தங்கம்தான்... ஆனால், ஒலிம்பிக்கில் அல்ல!



டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் பரபரவென நடந்து கொண்டிருக்கின்றன. மீராபாய் சானுவுக்குப் பிறகு இந்தியாவுக்கு வேறு யாராவது பதக்கம் வென்று கொடுப்பார்களா என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. ஆனால், அது ஒலிம்பிக்கில் அல்ல. ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்!  ஜூனியர் லெவலுக்கும் முந்தைய லெவலே கேடட் லெவல். இதில், மல்யுத்தத்திற்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரியில் நடைபெறுகிறது. இதில், இந்தியா சார்பில் 73 கிலோ எடைப்பிரிவில் பிரியா மாலிக் பங்கேற்றிருந்தார்.

பிரியா மாலிக்கிற்கும் பெலாரஸை சேர்ந்த செனியா பேட்டபோவிச்சிற்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 5 - 0 என செனியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார் பிரியா மாலிக்.மல்யுத்த பூமியான அரியானாவிலிருந்து வந்தவரே பிரியா மாலிக். 2019ம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா தொடரிலும் தங்கம் வென்றிருந்தார். பள்ளி அளவிலான போட்டிகள் மற்றும் சிறுசிறு தொடர்களில் சிறப்பாக ஆடிய பிரியா மாலிக்கின் முதல் பெரிய வெற்றி இது.

காம்ஸ் பாப்பா