பானைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!



மண்பாண்ட உற்பத்தி என்பது தமிழ்நாட்டில் காலங்காலமாக நடைபெற்று வரும் ஒரு தொழில். மண்பாத்திரங்கள் ஒரு காலத்தில் நமது சமையலறையில் பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டன. மண்பானை சமையலுக்கு தனி ருசி உண்டு. இன்று கூட சில உணவகங்களில் மண் பானை சமையல் என்று சிறப்பாக சொல்லப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைக்கும் உடைந்த பானை ஓடுகளே பெரும்பாலும் தமிழர்களின் தொன்மைக்கு சான்றுகளாக இருந்து வருகின்றன.

அந்த வகையில் நம் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்த பானை வகைகளில் சில:

1.அஃகப் பானை - தானியம் சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை.
2.அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
3.அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை.
4.அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்படும் பானை.
5.அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் ஏழுபானை வரிசை அடுக்கப்படுவதுண்டு.

6.அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
7.உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
8.உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை.
9.எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்க உதவும் பானை.
10.எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை.

11.எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை.
12.ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை.
13.ஓதப் பானை - ஈரப் பானை.
14.ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழுப்பும் பானை.
15.ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை.

16.ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை.
17.கஞ்சிப் பானை - கஞ்சியை வடித்தற்குப் பயன்படும் அகன்ற வாயுடைய பானை.
18.கட்டப் பானை - அடிப்பகுதி வளையப்படாத பானை.
19.கட்டுப் பானை - மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை.
20. கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும் நெல்மணிகளையும் வைப்பதற்குப் பயன்படும் பானை.

21.கரகப் பானை - நீர்க்கரகம்.
22.கரிப்பானை - கரி பிடித்த பானை.
23.கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிறம் வாய்ந்த பானை.
24.கருப்பு சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை.
25.கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்.

26.கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்படும் பானை.
27.காடிப் பானை - கழுநீர்ப் பானை.
28.காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் படும் பானை.
29.குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை.
30.குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை.

31.கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் படும் பானை.
32.கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை.
33.கூர்ப் பானை - கூர் முனைப் பானை.
34.கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப் படும் பானை.
35.கோளப் பானை - உருண்டு திரண்ட பானை.

36.சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும்; கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் உருவாக்கப் பெற்ற பானை.
37.சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி.
38.சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை.
39.சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை.
40.சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை.

41.சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை.
42.சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை.
43.சில்லுப் பானை - மிகச் சிறிய பானை.
44.சின்ன பானை - சிறிய பானை.
45.தவலைப் பானை - சிறிய வகைப் பானை, நீர் சேமிக்க உதவுவது.

46.திடமப் பானை - பெரிய பானை.
47.திம்மப் பானை - பருமனான பானை.
48.துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவும் உருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை.
49.தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை.
50.தோரணப் பானை- கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் வெட்டப்பெற்ற பானை.

51.தோள் பானை - தோளில் (சுவர்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட பானை.
52.நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை.
53.பச்சைப் பானை - சுடப்பெறாத பானை.
54.படரப்பானை - அகன்ற; பெரிய பானை.
55. பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி.

56. பொள்ளற் பானை - துளையுள்ள பானை.
57. பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை.
58.மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் வைக்கப் பெறும் பானை.
59.மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை.
60.மிண்டப் பானை - பெரிய பானை.

61.மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை.
62.முகந்தெழு பானை - ஏற்றப் பானை.
63.முடலைப் பானை - உருண்டை உருவப் பானை.
64.முரகுப் பானை - திரண்டு உருண்ட பானை.
65.மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை).

66.மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை.
67.வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்.
68.வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை.
69.வெள்ளாவிப் பானை - அழுக்குத்துணிகளை அவிப்பதற்குப் பயன்படும் பானை.

என்.ஆனந்தி