ஆதரவற்ற நாய்களுக்கு அன்புக்கரம் நீட்டும் மனுஷி!



கொரோனாவால் மனிதர்கள் மட்டுமல்ல, நாய்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. லாக்டவுன் சமயத்தில் மாநகரங்களின் வெறிச்சோடிய சாலைகளில் நூற்றுக்கணக்கான நாய்கள் உணவைத்தேடி அலைந்ததைப் பார்த்திருப்போம். இப்படி ஆதரவில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் செல்லப் பிராணிகளுக்குத் தனது அன்புக் கரங்களை நீட்டி அரவணைத்து வருகிறார் லட்சுமி சுவாமிநாதன் என்கிற மனுஷி.

‘‘சொந்த ஊர் மதுரை. கல்லூரி வரைக்கும் மதுரைலதான் படித்தேன். படிப்பு முடிந்ததும் பெங்களூருவில் வேலை. கை நிறைய சம்பளம் கிடைத்தாலும் எதற்காக இன்னொருவரிடம் வேலை பார்க்க வேண்டும் என்ற கேள்வி என்னை அழுத்திக்கொண்டே இருந்தது. வேலை செய்வதற்கான திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. உடனே வேலையை உதறிவிட்டு கணினி மென்பொருள் மற்றும் செயலிகளை உருவாக்கும் நிறுவனத்தை தொடங்கினேன். இப்போது என்னால் சிலருக்கு வேலை கொடுக்க முடிகிறது...’ என்று ஆரம்பித்த லட்சுமி சுவாமிநாதன் இப்போது செய்து வரும் அருமையான சேவையைப் பற்றியும் பகிர்ந்தார்.

‘‘நிறுவனத்தை தாண்டி  வாயில்லா ஜீவன்களிடம் ஒருவித ஈர்ப்பு உண்டாகியது. குறிப்பாக நாய்களை விலை கொடுத்து வாங்கும் சிலர் அதை சரியாக பராமரிப்பது கிடையாது. வயதான தாய், தந்தையைக் கவனிக்காமல் தவிக்கவிடும் நபர்களைப் போல், வளர்ப்பு நாய்களை வீதியில் தவிக்க விட்டுச்செல்வது என்னை மிகவும் பாதித்தது.அதன் காரணமாக நாய்களைப் பராமரிக்க முடிவு செய்தேன். ஷாப்பிங் மால் உள்ளிட்ட பகுதியில் எஜமானர்களைக் காணவில்லை என தவித்த நாய்களுக்கு உண்மை தெரியவில்லை. பேசும் சக்தி இருந்தால் யாரிடமாவது வழி கேட்டிருக்கும். வாயில்லா ஜீவன் என்பதால் ஷாப்பிங் மால் பகுதியில் இரவு பகல் பாராமல் சுற்றிச்சுற்றி வந்தன.

கடைசியாக வாட்ச்மேன் அவற்றை அடையாளம் கண்டு, அவை சாப்பிடுவதற்கு பிஸ்கட் அளித்துள்ளார். இது பற்றிய தகவல் எனக்கு கிடைத்த உடனே அவற்றை எனது  வீட்டிற்கு அழைத்து வந்து ஏற்கனவே வீட்டிலுள்ள உறுப்பினர்களுடன் சேர்த்து பராமரித்து வருகிறேன்...’’ என்ற லட்சுமி, கொரோனா காலத்தில் பசியால் வாடிய நாய்களுக்கு உணவளித்து பராமரித்து வருகிறார். 

‘‘கைவிடப்பட்ட நாய்களைப் பராமரிப்பதற்கு குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை.  அதே நேரம் மனிதர்களை விட இந்த வாயில்லா ஜீவன்கள் மீது  நம்பிக்கை உண்டாகியது.

என்னுடைய இந்த முடிவு பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றாலும் எனது வாழ்வின்  முழு நேரத்தையும் இந்த உயிர்களுக்காக ஒதுக்க முடிவு செய்துவிட்டேன்...’’ என்ற உறுதிமொழியுடன் முடித்த லட்சுமியின் லட்சியம், ஆதரவற்ற நாய்களுக்காக  பராமரிப்பு மையம் ஒன்றைத் தொடங்குவதே!

செய்தி: பட்டு

படங்கள்: வெங்கடேஷ்