாக யோசித்தேன். நண்பரிடமும் பகிர்ந்தேன். அவரும் அடிப் படைகளைக் கற்றுக் கொடுத்தார்.
அதை வைத்து எடிட்டர் லெனின் சாரிடம் சேர்வதற்கு ஒரு வருடத்திற்கு மேல் முயற்சித்தேன். கிடைக்கவில்லை. அதே நேரத்தில் விளம்பரப்படங்கள் எடிட் செய்யும் அதி தீபனிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவரிடம் நிறைய கற்றேன்.ஒரு நாள் அதி தீபன், ‘நாளைக்கு காலையில ஒருத்தர் வரார்.
நால்ற, ஐந்தற மணிக்கெல்லாம் வந்திடுவார். எதுக்கும் நால்ற மணிக்கெல்லாம் வந்திடு’னு சொன்னார். நானும் காலை நாலரை மணிக்கெல்லாம் போனேன். அங்கு ஒருவர் ஜோல்னா பை மாட்டிட்டு வெள்ளை சட்டை, வெள்ளை தாடியோடு சட்டை காலர் எல்லாம் கிழிந்து ‘வாழ்க வளமுடன்’னு சொல்லி, ‘நான்தான் லெனின்’ என்றார். லெனின் சாரை போட்டோக்களில் கருப்பு தாடி, மீசையோடு பார்த்திருக்கிறேன். இந்த கெட்டப்பில் பார்த்ததில்லை. ஏதோ என் அதிர்ஷ்டம் அவருடன் ஒரு படம் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் முடியும் சமயத்தில், ‘நீ சினிமாவில்தானே எடிட்டர் ஆகணும்னு இருக்க, என் கூட வந்துரு’னு கூப்பிட்டார். இதுக்காகத்தானே இவ்வளவு நாள் காத்திருந்தேன்! ஏதும் யோசிக்காமல் உடனே அவருடைய மாணவனானேன். அவரின் உதவியாளராக சில படங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், எடிட்டர் நண்பர் ஒருவர் ‘நான் பிசியா இருக்கேன். ஓர் ஆவணப்படம் எடிட் பண்ணணும். நீ போய் பண்ணிக்கொடு’னு சொன்னார்.
அவர் சொன்ன ‘நளந்தா’ பவுண்டேஷனில் போய் சந்தித்த நபர் ‘V 1’ திரைப்படத்தின் இயக்குநர் பாவல் நவகீதன். ஆவணப்படத்தை முடித்தோம். அடுத்து அவருடனே பல குறும்படங்களில் இணைந்தேன். 2007ம் ஆண்டிலிருந்து பாவல் திரைப்படம் இயக்க முயற்சித்தார். அப்போதும் என்னைத்தான் எடிட்டராக இணைத்துக் கொள்வார். ஏதோ ஒரு காரணத்துக்காக 40 தயாரிப்பாளர்களுக்கு மேல் அவருக்கு தள்ளிப் போனது.
அந்த நேரத்தில்தான் லெனின் சார் அழைத்து, ‘களவாடிய பொழுதுகள்’ படத்தை ‘நீ எடிட் பண்ணு. நான் ஃபைனல் பண்றேன்’ என்றார். பெரிய நட்சத்திரங்கள் இருந்தாலும், படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகே வெளியானது. இப்படியே போய்க் கொண்டிருந்த சமயத்தில்தான் பாவல் மூலமாக நளந்தாவில் அறிமுக மான பிரம்மா சாரின் ‘குற்றம் கடிதல்’ படத்துக்கு எடிட் செய்ய வாய்ப்பு அமைந்தது. அதற்கு முன் பிரம்மா சாருக்கும் குறும்படங்கள் எடிட் செய்திருக்கிறேன். ‘குற்றம் கடிதல்’ எல்லோருக்கும் ஒரு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதில் என் பெயரும் வெளியே தெரிய ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’, ‘V 1’, ‘ஹவுஸ் ஓனர்’ ‘திட்டம் இரண்டு’... என இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பங்கெடுத்துள்ளேன். லெனின் சாரின் மாணவன் என்பதால் பொதுவாக ஆஃப் பீட் படங்கள், திரைப்பட விழாக்களில் பங்கெடுக்கும் படங்கள் என அமைந்து வருகிறது. அந்த நம்பிக்கையை நானும் காப்பாற்றுகிறேன் என்று நம்புகிறேன்.
அந்த வகையில் இப்போது ‘நீலம்’ புரொடக்ஷன் தயாரித்துள்ள ‘சேத்துமான்’, சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து வருகிறது. இதற்கடுத்து வேலை செய்து கொண்டிருக்கும் இரு படங்களும் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டதாக இருக்கிறது. ‘ரூம்’ என்கிற படத்தில், ஒரு பாத்ரூமில் இரண்டு நபர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அங்கு நடக்கும் விஷயங்கள்தான் படம். இரண்டு மணி நேரம் ஒரே அறையில் இருப்பதால் போர் அடிக்காமல், எங்கேஜிங்காக எடிட் செய்தது சவாலாக அமைந்தது.
கதையை மீறி எடிட் செய்யாமல் பார்த்துக் கொள்கிறேன். எடிட்டிங் நல்லா இருக்குனு சொன்னாலே கதையை மீறி இவர் பண்ணியிருக்கிறார் என்று அர்த்தம். எனவே, ஓவர் மேக்கப்பை தவிர்க்கிறேன். இதுவரை ஆஃப் பீட் படங்கள்தான் வேலை பார்த்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் ஒரு வழக்கு இருக்கிறது.
ஒரு நடிகர், ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் பொருந்தினால், இயக்குநர் அதுபோன்ற கதாபாத்திரத்தை எழுதும்போது அந்த நடிகரை மனதில் வைத்துக்கொள்கிறார். அதேபோல்தான் தொழில் நுட்பங்களிலும் இருக்கிறது. அது மாறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனெனில் கமர்ஷியலான படங்களும் எடிட் செய்ய விரும்புகிறேன்.
அன்னம் அரசு
|