அனுக்ரகீதன் அந்தோணி
வித்தியாசமான திரைப்பட அனுபவம் வேண்டுமா? உங்களுக்கான நல்ல சாய்ஸ், ‘அனுக்ரகீதன் அந்தோணி’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது இந்த மலையாளப்படம். பொறுப்பற்ற இளைஞன், அந்தோணி. அப்பாவுக்கு அவனை சுத்தமாகப் பிடிக்காது. அந்தோணிக்குப் பதிலாக ரூபி, ரூனி என்ற இரண்டு நாய்க்குட்டிகளை வாங்கி வளர்க்கிறார். அப்பாவின் இந்த செயல் அந்தோணியை எரிச்சலடைய வைக்கிறது. அப்பாவுக்குத் தெரியாமல் ரூபியை விற்றுவிடுகிறான். இது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் உள்ள விரிசலைப் பெரிதாக்குகிறது. இச்சூழலில் சஞ்சனா என்ற பெண் மீது காதல் வயப்படுகிறான் அந்தோணி.
சஞ்சனாவிற்கும் அந்தோணி மீது காதல் மலர்கிறது. தன் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே ஒரு விபத்தில் அடிபட்டு அந்தோணி இறந்துவிடுகிறான். தான், இறந்ததையும், தன்னுடைய காதலையும் சஞ்சனாவிடம் தெரிவிப்பதற்காக ஆவியாக வருகிறான் அந்தோணி. அந்த ஆவியால் யாருடனும் பேச முடியாது; தொட முடியாது.
நாய் மற்றும் இறந்துபோனவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும். 7 நாட்கள் பூமியில் இருக்கும். இந்நிலையில் அந்தோணியின் ஆவி எப்படி தன் காதலை வெளிப்படுத்துகிறது என்பதே அமானுஷ்ய திரைக்கதை.மனதை நெகிழ்விக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் பிரின்ஸ் ஜாய்.
|