அம்மா கி போலி



வயிறு குலுங்க சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்கும் ஓர் இந்திப்படம், ‘அம்மா கி போலி’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. எழுபது வயதான விதவைத் தாய்க்கு ஐந்து மகன்கள். வசதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் மூத்த மகன் பர்மு. அண்ணனுடன் ஒப்பிடும்போது தம்பி ஜீத்துவுக்கு வசதி குறைவு. மூன்றாவது மகன் ருக்மி ஏழ்மையில் தவிக்கிறார். நான்காவது மகன் ஹரி, மாமனாரின் வீட்டில் ஜாலியாக வாழ்க்கை நடத்துகிறார். கடைசி மகன் முன்னா நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இவர்களுடன் பிறந்த ஒரே பெண் கலாவதி. கணவனை இழந்தவள். அம்மாவின் பென்சன் பணத்தில் வாழ்க்கையை ஓட்டிவருகிறாள்.  இந்நிலையில் ருக்மிக்கு  ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்பது கனவு. அம்மாவிடமிருந்து 40 ஆயிரம் ரூபாயை சுருட்டி ஸ்கூட்டர் வாங்குகிறான்.

அந்த ஸ்கூட்டரை இரண்டு நண்பர்கள் ஓட்டிப் பார்க்கும்போது விபத்து ஏற்பட்டு, ஸ்கூட்டர் சுருங்கி சிறியதாகிவிடுகிறது. அம்மாவை ருக்மி ஏமாற்றிய விஷயம் மற்ற உடன்பிறப்புகளுக்குத் தெரியவர, வெடிக்கிறது நகைச்சுவை திரைக்கதை.இன்றைய குடும்ப உறவுகளுக்குள் நிகழும் சிக்கல்களையும், முதியவர்களின் நிராதரவான நிலையையும் அழகாக பதிவு செய்கிறது இப்படம். இதன் இயக்குநர் நாராயண் சவுகான்.