சிறுகதை- நகரும் இரவு
நவம்பர் மாத இரவு. அதீத இருளும் குளிருமாக இருந்தது. எந்த நேரமும் மழை வரலாம் என்றிருந்த வானத்தில் அருகில் மின்னலும், தூரமாய் இடிச் சத்தமும் கேட்டது. காலையில் ஆரம்பித்த மழை. மதியும், குருவும் லோகநாதனுக்காகக் காத்திருந்தார்கள்.
காலையிலிருந்தே மழையில் நனைந்தபடி அவனைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவனது அறைக்குப் போனார்கள். அவன் சாப்பிடப் போயிருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது. அந்தப் பக்கத்து ஹோட்டலிலெல்லாம் தேடினார்கள்.அவர்களையும், லோகுவையும் தெரிந்த ஒருவன் இப்போதுதான் சாப்பிட்டு விட்டு ஆட்டோவில் ஏறிப் போனான் என்று சொன்னான். அவனுக்கு இந்த மழையில் எங்கு போயிருப்பான் என்று தெரியவில்லை.
ஹோட்டல் வாசலில் நின்று மழையையே வெறித்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் மீண்டும் பலரிடம் விசாரித்தபோது, அவன் கம்பெனிக்கு சம்பளம் வாங்கப் போயிருப்பதாகச் சொன்னார்கள். முகவரியை விசாரித்து அங்கு போனபோது அப்போதுதான் அவன் கிளம்பிப் போயிருந்தான். மீண்டும் மழையில் நனைந்து திரும்பி வந்தபோது, கதவைத் திறந்த பக்கத்து அறைக்காரன், இப்போதுதான் லோகு சினிமாவிற்குப் போனான் என்று சொன்னான். ஓடினார்கள். பிடிக்க முடியவில்லை. நகர முடியாத மழை. தியேட்டருக்கு வெளியே இருந்த கவுண்டருக்குள் படம் முடியும்வரை மழையில் காத்திருந்து அவனைப் பார்த்தார்கள்.
‘’கொஞ்சம் இரு...’’ என்று குருவிடம் சொல்லிவிட்டு, மதி லோகுவோடு படியேறி மாடிக்குப் போனான். திரும்பி வந்தவன், போகலாம் என்று அவசரப் படுத்தியபோது சைக்கிள் பஞ்சராகியிருந்தது. அவ்வளவாகப் பேசவில்லை. அமைதியாக உருட்டிக் கொண்டே நடந்தார்கள். தெரு விளக்குகளில் மின்சாரம் இல்லை. மழை விட்டிருந்த சாலைகளில் பள்ளம் தேடி நீர் ஓடிற்று. அவர்கள் குடியிருக்கும் தெருவுக்குள் நுழைந்த மதியும் , குருவும் தூரத்திலிருந்தே கிழவனைப் பார்த்துவிட்டார்கள். வாசலில் கிழக்குப் பார்த்து உட்கார்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்தான். தீக்கங்கு ஒளிர்ந்து ஒளிர்ந்து அடங்கியது.
‘‘திரும்பிப் போயிடலாமா?” ‘‘எங்க போக... என்னால இனிமே நடக்க முடியாது...” ‘‘கிழவனுக்கு என்ன பதில் சொல்றது?’’ ‘‘அதப் பத்தி கவலைப்படாத...’’ என்றான் மதி. அப்போதுதான் குணாவுக்கு கொஞ்சம் நிம்மதி.அவர்கள் குடியிருக்கும் அறைக்குச் சொந்தக்காரனான கிழவன் பெரும் குடிகாரன். குடிப்பான். சாப்பிடுவான். தூங்குவான். மீண்டும் குடித்துச் சாப்பிடுவான். தூக்கம் வராவிட்டால் வாசலில் உட்கார்ந்து உலகின் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் மொத்தமாகச் சேர்த்து யாரையாவது திட்டுவான்.
அரசியல், சினிமா எல்லா ஆட்கள் மீதும் அவனுக்கு குறை சொல்ல எதாவது விஷயங்கள் இருந்தன. மனைவிக் கிழவியும் அவனிடமிருந்து இத்தனை வருட வாழ்வில் அத்தனை வார்த்தைகளையும் கற்றிருந்தாள். ‘டீ போட இவ்வளவு நேரமாடீ’ என்று கெட்ட வார்த்தையில் அவன் கத்தினால் “கொஞ்சம் பொறுடா. குடிச்சுட்டு எங்க போயி கிழிக்கப் போற...’’ என்று பதிலுக்கு அவள் கத்துவதோடு துவங்கும் அவர்களின் காலை. மதியத்தில் இன்னும் உக்கிரமாகி இரவு அவன் குடித்து விட்டு வந்து அடிதடியில் முடியும்.
கிழவன் மாடியில் எட்டு அறைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தான். அதில் ஒன்றில் மதியும் குருவும் இருந்தார்கள். இன்னொன்றில் மனைவி சொந்த ஊரிலிருக்கும் அரசு ஊழியர். சிலவற்றில் குடும்பங்கள். அனைவரும் முதல் வாரத்தில் வாடகை கொடுப்பர். குருவுக்கும், மதிக்கும் வாடகை பாக்கி. மூன்றாவது மாதம் நெருங்கப் போகிறது.
கிழவன் காலையிலேயே எச்சரித்து விட்டான் ‘‘இன்னிக்கி துட்டு வந்தா வூட்டாண்ட வாங்க. இல்லன்னா வராதீங்க. எத்தினி மணி ஆனாலும் நா வாசல்லயே இருப்பேன்...’’ சொன்னபடி காத்துக்கொண்டு இருக்கிறான். குடித்திருப்பான். கிழவியோடு சண்டை போட்டுத் தீர்த்திருப்பான். போதை தீர்ந்து கோரப்பசியாக, கோபமாக இருப்பான். பீடி வலிக்கும் வேகமே தெரிகிறது. மாட்டினால் கத்துவான். கிழவியும் தூக்கம் கலைந்து எழுந்து வருவாள். கோபம் வரும். சண்டை வரும். என்ன வேணாலும் நடக்கலாம். ரூமிற்குள் போக எந்த உத்தரவாதமும் இல்லை. யோசிக்கும் போதே கால் வலிக்க, குரு நடையை நிறுத்தினான்.
மதி ‘‘வாடா...’’ என்று முன்னே நடந்தான். ‘‘எப்படிடா சமாளிப்ப?’’ குரு மீண்டும் கேட்டான். ‘‘பணத்த குடுத்துடுவோம்...’’ ‘‘பணம்?’’
‘‘லோகுகிட்ட வாங்கிட்டு வந்தேன்...’’ ‘‘எவ்வளவு?’’ ‘‘ரெண்டாயிரம்...’’ ‘‘ரெண்டு ஆயிரமா?’’ ‘‘ஆமா...’’ ‘‘அவங்கிட்ட ஏதுடா அவ்வளவு பணம்? ஆபீஸ்ல வேற பணம் தரலன்னு சொன்னான்...’’ ‘‘ஏன் தேவையில்லாம பேசிட்டு இருக்க..?”
‘‘ஒரு நிமிஷம் இருன்னு அவன தனியா கூட்டிட்டுப் போன. பணம் வாங்கினத சொல்லவே இல்ல. சாப்பிட்டிருக்கலாமில்ல. தியேட்டர் வாசல்ல கடை இருந்துச்சே. காலைல இருந்து சாப்பிடாம சுத்திக்கிட்டு இருக்கோம்...’’ மதி அமைதியாக இருந்தான்.
‘‘காசு இருக்குன்னு சொன்னதும் உனக்குப் பசிக்குதில்ல?’’ ‘‘உனக்குப் பசிக்கலையா?’’ ‘‘பசிக்குது. முதல்ல பிரச்னைய முடிப்போம்...’’
‘‘எனக்கு ஆச்சர்யமா இருக்குடா. எத நம்பிடா காசு குடுத்தான், எப்ப திருப்பித் தரேன்னு சொன்ன? உனக்கும் வேலை இல்ல எனக்கும் வேலை இல்ல. எப்ப ஷூட்டிங் வரும்னு தெரியல...” ‘‘நீ அதப் பத்தி கவலப்படாத...’’ ‘‘ஆச்சர்யமா இருக்குடா...’’ ‘‘உங்கம்மாவா எங்கம்மாவா... சினிமாடா! எது வேணா எப்ப வேணா நடக்கும்...’’ இருவரும் அருகே வந்தார்கள்.
கிழவன் கோபமாக எழுந்து நின்றான். ‘‘ஐயா சாப்பிட்டாச்சா?’’ ‘‘ஏன்? துன்னலன்னா வாங்கித்தரப் போறியா?’’ ‘‘தருவேன். இந்த நேரத்ல கட திறந்திருக்காது...’’ ‘‘வாய்க்கு ஒண்ணும் குறச்சல் இல்ல. துட்டு கொண்டாந்தியா இல்லையா?’’
‘‘இருக்கு...” ‘‘எவ்வளவு?’’ ‘‘ரெண்டாயிரம்...’’ ‘‘குடுத்துட்டு உள்ள போ...’’ குரு மதியைப் பார்த்தான். ‘‘காலைல தரட்டுமா?’’ ‘‘ஏன் இன்னும் ரெண்டு நாளு கழிச்சு குடேன். அடீங்...’’
கிழவன் கெட்ட வார்த்தையை ஆரம்பிப்பதற்குள் மதி பேண்ட் பாக்கெட்டில் இருந்து நனைந்து விடாமல் பாதுகாப்பாக பாலிதீன் கவரில் சுற்றி வைத்திருந்த ரூபாய்த்தாளை எடுத்தான். கொடுத்தான். கிழவன் லைட்டைப் போட்டான். வெளிச்சத்தில் பார்த்தான்.
‘‘ரெண்டாயிரம் மாதிரி இருக்கு...’’ ‘‘ஆமா...’’ ‘‘போங்க. அடுத்த மாசம் கரெக்ட்டா வந்துடணும். இல்லன்னா பெட்டிய தூக்கி தூர கடாசிடுவேன்...’’ கிழவன் கெத்து குறையாமல் பேசினான். மீண்டும் பீடியைப் பற்றவைத்துக் கொண்டான். நிதானமாக இழுத்து ஊதினான்.
‘‘குடுத்துடுவோம்...’’ மதி முன்னால் போக, பின்னால் வந்த குரு சொல்லிக் கொண்டே வந்தான்.இருவரும் அறைக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டார்கள். குருவுக்கு கால் வலித்தது. அன்று அதிகாலையிலேயே அவர்கள் கிளம்பிச் சென்றிருந்தார்கள். தெரிந்தவர்களையெல்லாம் பார்த்தார்கள். கடன் கேட்டார்கள். அவர்கள் பணியாற்றிய படம் பாதியில் நின்றுவிட்டதால் ஏற்பட்ட கஷ்டத்தைச் சொன்னார்கள். அவர்கள் கஷ்டத்தைக்கேட்ட எவரிடமும் பணமில்லை. அவர்களும் பதிலுக்கு தங்கள் கஷ்டங்களைச் சொன்னார்கள். டீயும், ஒரு சில பட்டர் பிஸ்கட்டும் மட்டுமே கிடைத்தன.
மதி திடீரென்றுதான் லோகநாதனைப் பார்க்கலாம் என்று சொன்னான். முதலிலேயே அவனைப் பார்த்திருந்தால் அலைந்திருக்கவேண்டியதில்லை. குரு தண்ணீர் எடுத்துக் குடித்தான்.
மதி யோசனையிலேயே இருந்தான். ‘‘படுடா...’’ என்றான் குரு. ‘‘நாளைய பத்தி யோசிக்கறேன்..’’ என்றான் மதி. ‘‘வாடகைதான் குடுத்தாச்சே. அதுதான் பெரிய தலைவலி...’’ ‘‘அந்த 2000 ரூபா நிஜ பணமில்ல குரு...’’ ‘‘என்ன மதி சொல்ற?’’ படுத்திருந்த குரு அதிர்ச்சியோடு எழுந்து உட்கார்ந்தான்.
‘‘‘காசு பணம் துட்டு’ன்னு பாட்டு வருமில்ல... அதுக்கு அச்சடிச்ச காகித பணம். ஷூட்டிங் முடிஞ்சதும் எரிக்கச் சொல்லியிருக்காரு ஆர்ட் டைரக்டரு. அதுல ஒரு கட்ட நம்ம நண்பன் லோகு எடுத்து வச்சிருந்தான். ஒரு தடவ சொல்லியிருந்தான். அதுல ஒண்ணத்தான் உருவிட்டு வந்தேன். என்ன பண்றது... வாடகை கொடுக்காட்டி கிழவன் விட மாட்டான். மழை இன்னும் ரெண்டு மூணு நாள் இருக்கும்போலருக்கு. குளிர்ல எங்க போயி படுக்கறது..?’’ மதி நிதானமாகச் சொன்னான்.‘‘காலைல டாஸ்மாக் திறந்ததும் கிழவன் காச எடுத்துக்கிட்டுப் போவான். நாம மாட்டிக்குவோம்...’’ குரு பயந்தான்.
‘‘மாட்டோம்...’’ ‘‘காலைல இது நடக்கப் போகுதா இல்லையா பாரு...’’ ‘‘நடக்காது...’’ ‘‘நடக்கும்...’’ ‘‘சத்தியமா நடக்காது...’’ ‘‘நடந்துட்டா என்னடா பண்றது?’’ ‘‘நடக்காதுடா. சொன்னா கேளு...’’
‘‘எப்படி நடக்காதுன்னு சொல்ற?’’ ‘‘நாள, நாளை மறு நாள் டாஸ்மாக் லீவு...’’ ‘‘வேற எங்கயாவது எதாவது வாங்கப் போனான்னா?’’ ‘‘கிழவன் ரூபா நோட்ட பாத்த ஆர்வத்த பாத்தியா? அவனுக்கு அத செலவு பண்ண மனசே வராது...’’
‘‘ஒருவேளை கிழவி மளிகை சாமான் வாங்க பணத்த வாங்கிட்டுப் போனா? எலக்ட்ரிக் பில், மெடிக்கல் ஸ்டோர் எங்கயாச்சும் எடுத்துட்டுப் போனா?’’ மதி குருவைப் பார்த்தான்.‘‘என்ன வேணாலும் நடக்கட்டும். இப்ப தூங்கு. கால் வலிக்குதுன்னு சொன்னல்ல. எனக்கு வலிக்காதா? நானும்தான அலஞ்சேன். நாளைக்கு யார பாக்கறது எப்படி பணம் பொரட்டறதுன்னு யோசி. அத விட்டுட்டு பயந்து சாகாத...’’இருவரும் பொழுது விடியப்போகும் வேளையில் தூங்கத் துவங்கினார்கள்.
- ஜெகநாத் நடராஜன்
|