சாவட்



ஒரு நல்ல திரில்லிங் அனுபவம் வேண்டுமா? உடனே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கும் ‘சாவட்’ என்ற மராத்தி படத்தைப் பாருங்கள்.மகாராஷ்டிராவில் உள்ள ஒரு குக்கிராமம். அங்கே ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தின்போது ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். அப்படி தற்கொலை செய்துகொள்பவர் அந்த ஊரிலேயே செல்வாக்கான மனிதர்களில் ஒருவராக இருக்கிறார். இப்படி ஏழு வருடங்கள் தொடர்ந்து நடக்கிறது.

ஒருவேளை கிராமத்திலிருக்கும் சூனியக்காரியின் வேலையாக இருக்குமா என்று ஊர்க்காரர்கள் அஞ்சுகின்றனர். இதைப் பற்றி கேள்விப்படுகிறார் துப்பறியும் அதிகாரி அதிதி. உடனே தனது காவல்துறை குழுவுடன் கிராமத்துக்கு விரைகிறார். ஏழு பேரும் தற்கொலை செய்துகொண்டுதான் இறந்தார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணையை ஆரம்பிக்கிறார்.

சூடு பறக்கும் அந்த விசாரணையும், ஏழு பேரின் மரணத்துக்குப் பின்னணியாக இருக்கும் சம்பவங்களும்தான் படத்தின் கதை.எந்த இடத்திலும் சலிப்புத் தட்டாமல் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது திரைக்கதை. நடிகர்களின் தேர்வு கதைக்கு வலுவூட்டுகிறது. படத்தின் இயக்குநர் சவுரப் சின்ஹா.