நாரப்பா



தமிழில் பெரும் வெற்றி கண்ட ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்தான் ‘நாரப்பா’. கடந்த வாரம் ‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.
எண்பதுகளில் படத்தின் கதை நிகழ்கிறது. குடும்பம்தான் உயிர் என்று வாழும் விவசாயி நாரப்பா. அவரது குடும்பத்தை அழிப்பதற்காக ஒரு கும்பலும், காவல்துறையும் வெறிகொண்டு தேடிக்கொண்டிருக்கிறது. காவல்துறையின் பிடியில் இருந்து தப்பிக்க நாரப்பாவின் மனைவியும், மகளும், மச்சானும் பாதுகாப்பான இடத்தைத் தேடி அலைகின்றனர்.  இன்னொரு பக்கம் மகனுடன் ஒரு மறைவான இடத்தில் பதுங்குகிறார் நாரப்பா.

பாதுகாப்புக்காக பையில் நாட்டு வெடிகுண்டை வைத்திருக்கிறான் நாரப்பாவின் மகன். நாரப்பாவின் குடும்பத்துக்கு என்ன பிரச்னை... எதற்காக அந்தக் கும்பலும் காவல்துறையும் அவர்களைத் தேடுகிறது... அதிகார பலம் மிகுந்த காவல்துறையிடமிருந்தும், பணபலம் மிக்க அந்தக் கும்பலிடமிருந்தும் மகனையும் மற்றவர்களையும் நாரப்பா எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே நெகிழ்ச்சியான திரைக்கதை.நிலச்சுரண்டல், அதிகார வர்க்கத்தின் அட்டூழியம், சாதிப் பிரச்னைகளைப் பேசும் இத்திரைப்படம் கல்வியின் முக்கியத்துவத்தையும் அழுத்தமாக பதிவு செய்கிறது. ‘அசுரன்’ படத்தை அப்பட்டமாக நகல் எடுத்ததைப் போல இருக்கிறது. லொகேஷன் முதற்கொண்டு எதிலும் பெரிதாக மாற்றங்கள் இல்லை. நாரப்பாவாக வெங்கடேஷ் கலக்கியிருக்கிறார். படத்தின் இயக்குநர் காந்த் அடலா.