தனி ஒருவன்!



இடைநிற்றல், குழந்தைத் திருமணத்தைத் தடுக்க  பழங்குடி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் இளைஞர்

கொரோனா பெருந்தொற்றால் பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. நகரங்களிலும், கிராமங்களிலும் பல சிரமங்களுக்கு மத்தியில் ஆன்லைன் கல்வி நடந்து வருகிறது. இந்நிலையில் மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மாணவ - மாணவிகளின் கற்றல் பற்றி எப்போதாவது சிந்தித்திருப்போமா?

இந்த மாணவர்கள் படிப்பதற்கு பதினைந்து கிமீ தொலைவிலுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளிக்கே செல்ல வேண்டும். இப்போது பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் எப்படி படிப்பார்கள்?  இந்தக் கேள்விதான் பழங்குடி இளைஞரான சத்தியமூர்த்தியைத் துரத்தியது. அந்த நொடியே, தன்னுடைய கிராமத்தில் தன் வீட்டிலேயே குழந்தைகளை ஒருங்கிணைத்து வகுப்புகளை எடுக்கத் தொடங்கினார். முதலில் வரத் தயங்கிய குழந்தைகள் சத்தியமூர்த்தியின் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர, கடந்த ஓராண்டாக அந்த மலைக்கிராமத்தில் வகுப்புகள் திறம்பட நடந்து வருகின்றன.   

சத்தியமங்கலம் புலிகள் வனக்காப்பகத்தின் உள்ளே அடர்ந்த வனப்பகுதியில் இருக்கிறது காளிதிம்பம் கிராமம். சத்தியமங்கலத்தில் இருந்து 30 கிமீ தொலைவிலுள்ள இந்தக் கிராமத்தில் ஊராளி என்ற பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 280 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் சத்தியமூர்த்தியின் குடும்பமும் ஒன்று. ‘‘இங்க பள்ளி செல்லும் குழந்தைகள் மொத்தம் 33 பேர் இருக்காங்க.
ஆனா, 25 குழந்தைகளே படிக்க வர்றாங்க. எல்லோரையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்திட்டு இருக்கேன். கொரோனாவுக்கு முன்னாடி இந்தக் குழந்தைகள்ல சிலர் மைசூர் சாலையில் இருக்குற ஹாசனூர் உண்டு உறைவிடப் பள்ளியில் படிச்சாங்க. சிலர் தலமலையில் உள்ள பள்ளிக்குப் போனாங்க. எல்லோருமே அங்க தங்கிதான் படிக்கிறாங்க.

பொதுவா, ஐந்து வயதானதும் பள்ளியில் கொண்டு போய் விட்டுடுவாங்க. அருகாமையில் பள்ளி இல்லாததால சின்ன வயசுலேயே அப்பா, அம்மாவை விட்டுட்டு போக வேண்டிய சூழல் இருக்குது. நானும் பனிரெண்டாம் வகுப்பு வரை ஹாசனூர்ல படிச்சேன். பிறகு, மதுரை அருளானந்தர் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியல் முடிச்சேன். அடுத்து, பாரதியார் பல்கலைக்கழகத்துல எம்.எஸ்சி படிச்சிட்டு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துல பிஎச்.டி முடிச்சேன்.

நான் முனைவர் பட்டம் வாங்கியிருக்கேன் என்கிற விஷயம்கூட இங்குள்ள எங்க மக்களுக்குத் தெரியாது. அவங்க கல்வியறிவு ரொம்ப குறைவு. என் தலைமுறையில்தான் படிக்க ஆரம்பிச்சிருக்கோம். நான்தான் என் கிராமத்தின் முதல் பட்டதாரி, முதல் முனைவர் எல்லாமே!’’ என்கிற சத்தியமூர்த்தி, ஏன் வகுப்பு எடுக்க முடிவெடுத்தார் என்பது பற்றி தொடர்ந்தார்.
‘‘எனக்கு 32 வயசாகுது. 2019 நவம்பர்லதான் டாக்டர் பட்டம் வாங்கினேன். பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கொண்டு படிக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, கொரோனா வந்ததால எதுவும் நடக்கல. இப்ப நிறைய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்ல வேலைக்கு விண்ணப்பிச்சிட்டு காத்திருக்கேன்.

இந்நேரம் பழங்குடி மக்களிடையே குழந்தைத் திருமணம் நடக்க ஆரம்பிச்சது. பொதுவாகவே, பழங்குடி மக்கள்கிட்ட பதிமூணு, பதினான்கு வயசுலேயே திருமணம் பண்ணி வைக்கிற பழக்கம் இருக்குது. பெண்கள் வயசுக்கு வந்திட்டாலே பெரிய பெண்ணாகிட்டா என்கிற மனநிலையே இதுக்குக் காரணம். அதனால, இந்தப் பசங்களை அப்படியே விட்டால் எங்க திருமணம் பண்ணி வைச்சிடுவாங்களோனு எனக்குள்ள பயம் வந்துச்சு. இவங்கள ஒருங்கிணைச்சு ஏன் பாடம் நடத்தக் கூடாதுனு தோணுச்சு.

அதுமட்டுமல்ல. கடந்த ஆண்டு ஜூலையில் இந்தக் குழந்தைகளிடையே பேசிப் பார்த்தப்ப எல்லாமே மறந்திருந்தாங்க. தவிர, எல்லோருமே ஊருக்குள்ள ஆடிப்பாடி, விளையாடிட்டு  இருந்திட்டதால உண்டு உறைவிடப்பள்ளிக்கு மறுபடியும் அனுப்புறது ரொம்ப சிரமம். பள்ளிக்கூடம் போகணும்கிற எண்ணம் வராது. பிறகு, இடைநிற்றல் அதிகரிச்சிடும்.
அதனால, அவங்கள ஒரு மணிநேரமாவது உட்கார வைச்சு பள்ளிக்கூடம் மாதிரி வகுப்பு எடுக்கணும்னு நினைச்சேன்.

அப்புறம், இங்க பொதுவா எல்லோரும் வனப் பொருள் சேகரிப்பு தொழில் செய்றாங்க. அதாவது, வீட்டு துடைப்பத்திற்கான சீமார் புல் அறுக்குறது, நெல்லிக்காய், கடுக்காய் எடுக்கறதுனு இருப்பாங்க. இப்ப புலிகள் சரணாலயமா அறிவிச்ச பிறகு நெல்லிக்காய், கடுக்காய் எடுக்க அனுமதியில்ல. அதனால, சீமார் புல் மட்டுமே அறுக்கிறாங்க. அதுல போதுமான வருமானம் இல்ல.
தவிர, தங்கள் நிலங்கள்ல கேழ்வரகு, மக்காச்சோளம் எல்லாம் போடுவாங்க. பணப்பயிர்னு சொன்னா பீன்ஸ் போடுவாங்க.

இப்ப கடந்த ஐந்து ஆண்டுகளாகவே எங்க பக்கம் விவசாயமும் குறைஞ்சுபோச்சு. காரணம், யானைகளின் அச்சுறுத்தல். சரியா, சீசன் நேரத்துல வந்து சாப்பிட்டுட்டு போயிடும். இன்னைக்கு பக்கத்து கிராமத்துல எல்லோரும் விவசாயத்தை விட்டுட்டு கூலி வேலைக்கு வெளியூர் போயிட்டு இருக்காங்க. அதனால, படிச்சா மட்டுமே இவங்களுக்கு வாழ்க்கை. படிச்சு வெளியே நல்ல வேலைக்குப் போனாதான் வாழ்வாதாரம். அதனால, இந்தக் குழந்தைகளைக் கட்டாயம் படிக்க வைக்கணும்னு முடிவெடுத்தேன். இந்த மூணும்தான் உடனே நான் வகுப்பெடுக்க காரணங்கள்.
முதல்ல பக்கத்து வீடுகள்ல உள்ள அஞ்சு குழந்தைகள் வந்தாங்க. அப்புறம், ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு உட்கார வச்சேன். ஆனா, ஒரு மணிநேரம் உட்கார வைக்கிறதே பெரிய சவாலா இருந்துச்சு.

முதல்ல ஆறு மாசம் வீட்டுத் திண்ணையில் வச்சே எடுத்திட்டு இருந்தேன். பிறகு, 25 மாணவ - மாணவிகளானதும் இடம் அதிகம் தேவைப்பட்டுச்சு. கொரோனா என்பதால் சமூக இடைவெளியும் வேணும். அதனால, அங்கன்வாடி மையத்திற்கு வேண்டுகோள் வச்சேன். அவங்க நிறைய சப்போர்ட் பண்ணினாங்க. அங்க வச்சு வகுப்புகள் எடுத்தேன். குழந்தைகளுக்கு வகுப்புகள் எரிச்சலாகிடக் கூடாதுனு விளையாட்டுடன் கூடிய கல்வியா மாத்தினேன். அரைமணி நேரம் படிச்சிட்டு பதினைஞ்சு நிமிடம் விளையாடுவாங்க...’’ எனச் சிரித்தபடி தொடர்ந்தார்.
‘‘ஆரம்பத்துல அடிப்படையான விஷயங்களை பலப்படுத்தினேன். குறிப்பா, கணிதம் இவங்களுக்கு வராது. அதனால, 16வது வாய்ப்பாடு வரைக்கும் பலமா இருக்கணும்னு சொல்லிக் கொடுத்தேன். சில டிரிக்ஸ் எல்லாம் பயன்படுத்தி எப்பவும் மறக்காத மாதிரி புரிய வைச்சேன்.

அடுத்து, கூட்டல், கழித்தல், பெருக்கல் எல்லாம் சொல்லிக் கொடுத்தேன். இதன்பிறகு, ஆங்கிலத்துல பேச வைக்கணும்னு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பும் எடுத்தேன்.
இதுதவிர, இப்ப பழங்குடி மக்களின் கலாசாரம் அழிஞ்சிட்டு வருது. அதையும் குழந்தைகள்கிட்ட சொல்லிக் கொடுக்குறேன். இதுல என் மனைவி சவுமியாவின் ஒத்துழைப்பு அதிகம். அவங்க பி.எஸ்சி, பி.எட் படிச்சிருக்காங்க. ஹாசனூர் பள்ளியில்தான் தொகுப்பூதிய ஆசிரியரா வேலை செய்றாங்க.

அதனால, இந்தக் குழந்தைகளைப் பத்தி அவங்களுக்கு நல்லா தெரியும். நான் ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்குறேன். அவங்க அதுக்கு கீழ் படிக்கிற குழந்தைகளை பார்த்துக்கிறாங்க. ஆரம்பத்துல ஒரு மணி நேரம் எடுத்தோம். இப்ப பத்தாம் வகுப்பு படிக்கிற குழந்தைகளும் இருக்கிறதால மூணு மணி நேரம் எடுக்குறோம்.  
அடுத்து, இவங்களுக்கு ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுக்குறோம். என்னைப் பத்தின செய்திகள் வந்ததும் என்கூட படிச்ச நண்பர்கள், தெரிஞ்சவங்கனு பணம் அனுப்பினாங்க. இதை வச்சு குழந்தைங்களுக்கு ஸ்நாக்ஸ் வாங்கினோம்.

அதேமாதிரி நண்பர்கள்கிட்ட விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும்படி கோரிக்கை வச்சிருக்கேன். கேரம் போர்டு, செஸ் போர்டு, ஸ்கிப்பிங், ரிங் எல்லாம் கேட்டிருக்கேன். தவிர, குழந்தைங்க பள்ளிப் புத்தகங்களுடன் மற்ற கதைப் புத்தகங்களும் படிக்கணும் என்பதற்காக 240 குட்டிக் கதை புத்தகங்கள் வாங்கி வைச்சிருக்கேன். சின்னதா ஒரு நூலகம் அமைக்கப் போறேன்...’’ என்கிறவர், தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்.  

‘‘எங்க கிராமத்துல எட்டு பேர் பட்டதாரி ஆகியிருக்காங்க. இன்னும் நிறைய பேர் பட்டதாரி ஆகணும்ங்கிற ஆசையில்தான் இந்த வகுப்புகளை எடுக்குறேன். எங்க பழங்குடி கிராமத்துல கல்வி பத்தின புரிதல் இல்லாததாலே இடைநிற்றல் நடக்குது. அரசு, கல்வி பத்தின புரிதலை பெற்றோர்கிட்ட ஏற்படுத்தணும். இடைநிற்றலை கண்காணிக்கணும். அப்புறம், டிகிரி முடித்த அந்த எட்டு பேரும் இன்னும் வெளியில் வேலைக்குப் போகல. இது, ‘அந்த அண்ணன் படிச்சிட்டு ஊருக்குள்தான் இருக்கார்’ என்கிற மனநிலையை மற்ற குழந்தைகளிடம் ஏற்படுத்திடக்கூடாது. டிகிரி முடிச்சதும் அடுத்து மேற்கொண்டு என்ன பண்ணணும்னு அரசு இவங்களுக்கு வழிகாட்டணும்.  

இதுதவிர, எங்க ஊர்ல பனிரெண்டாம் வகுப்பு முடிச்ச பசங்க 20க்கும் மேற்பட்டவங்க இருக்காங்க. சுத்தியிருக்கிற ஆறு கிராமங்களையும் எடுத்துக்கிட்டா சராசரியா நூறு பேர் வரை இருப்பாங்க. இந்த நூறு பேருக்கும் பொதுவான இடத்துல குரூப் 4 படிப்பதற்கு ஒரு மையத்தை அரசு உருவாக்கலாம். இப்ப சத்தியமங்கலம் போய் படிக்கணும். தினமும் போயிட்டு வர்றது சாத்தியமில்ல. அதனால, இங்கே ஏற்படுத்தணும். அந்த நூறு பேர்ல பத்து பேர் குரூப் 4 தேர்ச்சி பெற்றால் கூட அதைப் பார்த்து மற்றவங்களும் படிக்க ஆர்வமா முன்வருவாங்க. கல்வி மேல ஓர் ஈர்ப்பும் ஏற்படும்.

அடுத்து, பழங்குடியினர் பள்ளியில் பழங்குடியினரை ஆசிரியரா நியமிக்கணும். இப்ப உள்ள ஆசிரியர்கள் கோவை, சத்தியமங்கலம் பகுதிகள்ல இருந்து வர்றாங்க. இவங்க பழங்குடியினர் இல்ல. இவங்களால, சரியான நேரத்திற்கு வரவும் முடியிறதில்ல. காரணம், மலைப்பகுதி.அப்புறம், சில நேரங்கள்ல டிராபிக் ஜாம் ஏற்பட்டுவிடும். அதனால, இந்தப் பழங்குடியினத்தில் உள்ளவர்களை ஆசிரியராக்கினால் நம்ம உறவினர்னு குழந்தைகளும் ஆர்வமா பள்ளிக்கு வருவாங்க. நல்ல மாற்றமும் நடக்கும்...’’ என்கிறார் சத்தியமூர்த்தி.
 
செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: கனகராஜ்