ரத்த மகுடம்-158



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘பத்ம வியூகம் என்னும் சக்கர வியூகத்தை அமைக்கப் போவதாக சாளுக்கிய மன்னர் தெரிவித்தாரா..?’’கேட்ட கரிகாலனை இமைகள் விரிய பார்த்த சிவகாமி பதிலேதும் சொல்லாமல் அவன் விரிந்த மார்பில் தன் முகத்தைப் புதைத்தாள்.ஆதரவாக அவள் குழலைக் கோதினான் கரிகாலன்.
அடர் வனங்களின் மரங்களுக்குக் கீழே படைகள் உறங்கிக் கொண்டிருந்தன. வீரர்கள் சுற்றிச் சுற்றி வந்து காவல் புரிந்துகொண்டிருப்பதற்கு அறிகுறியாக அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சிவகாமியின் உச்சந்தலையைத் தடவியபடியே தன் மார்பில் ஒன்றியிருந்த அவளது முகத்தை நிமிர்த்தினான்.

கூடாரத்தின் ஈசான்ய மூலையில் எரிந்துகொண்டிருந்த அகல் விளக்கின் வழியே அவளது கருவிழிகள் தத்தளிப்பதை அவனால் காண முடிந்தது.குனிந்து தன் நாவின் நுனியால் அவளது மூடிய இமைகளில் கோடு கிழித்தான். ‘‘சக்கர வியூகத்தைத்தான் சாளுக்கிய மன்னர் வகுக்கப் போகிறார் என்பதை எப்படி அறிந்தீர்கள்..?’’‘‘அவரது நிலையில் நான் இருந்தால் என்ன செய்வேன் என்று நினைத்துப் பார்த்தேன். பதில் கிடைத்தது...’’ ‘‘பத்ம வியூகத்தை உடைப்பது கடினமல்லவா..?’’ ‘‘அர்ஜுனனுக்கல்ல...’’ தன் உதட்டை இறக்கி அவளது உதட்டைக் கவ்வினான். உமிழ்நீர்கள் கலந்த பின் சிவகாமி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.  

அவளது இரு கன்னங்களையும் தன்னிரு கைகளிலும் ஏந்தினான். ‘‘ஒருவேளை அபிமன்யுவாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறாயா..?’’
தன் கீழ் உதட்டைக் கடித்தாள் சிவகாமி.‘‘இறக்க வேண்டியதுதான்... போரில் மடிவதைத் தவிர வேறென்ன பெருமை வீரனுக்குத் தேவை..?’’இமைக்காமல் அவனைப் பார்த்தாள்.சிவகாமியை அள்ளி அணைத்த கரிகாலன் தன் கரங்களால் அவளது பின் எழுச்சிகளைக் கவ்வி அவளை அப்படியே தூக்கினான். ‘‘சிவகாமி... வெற்றி தோல்வி குறித்து என்றுமே சத்ரியன் கவலைப்பட மாட்டான்... அவன் கடமை போர் புரிவதுதான். உயிர்த் துடிப்பின் இறுதிக் கணம் வரை களத்தில் நிற்பதே சத்ரிய தர்மம்... இதையெல்லாம் அறிந்த நீ இப்படிக் கலங்கலாமா..?’’

குனிந்து அவளது கொங்கைகளுக்கு இடையில் தன் முகத்தைப் பதித்தான். சிவகாமி நெகிழ்ந்தாள். அவளது ஆடைகளும் நெகிழ்ந்தன.உயர்த்திய வண்ணமே கொங்கைகளுக்கு இடையில் தவழ்ந்த தன் உதடுகளை சற்றே இறக்கி அவளது நாபிக் கமலத்தை நெருங்கியவன், சட்டென அவளை அப்படியே மண் தரையில் கிடத்தி அருகில் அமர்ந்தான். ‘‘சிவகாமி... இங்கே பார்...’’  அவளது நாபியைச் சுற்றி தன் ஆள்காட்டி விரலால் கோடு இழுத்தான். ‘‘இதுதான் சக்கர வியூகம் என்னும் பத்ம வியூகம்...

குருேக்ஷத்திரப் போர் உக்கிரத்துடன் நடந்து கொண்டிருக்கிறது... கவுரவர்களுக்கு சேதம் அதிகமானது. என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் சக்கர வியூகத்தில் அமைத்தார்கள். இதன் வழியாக பாண்டவர்களில் மூத்தவரான தர்மரை சிறைப் பிடிக்கலாம்... யுதிஷ்டிரர் சிறைப்பட்டால் பாண்டவர் சேனை சரணடையும்... போரும் நிறுத்தப்படும் என கணக்கிட்டார்கள்.

ஆனால், கவுரவர்கள் மறந்தது பாண்டவர்களுக்கு மத்தியில் அர்ஜுனன் இருக்கிறான் என்பதை. சக்கர வியூகத்தைப் பிளந்து தன் அண்ணனை அர்ஜுனன் காப்பாற்றினான்... ஆனால், அதே பத்ம வியூகத்தில் பின்னொரு சமயம் அபிமன்யு சிக்கி மாண்டான். கொதித்து எழுந்த அர்ஜுனன் இம்முறை சக்கர வியூகத்தை முற்றிலு மாகத் தகர்த்து கவுரவர்களைப் பழிவாங்கினான்.

இது மகாபாரதக் கதை. இதன் வழியாக நமக்குத் தெரிய வருவது என்ன..? கவுரவர்கள் மூன்று முறை சக்கர வியூகத்தை வகுத்தார்கள்... இருமுறை அர்ஜுனன் அதைத் தகர்த்தான் என்பதைத்தானே..?

ஆக, யாராலும் பிளக்க முடியாத வியூகம் என பத்ம வியூகத்தைக் கருத முடியாது. புத்திக் கூர்மையையும் கணக்கையும் துல்லியமாகப் பயன்படுத்தினால் சக்கர வியூகத்தை நிர்மூலமாக்கலாம். அர்ஜுனன் அதைத்தான் செய்தான்... நாமும் அதே வழிமுறையைத்தான் கடைப்பிடிக்கப் போகிறோம்...’’நிறுத்திய கரிகாலன், அவளது நாபியைச் சுற்றியும் வட்டமிட்டான்.‘‘சக்கரவியூகம் என்பது அற்புதமான அமைப்பு சிவகாமி... நாம் காண்பதெல்லாம் உண்மையல்ல... உண்மையை நாம் காண்பதில்லை... என்ற தத்துவத்தின் அடிப்படைதான் இந்த பத்ம வியூகம். நாம் உள்ளே செல்லச் செல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மேலெழும். உடனே உக்கிரத்துடன் போர் புரியத் தொடங்குவோம்.

ஆனால், நாம் வெளியே வரவில்லை... உள்ளேதான் மேலும் மேலும் இழுபடுகிறோம் என்பதை உணரவே முடியாது...’’ நிறுத்திய கரிகாலன் அவளது நாபியில் வட்டமிட்ட தன் விரலை மேல் நோக்கி நகர்த்தி அவளது இரு கொங்கைகளைச் சுற்றிலும் வட்டமிட்டான். ‘‘மூன்று சுற்று வீரர்களை வெற்றி கொண்டு நாலாவது சுற்றுக்கு நாம் காலடி எடுத்து வைத்து வெற்றி பெற்றுவிட்டோம் என்று எண்ணும்போது இன்னுமொரு சுற்று வீரர்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். நாம் இந்த வியூகத்தை வென்று விட்டோம் என்று எண்ணும்போது மேலும் பலமான வீரர்கள் நம்மை எதிர்கொள்வர். நாம் சக்கரத்தின் நடுவில் செல்லும் பொழுது அனைத்து சக்தியையும் இழந்திருப்போம். இங்குதான்... இந்த இடத்தில்தான்...’’ என்ற கரிகாலன் அவளது கச்சையின் நடுவில் துருத்திக் கொண்டிருந்த பால் சுரக்கும் சுரபியை தன் விரல்களால் திருகினான்.

‘‘சக்கரத்தின் மத்தியில்தான்... எதிரணியின் மிக மிக பலம் பொருந்திய வீரர்கள் இருப்பார்கள். அதாவது சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் இங்கிருந்தபடிதான் நம்மை வரவேற்பார்!
யுத்தக் கலையில் சக்கர வியூகம் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது சிவகாமி. பெயருக்கு ஏற்றபடி சக்கர வடிவத்தில் இருக்கும் இந்த வியூகத்தில் ஏழு அடுக்குகள் இருக்கும். ஒவ்வொரு அடுக்கிலும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும். ஆம்... வியூகத்துக்குள் நுழைந்து நாம் வீரர்களைக் கொல்லக் கொல்ல அந்த இடத்துக்கு வீரர்கள் வந்து வந்து சுழன்று கொண்டேயிருப்பார்கள். இதனால்தான் நாம் எந்த அடுக்கில் இருக்கிறோம் என்றே தெரியாமல் குழம்புவோம்.

மனரீதியாக பாதிக்கப்பட்டு தோல்வி நிச்சயம் என்ற எண்ணத்துக்கு ஆட்படுவோம்.இதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது சிவகாமி... அதுதான் கணக்கு. என்ன அப்படிப் பார்க்கிறாய்..? புரியவில்லையா..? புரியும்படியாகவே சொல்கிறேன்...’’நிறுத்திய கரிகாலன், அவளது இடுப்பு முடிச்சை தளர்த்தி அங்கிருந்த உடையை கீழ் நோக்கி நகர்த்தியவன் பரந்து விரிந்திருந்த அவளது அடிவயிற்றில் தன் விரல் நுனியால் எழுதத் தொடங்கினான்.‘‘துருபதனை வீழ்த்த அர்ஜுனன் இந்தக் கணக்கைத்தான் கடைப்பிடித்தான். அதாவது சக்கர வியூகத்தில் மொத்தம் ஏழு அடுக்குகள் இருக்கும் என்று சொன்னேன் அல்லவா..? இதை உடைக்கும்போது 1/7 என்ற அளவீட்டில்தான் கணக்கிட வேண்டும்.

இந்த கணக்கின்படி 1/7 = 0.142857142857142857 என்று அளவிடும்போது 142857 என்ற எண் திரும்பத் திரும்ப வரும். இதுதான் தந்திரம். ஒவ்வொரு சக்கரமும் உடையும்போது அந்த இடத்துக்கு வேறு வீரர்கள் வந்துவிடுவதால் இந்த சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். எனவே, ஒவ்வொரு அடுக்கையும் கடக்கும் போது ஓர் எண்ணை அதிகரிக்க வேண்டும். இறுதியாக கடைசி சக்கரத்தில் நுழையும் போது ஏழு மடங்கு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும்.

அப்பொழுதுதான் சக்கர வியூகத்தை உடைக்க இயலும். இந்த 0.142857ஐ 7 ல் பெருக்கும்போதுதான் இந்த எண் சூழல் உடையும். எளிமையாகச் சொல்கிறேன் பார்... 0.142857142857142857 என்பதை 2ல் பெருக்கு... என்ன கிடைக்கும்..?  0.2857142285714285714. இதை இப்பொழுது மூன்றால் பெருக்கினால் 0.42857142857144285714... இப்படியே நீண்டு கொண்டே இருக்கும் இந்த எண்ணை எப்பொழுது ஏழால் பெருக்குகிறோமோ அப்போதுதான் இந்த சுழல் எண் மாறும். அதாவது 0.142857142857142857 X 7 = 0.99999999999999...

 இப்படித்தான் சக்கர வியூகத்தை உடைக்க முடியும். இப்படித்தான் துருபதனை குருேக்ஷத்திரப் போரில் அர்ஜுனன் வீழ்த்தினான். இப்படித்தான் பெருவளநல்லூரில் நடக்கவிருக்கும் பல்லவ சாளுக்கியப் போரில் நாம் சாளுக்கியர்களை வீழ்த்தப் போகிறோம்...’’ சொன்ன கரிகாலன் குனிந்து சிவகாமியின் அடிவயிற்றில் முத்தமிட்டான்.அவனது குழலுக்குள் தன் விரல்களை நுழைத்தவள், அவனை அப்படியே முன்னோக்கி இழுத்தாள்.

‘‘இப்பொழுது தெளிவாகப் புரிகிறது...’’படர்ந்தபடியே வந்தவன் அவளது கொங்கைகளுக்கு இடையில் தன் தாடையைப் பதித்து அவளை ஏறிட்டான். ‘‘எது..?’’‘‘விக்கிரமாதித்தரின் தோல்வி...’’‘‘இல்லை சிவகாமி...’’ கரிகாலன் மறுத்தான்.‘‘இல்லையா..?’’‘‘ம்... விக்கிரமாதித்தர் ஒருபோதும் தோல்வி அடைய மாட்டார்... அவரை தோல்வி அடையவும் நான் விடமாட்டேன்...’’அவன் கேசத்தை கொத்தாகப் பற்றினாள். ‘‘அப்படியானால்..?’’ ‘‘சாளுக்கியர்கள் மட்டுமே தோல்வி அடைவார்கள்...’’‘‘இரண்டுக்கும்..?’’

‘‘வித்தியாசமிருக்கிறது... இந்த பாரத தேசத்தின் யுகபுருஷர்களில் விக்கிரமாதித்தரும் ஒருவர்... அவரைப் போன்ற அரசரைக் காண்பது அரிது... காஞ்சியின் கலைப் பொக்கிஷங்களுக்கு இம்மி அளவு கூட இதுவரை சேதாரம் ஏற்படவில்லை என்பதே அவரது நல் உள்ளத்துக்கு சாட்சி... தவிர...’’‘‘ஏன் நிறுத்திவிட்டீர்கள்...

சொல்லுங்கள்...’’‘‘நீ யார் என்பதை அறிந்த பிறகும் உன்னிடம் அதுகுறித்து ஒரு வார்த்தையும் கேட்காமல் இருக்கிறாரே... இதிலிருந்தே அவர் யுகபுருஷர் என்பது தெரியவில்லையா..?’’‘‘என்ன..?’’ சிவகாமி அதிர்ந்தாள். ‘‘நான் யார் என்பது..?’’‘‘விக்கிரமாதித்தருக்குத் தெரியும்... அதனால்தான் உன்னை சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவியாக அவர் நியமித்தார்... தனது அத்தனை நடவடிக்கைகளையும் உன் வழியாக பல்லவர்களுக்கு தெரியப்படுத்தினார்... இதற்கு நன்றிக்கடனாகத்தான் பல்லவர்களின் நடவடிக்கைகளை நான் அவருக்குத் தெரியப்படுத்தினேன்...

 எல்லோருமே நீயும் நானும் இரட்டை வேடம் பூண்டு ஒற்று அறிந்திருக்கிறோம் என நினைக்கிறார்கள்... இல்லை... தன் மீது நம்பிக்கையுள்ள இரு வீரர்கள் பரஸ்பரம் தங்கள் பலத்தை தெரிவித்துவிட்டு மோதுகிறார்கள்... அதுதான் இந்த பெருவளநல்லூர் போர்... அந்த இரு வீரர்களில் ஒருவர் சாளுக்கிய மன்னர்... மற்றவர் நம் மாமன்னர் பல்லவ பரமேஸ்வரவர்மர்! இருவருமே தோற்கக் கூடாது... படைகள் உருவாகும்... கலையும்... மடியும்... ஆனால், யுகபுருஷர்கள்..? அவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது... கிடைக்கவும் கூடாது...

ஒன்று தெரியுமா சிவகாமி... சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் சமீபத்திதால்தான் நீ யார் என்பதை அறிந்தார். அறிந்ததை சாளுக்கிய மன்னரிடம் அவர் தெரிவித்தபோது கூட ஏதுமறியாதவர் போல் ‘அப்படியா...’ என்றே விக்கிரமாதித்தர் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்...’’சட்டென சிவகாமி எழுந்து அமர்ந்தாள்.

‘‘என்னைப் பற்றி அவர் அறிந்திருக்கிறார் என்றால் பல்லவ இளவல் மணக்கவிருக்கும் ரங்கபதாகை குறித்தும்...’’‘‘அவருக்குத் தெரியும் சிவகாமி... பல்லவப் பேரரசின் வருங்கால மகாராணியை கங்க மன்னரின் பராமரிப்பில் மகளைப் போல் பார்த்துக் கொள்ளச் சொன்னதே விக்கிரமாதித்தர்தான்!’’

(அடுத்த இதழில் முடியும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்