டான்சிங் ரோஸ்!



ஒரு நடிகர்; கதாநாயகனல்ல, கதையின் நாயகனும் அல்ல. ஆனால், அவரைப் பற்றி தான் இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கிறது. அவர், டான்சிங் ரோஸ்!வித்தியாசமான உடல் மொழியும், விசித்திரமான நடனமுமாக ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் பாக்சிங் செய்த ‘டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் கல்லரக்கல்தான் இன்றைய வைரல் ஹிட் ஹாட் டாக்.
‘‘சென்னைதான் சொந்த ஊர். எம்பிஏ படிச்சிருக்கேன். 22 வயசு வரைக்கும் கிரிக்கெட் வீரராகணும்னுதான் கனவு. ஓவர்சீஸ் மேட்ச் எல்லாம் கூட விளையாடியிருக்கேன்.

அப்பா பெயர் லிரார். அவர் பிஸினஸ் மேன். அம்மா சுஹாரா. வீட்டை நிர்வாகம் செய்வது அம்மாதான். காலேஜ் படிக்கும் போது நிறைய பார்ட் டைம் ஒர்க் செய்வேன். அப்படியொரு நேரத்துல காலேஜ் ஸ்டூடண்ட்ஸா நடிக்க பசங்க வேணும்னு ஒரு செய்தி கிடைச்சது. போய் நடிச்சேன். அந்தப் படம்தான் ‘ஆய்த எழுத்து’. அந்தப் படத்துல கூட்டத்துக்கு முன்னாடி என்னை நிறுத்தி வைப்பாங்க. அங்கதான் கார்த்தி சார், சுதா மேம் எல்லாரும் பழக்கமானாங்க. அது நடிப்புனு மட்டும்தான் அப்ப தெரியும். மத்தபடி சினிமா பத்தி அப்ப எதுவும் தெரியாது. ஒரு பார்ட் டைம் ஒர்க்கா நினைச்சுதான் போனேன்.

 தொடர்ந்து டான்ஸ் கிளாஸ். அப்புறம் பாண்டியன் மாஸ்டர் கிட்ட சண்டைப் பயிற்சியும் கத்துக்கிட்டேன். அப்ப எல்லாம் நடிப்புன்னாலே, நடனமும் சண்டையும் முதல்ல கத்துக்கணும்னு ஒரு நினைப்பு இருந்தது. அதையே நானும் ஃபாலோ செய்தேன். படம் வெளியானதும் சில சீன்ஸ்ல நான் தெரிஞ்சேன். அப்பதான் நடிப்பு ஆர்வம் தலை தூக்கிச்சு. டான்ஸ் கிளாஸ்ல நடிகர் ஆரி கூட பழக்கம் உண்டாச்சு. அவரும் நானும் ஒரே டீம்தான்.

ஒரு பிரபல தனியார் நிகழ்ச்சில ஆரி காஸ்டியூம் ஒர்க் செய்திட்டு இருந்தப்ப அவரைப் பார்க்கப் போய் அப்படியே நடிப்பு, ஆக்டிங் கிளாஸ் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். பக்கத்துல இருந்து பார்த்தேன். இதுக்குப் பிறகுதான் ஜெயக்குமார் மாஸ்டர்கிட்ட ஆக்டிங் கிளாஸ் போக ஆரம்பிச்சேன்...’’ என்னும் ஷபீர், நடிப்பை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்.
‘‘அடுத்து நம்ம ‘லிட்டில் தியேட்டர் டீமி'ன் ‘ஹாஸ்பிட்டல் கிளவுனிங் கான்செப்ட்’ பிடிச்சுப்போக அங்கயே நடிப்பு துவங்கி, கிளவுனிங் வரை எல்லாமே கத்துக்கிட்டேன்.   அங்கே நான் ‘சூரரைப் போற்று’ புகழ் பைலட் கே.கே டீமுடன் சேர்ந்து கிளவுனிங், ஸ்டேஜ்பிளேனு நிறைய செய்தேன். அவர்கிட்ட நிறைய விஷயம் கத்துக்கிட்டேன்.

முதல் பட வாய்ப்பு ‘54321’. அதுல ஆன்டி ஹீரோவா நடிச்சேன். அந்தப் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் பார்த்துட்டு லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் இயக்குநர் ராஜேந்திர பிரசாத் சார்கிட்ட ‘பட ஹீரோவை அனுப்பி வைங்க... என்னுடைய அடுத்த படத்துக்கு டெஸ்ட் லுக் பார்க்கணும்’னு கேட்டாங்க. இயக்குநர் ராஜேந்திர பிரசாத் சார் தவறுதலா ஹீரோவுக்கு பதில் என்னை அனுப்பிட்டார். ஏன்னா, அந்தப் படத்துல நாங்க ரெண்டு பேருமே ஹீரோஸ்தான். என்ன... நான் ஆன்டி ஹீரோ.

லட்சுமி ராமகிருஷ்ணன் மேடமை போய் பார்த்தேன். என் பேச்சு அவங்களுக்கு பிடிச்சிருச்சு. ‘நீதான் என் படத்துல ஹீரோ’னு ஒப்பந்தமும் செய்துட்டாங்க. அந்தப்படம்தான் ‘நெருங்கி வா முத்தமிடாதே’. முதலில் வெளியானதும் அந்தப் படம்தான். பிறகுதான் ‘54321’ படம் வெளியாச்சு.இதுக்குப் பிறகு காஸ்ட்யூம் டிசைனர் நித்யா மூலம் ‘அடங்க மறு’ படத்துல நாலு வில்லன் பசங்கள்ல ஒரு பையனா நடிச்சேன். தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் ‘பேட்ட’ படத்துல வாய்ப்பு கொடுத்தார். அதுல விஜய்சேதுபதியின் பிரதரா, நவாசுதீன் சித்திக் சாருக்கு இன்னொரு மகனா நடிச்சிருப்பேன்.

தொடர்ந்து ‘டெடி’ படத்துல ஹரீஷ் கேரக்டர்ல நடிச்சேன்...’’ என்னும் ஷபீர், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் கேரக்டர் குறித்து பேசினார்.‘‘நித்யா மூலமாதான் ‘சார்பட்டா’ பட ஆடிஷன் வாய்ப்பு வந்துச்சு. அதே சமயம் வேற ஒரு படத்துக்காக  நான் உடம்பெல்லாம் இறக்கியிருந்தேன். இந்தப் படத்துக்கு கொஞ்சம் எடை ஏத்த முடியுமான்னு பா.ரஞ்சித் சார் கேட்டார். ஆனா, ஏற்கனவே  இன்னொரு படத்துல கமிட் ஆகியிருந்ததால முடியல.

திரும்ப கொஞ்ச நாள் கழிச்சு மறுபடி டீம்ல இருந்து கூப்பிட்டாங்க. மீண்டும் வெயிட் ஏத்த முடியுமான்னு கேட்டார். அப்ப நான் யோசிக்காம என் சட்டையைக் கழட்டி காண்பிச்சேன். ஒருவேளை இதைப் பார்த்துட்டு கூட ரஞ்சித் சார், தான் மனசுல நினைச்சிருக்கிற கேரக்டருக்கு நான் செட் ஆவேன்னு நினைக்கலாம் இல்லையா..?என் நினைப்பு வீண் போகலை. சட்டையைக் கழட்டிட்டு நான் நின்னதுமே ரஞ்சித் சார், ஓகே சொல்லிட்டார். ஏற்கனவே களரி, டான்ஸ், காலடி குத்துவரிசை, ஜிம்னாஸ்டிக்னு பயிற்சிகள் எடுத்திருக்கேன். அதனால எனக்கே எனக்குனு டிசைன் பண்ணின மாதிரி அந்த டான்சிங் ரோஸ் கேரக்டர் அமைஞ்சிடுச்சு.

ரஞ்சித் சார், ‘சார்பட்டா பரம்பரை’ படத்துல வர்ற ஒவ்வொரு பாக்சர் கேரக்டருக்கும் ரியல் லைஃப் பாக்சர் ஒருத்தரை ரெஃபரன்சா வைச்சிருக்கார். அந்த வகைல என்னுடைய டான்சிங் ரோஸ் கேரக்டருக்கு சார் பிரபல பாக்சரான நாஸீம் ஹமீத் சாயலைக் கொடுத்திருந்தார்.அதனால நாஸீம் ஹமீத் குத்துச்சண்டை போட்ட வீடியோஸை எல்லாம் தொடர்ந்து பார்த்து அந்த கேரக்டரை உள்வாங்கினேன். ரஞ்சித் சார் பத்தி சொல்லவே வேண்டாம். பெண்டு நிமிர்த்திட்டார்.

மெட்ராஸ் தமிழை டப்பிங்ல திரும்பத் திரும்ப பேச வைச்சு கரெக்ட்டா கொண்டு வந்தாங்க. என் கேரக்டர் பேசப்படும்னு ஷூட்டிங் அப்பவே எல்லாரும் சொன்னாங்க. ஆனா, இந்த அளவுக்கு ரீச் ஆவேன்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை. சந்தோஷமா இருக்கு. ரஞ்சித் சாருக்கும், ‘சார்பட்டா பரம்பரை’ டீமுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்...’’ நெகிழ்கிறார் ஷபீர்.

ஷாலினி நியூட்டன்