கடல் ராட்சசன்
விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் கண்டுகளிக்க அருமையான சாய்ஸ், ‘லூக்கா’. ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது இந்த அனிமேஷன் படம். கடல் ராட்சசன் இனத்தைச் சேர்ந்த சிறுவன் லூக்கா. மனிதர்களின் கண்களில் பட்டால் லூக்காவை வேட்டையாடி விடுவார்கள் என்று அவனை பொத்திப் பொத்தி பாதுகாக்கிறார்கள் பெற்றோர்கள்.
ஆனால், லூக்காவோ தண்ணீரை விட்டு வெளியே போய் உலகை தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஒரு நாள் பெற்றோருக்குத் தெரியாமல் கரைக்கு வந்துவிடுகிறான். அவனுடைய உடலில் ஈரம் காய்ந்தவுடன் மனிதனாகிவிடுகிறான். கரையோரத்தில் ஆல்பெர்ட்டோ என்ற நண்பன் கிடைக்கிறான். ஆல்பெர்ட்டோவும் கடல் ராட்சசனாக இருந்து மனிதனானவன். இருவருக்கும் வெஸ்பா ஸ்கூட்டரை வாங்கி ஓட்ட வேண்டும் என்று கனவு. அதனால் மனிதர்கள் வாழும் ஒரு ஊருக்குச் செல்கின்றனர். அவர்களை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு சொட்டு நீர் உடலின் மீது பட்டாலே அவர்கள் மீண்டும் கடல் ராட்சசன் ஆகிவிடுகிறார்கள். இந்நிலையில் தங்களின் கனவை அவர்கள் எப்படி நனவாக்குகிறார்கள் என்பதே அட்டகாசமான திரைக்கதை.அழகான ஓவியங்களைப் போல மிளிரும் காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கடலுக்குள் நம்மை இழுத்துக்கொள்கிறது கதை. இதன் இயக்குநர் என்ரிக்கோ கஸரோசா.
|