ராயா அண்ட் த லாஸ்ட் டிராகன்



இந்த வருடத்தில் வெளியாகி, வசூலைக் குவித்த அனிமேஷன் படம், ‘ ராயா அண்ட் த லாஸ்ட் டிராகன்’. ‘ஹாட் ஸ்டார்’ தளத்தில் தமிழில் காணக்கிடைக்கிறது.வளமான பண்டைய சாம்ராஜ்யம் குமாண்ட்ரா. தீய சக்திகள் சூறாவளி போல சுழன்று குமாண்ட்ராவை அழிக்கிறது. சூறாவளியில் சிக்கிய மனிதர்களும், டிராகன்களும் கல்லாக மாறிப்போகிறார்கள்.

கடைசியாக ஒரேயொரு டிராகன் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அந்தக் கடைசி டிராகன் ஒரு வைரத்தை உருவாக்கி சூறாவளியிலிருந்து  குமாண்ட்ராவைப் பாதுகாக்கிறது. குமாண்ட்ரா மீண்டெழுகிறது. ஆனால், டிராகனின் வைரத்துக்காக குமாண்ட்ரா மக்களிடம் சண்டை ஏற்படுகிறது. குமாண்ட்ரா ஐந்து பிரிவுகளாக உடைகிறது.  500 வருடங்கள் கழித்து சிறுமி ராயாவின் தந்தையிடம் டிராகன் வைரம் வந்து சேர்கிறது. ஐந்து பிரிவுகளில் நல்ல வளமிக்க பிரிவைச் சேர்ந்த குடும்பம் ராயாவுடையது. தந்தையிடமிருந்து டிராகன் வைரத்தைக் காக்கும் பொறுப்பை ராயா ஏற்கிறாள்.

இந்நிலையில்  மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வைரத்தை உடைத்து விடுகின்றனர். சிதறிய ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு பிரிவினர் எடுத்துச் சென்றுவிடுகின்றனர். ராயா எப்படி வைரத்தை மீட்கிறாள் என்பதே சாகச திரைக்கதை. குழந்தைகளுடன் கண்டு களிக்கலாம். இப்படத்தை கார்லோஸ் லோபஸ் எஸ்டரடாவுடன் இணைந்து டான் கால் இயக்கியிருக்கிறார்.

தொகுப்பு: த.சக்திவேல்