யூ டியூப் ஸ்டார்



யார் வேண்டுமானாலும் யூ டியூப் சேனல் ஆரம்பித்து சாதிக்கலாம்; வருமானம் ஈட்டலாம். இதற்கு சமீபத்திய உதாரணம், இசாக் முண்டா. ஒடிசாவில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் இசாக். ஏழாம் வகுப்பு வரையே படித்தவர். கட்டடத் தொழிலாளியான இவர், ஒரு குடிசை வீட்டில் மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தார். கொரோனா லாக்டவுனால் இசாக்கிற்கு சரியாக வேலை இல்லை.

உணவுக்கே கடன் வாங்க வேண்டிய சூழல். இந்நிலையில் அவரது நண்பர்கள் யூ டியூப் சேனலைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். கடனில் வாங்கிய ஸ்மார்ட்போனை நம்பி ‘இசாக் முண்டா ஈட்டிங்’ என்று ஒரு யூ டியூப் சேனலை ஆரம்பித்தார். சாப்பிடுவது, கடைக்குப் போவது, மீன் பிடிப்பது, குடும்பத்துடன் இருப்பது போன்ற அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக்கி சேனலில் இறக்கினார்.

அவரது ஒவ்வொரு வீடியோவும் இந்திய கிராம மக்களின் வாழ்வை பிரதிபலிப்பதாக இருந்ததால் செம வைரலானது. சேனல் ஆரம்பித்த 15 மாதங்களில் 8 லட்ச சப்ஸ்கிரைபர்களை நெருங்கிவிட்டார் இசாக். அவரது வீடியோக்கள் 9 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளி, இசாக்கின் வங்கிக் கணக்கில் பணத்தை நிரப்புகிறது.

த.சக்திவேல்