சிறுகதை - ஞானப்பல்



ஒரு சின்ன எவர்சில்வர் தட்டில் இரண்டு கைமுறுக்கும், இரண்டு கடலை உருண்டைகளும் வைத்து லதிகாவிடம் அம்மா நீட்டினாள்.வெளியில் போக முடியாத கொரோனா காலம். ஒர்க் ஃப்ரம் ஹோம் .லதிகா ஒரு கடலை உருண்டையை எடுத்து கடித்தாள். ஈறு  வலிப்பது மாதிரி இருந்தது. இரண்டு நாட்களாகவே கீழ் வரிசை இடது தாடையில் ஒரு பல் சொத்தையாகி ஆடிக் கொண்டிருந்தது.

லதிகாவிற்கு ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும். இந்த லாக் டவுன் வேளையில் வேலை செய்கின்றபோது இஷ்டத்திற்கு சாக்லேட்கள் உள்ளே போய்க் கொண்டே இருந்தது. விளைவு பல்லில் சொத்தை ஏற்பட்டதுதான் மிச்சம்.கடைவாய்ப்பல் ஒன்று ஆடுவது போல இருக்கவே நாக்கால் வேகத்துடன் தள்ளினாள். ஆள்காட்டி விரலைக் கொண்டு நெம்பினாள். ஈரம் பரவியது போல ஈறுகளில்  திரவம் போல ஏதோ பரவ நாக்கின் நுனியில் உப்புக் கரித்தது.லதிகா அச்சத்துடன் விரலால் பலம் கொண்ட மட்டும் நெம்பினாள்.

பாதி பூச்சி அரித்தது போல கடைவாய்ப் பல் ஒன்று ரத்தமும் சதையுமாக லதிகா கையில் மின்னியது.‘‘அம்மா...’’ பதறியபடி லதிகா நள்ளிரவில் விழித்துக் கொண்டாள்.

கனவு.ர்ர்ரூம்... ஏ சி மெஷினிலிருந்து சப்தம் துல்லியமாகக் கேட்டது.அம்மா எழுந்து விட்டாள்.லதிகாவின் முன் நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன.‘‘என்னடி கனவா?’’

லதிகாவுக்கு மனதில் கண்ட கனவு ஒருமுறை வந்து போனது. சட்டென்று கடைவாய்ப்பல்லைத்  துழாவினாள். கரிக்கவில்லை, வலிக்கவில்லை.
‘‘அம்மா! ஹாஸ்பிடலிலிருந்து இன்பர்மேஷன் ஏதாவது வந்ததாம்மா?’’

‘‘இல்லையே லதிகா. சொப்பனம் ஏதாவது கண்டியா?’’
அம்மாவிடம் அந்தக் கனவை நள்ளிரவில் சொல்லி பயமுறுத்த வேண்டுமா என்ற எண்ணம் தோன்றியது.
‘‘என்ன கனவுடி?’’சொல்லவில்லை.‘‘அப்பாவுக்கு ஏதாவது ஆயிடு மோன்னு அச்சமா? கனவில் மரணம் நிஜத்தில் பூர்ணாயுசு...’’ அம்மா எவ்வளவு நாசூக்காகக்  கூறுகிறாள் .
‘‘இல்லைம்மா. என் கடைவாய்ப்பல் ஒண்ணு விழறது மாதிரி சொப்பனம் வந்தது...’’அம்மாவிடம் இப்போது பேச்சில்லை. அந்தத் தடுமாற்றம் ஒரு நொடிதான். அம்மா உடனே திடமானாள்.
‘‘பைத்தியம்! எப்போதும் பல்லு விழும் கனவு வந்தால் யாராவது செத்துப் போவாங்கன்னு நினைக்காதே. உனக்கு டென்டிஸ்ட்டோட  ஒரு அப்பாயின்ட்மென்ட்  இன்னும் பெண்டிங்கில் இருக்கு. அதுதான் கனவா வந்திருக்கு. போய் நிம்மதியா தூங்கு...’’அம்மா உறங்கச் சென்று விட்டாள். லதிகாவிற்குத்தான் தூக்கம் கொள்ளவில்லை.

இதுபோன்ற நினைப்பை, மூட நம்பிக்கையை காலம் காலமாக எத்தனை குரூரமாக  மனதில் விதைத்து விடுகிறார்கள்.லதிகாவுக்கு பாட்டி என்றால் உயிர். பாட்டிக்கும் அவ்வண்ணமே. அம்மாவின் சொந்த கிராமத்தில் பெரிய அளவில் மருத்துவ வசதி இல்லாததால் அம்மாவின் முதல் பிரசவம் மாமியார் வீட்டிலேயே நடந்தது.  பிறந்த உடன் லதிகாவை பாட்டி தனது கைகளில் ஏந்தியதால் இருவருக்கும் உள்ள பந்தம் ஈடு இணையற்றது. லதிகாவிற்குப் பதினாலு வயதிருக்கும், ஒருநாள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாசிவ் அட்டாக் வந்து மருத்துவமனையில் சேர்த்தார்கள். பாட்டி இறப்பதற்கு முதல்நாள் இப்படித்தான் அம்மாவிற்கு தனது பல் ஒன்று விழுவது போல கனவு.

‘‘பல் விழறா மாதிரி கனவு வந்தால் உறவுக்காரங்க யாராவது தவறிப்  போயிடுவாங்கன்னு சொல்வாங்க...’’
அம்மா அந்த நேரத்தில் அப்படி சொல்லியிருக்க வேண்டாம். ஓரளவு நல்ல முறையில் தேறி  வந்த பாட்டி மறுநாள் மருத்துவமனையிலிருந்து வெறும் கூடாக வந்து சேர்ந்தாள்நெருங்கிய பந்துக்களின் மரணம் ஆழமான தடங்களைப்  பதித்து விடும். இதன் காரணமாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு மனஸ்தாபம் ஒரு வருடம் நீடித்தது.அதன் பிறகு வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கனவில் பற்கள் விழத் தொடங்கின. ஒவ்வொரு பல் வீழ்ச்சியும் தூரத்தில் அணுக்கத்தில் உள்ள உறவினர் களின் மரணத்திற்குக்  கட்டியம் கூறுவதாக அமைந்ததால் லதிகாவிற்கும் அவள் தங்கை மித்ராவிற்கும் அச்சத்தில் குலை நடுங்கும்.

அப்பாவின் அடிவயிற்றிலிருந்து ‘லத்திகா’ என்று கூப்பிடும் குரல் காதில் ஒலித்தது. லதிகா இல்லை லத்திகா என்று பெருமையாக சொல்லுவார். இவள் கல்ப லதிகாடி, அத்தனை உறுதியான கொடி என்று தலையைக் கோதி  விடுவார். அப்பாவிற்கு சின்ன வயதிலேயே லலிதா சஹஸ்ர நாமத்தைக் கரைத்துப் புகட்டியிருந்தாள் பாட்டி. எனவே இவள் கல்ப லதிகா, தங்கை மித்ர ரூபிணி. அப்பாவிடம் எந்த அளவிற்கு அன்பும் பாசமும் உண்டோ அந்த அளவிற்கு கண்டிப்பும் அக்கறையும் இருந்தது. அவர்கள் படிப்பின் மீது அவருக்கு இருந்த சரியான திட்டமிடல் காரணமாக இருவருக்கும் நல்ல தரமான கல்வி கிடைத்தது.

ஐ லவ் யூ டாடி.லதிகாவின் கண்களின் ஓரத்தில் கோர்த்த நீர் முத்துக்களை கோர்க்க கூந்தல் இழைகள் காத்திருந்தன.ஊரெல்லாம் கோர தாண்டவம் ஆடிய கொரோனா கிருமியின் இரண்டாவது அலையில் அங்கே இங்கே என்று மரணச் செய்திகள் காதில் விழுந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அப்பாவோ, ஒரு அம்மாவோ, ஒரு தாத்தாவோ, மாமாவோ, சித்தப்பாவோ, அத்தையோ கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இறந்த சேதி காதில் விழுந்த வண்ணம் இருந்தன. சமூக ஊடகங்களில் ஆயிரமாயிரம் ‘ஓம்ஷாந்தி’களும், ‘RIP’களும் கண்ணீர் எமோஜி
களுடன் போய்க் கொண்டே இருந்தன.

தனது வீட்டிலும் அது வரும் என்று லதிகா  நினைக்கவில்லை. அப்பா வெளிவேலையாக அலையாமல் இருக்கவே முடியாது.முதல்நாள் கனவுடன் லதிகாவால்  மறுநாள் நிம்மதியாக எழுந்திருக்க முடியவில்லை. அம்மா ஏற்கனவே எழுந்து சமையல்கட்டில் காபி போடுவதில் மும்முரமாக இருந்தாள்.  மித்ரா விற்கு ஆன்லைன் வகுப்புகள் இருப்பதால் அவளும் சீக்கிரம் எழுந்து விட்டாள். மூவரும் எப்போது எட்டைத் தொடும் என்று ஆவலுடன் வேலையில் ஈடுபட்டார்கள்.

மணி எட்டு என்று  மொபைல் காட்டியது.லதிகா டெஸ்க்டாப்பை  திறந்து காத்திருந்தாள். முதல் நான்கு நாட்கள் அப்பாவின் சிகிச்சை காரணமாக அவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. நான்கு நாட்கள் சென்ற பின்னர் ரகு சித்தப்பாவின் நெருங்கிய டாக்டர் நண்பர் மூலமாக இணைய வசதி மூலம் அப்பாவுடன் மின்திரையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அம்மா ஒரு எந்திரம் போல நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு கம்ப்யூட்டர் டேபிள் முன்னால் அமர்ந்தாள். எந்திரத்தனமாகத் தோன்றினாலும் அப்பாவிடமும் உடன் தோன்றும் டாக்டரிடமும் அம்மா அக்கறையுடன் கேட்கும் கேள்விகள் வியப்பை அளிப்பவையாக இருந்தன.

பத்து நிமிட ஜூம்  மீட்டிங்  முடிந்ததும் அம்மாதான் தூரத்தில் இருக்கும் அப்பாவின் உறவினர்களுக்கும், அம்மாவின் உறவினர்களுக்கும் தனித்தனியாக ஒருமணிநேரம் மொபைலில் கூப்பிட்டுச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்.‘‘அப்பாவிடம் பல் விழுந்த கனவைச் சொல்லாதே...’’ என்று அம்மா முதலிலேயே எச்சரிக்கை செய்தாலும் லதிகாவிற்கும் அதைச் சொல்லும் எண்ணம் இல்லை.‘‘குட் மார்னிங் அப்பா...’’ மித்ரா முந்திக்கொண்டுவிட்டாள்.அப்பா சிரித்தபடி காலை வணக்கம் சொன்னது சமாதானமாக இருந்தது. அப்பாவின் முகத்தில் வெண்ணிற தாடி மண்டிக் கிடந்தது. அப்பாவுக்கு எப்போதும் க்ளீன் ஷேவில் இருக்கத்தான் பிடிக்கும்.

‘‘ஷேவ் பண்ணிக்கணும்...’’ என்றார் சிறு பையனைப் போல.‘‘எல்லாம் வீட்டுக்கு வந்ததும் பார்த்துக்கலாம்...’’ அம்மாவின் முகத்திலும் சிரிப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.அப்பாவின் முகத்தில் கடந்த ஒரு வாரமாகத் தெரிந்த சோர்வும் வேதனையும் இல்லை.அம்மா அவரது உடலின் நிலை குறித்து விசாரித்தாள். அப்பாவின் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததது  குறித்து விசாரித்தாள். அப்பாவிற்கு உடலில் ஆக்சிஜன் அளவு நார்மலுக்கு பக்கம் வந்து விட்டதாகவும் இரண்டொரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய இருக்கும் சேதியையும் ரகு சித்தப்பாவின் சிநேகித டாக்டர் கூறினார். நோய்த்தொற்று சோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் எதிர்மறை முடிவு தெரிந்ததும் அனுப்பி விடுவதையும் கூறினார்.அப்பாவுக்கு மித்ரா காற்றில் முத்தம் கொடுத்ததும் லதிகா திரையை அணைத்தாள்.

அம்மா லதிகாவைப் பார்த்தாள். ‘என்னவோ பல்லு விழுந்த மாதிரி கனவு கண்டேன்னு சொன்னியே, இப்போ பாரு...’ என்பது போல லதிகாவிற்குத் தெரிந்தது.அம்மா இதுபோன்ற நேரங்களில் தெளிவாகவே இருக்கிறாள். உலகம் முழுவதும் பரவி வந்த நோய்த்தொற்றுக் கிருமி ஒருநாள் அவர்கள் இல்லத்தையும் பற்றும் என்று முன்கூட்டியே தீர்மானித்தது போலவே அம்மா செயல்பட்டாள். முதல் அலையில் நோய்த் தொற்று வந்த வீட்டை என்னவோ கிராமங்களில் சாதி நீக்கம் செய்வதைப் போல தகர ஷீட் எல்லாம் அடித்து ஒதுக்கி வைத்தார்கள்.

முதல் அலை சற்று ஓய்ந்ததும் மக்களிடம் கிருமி குறித்த ஜாக்கிரதை உணர்வு மட்டுப்பட இரண்டாவது அலையின் கோரத்தாண்டவம் அதி பயங்கரமாக இருந்தது.மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பத்  தொடங்கின. ஆக்சிஜன் சப்ளை குறையத் தொடங்கியது. கொத்து கொத்தாக மரணம் நிகழவே மக்களிடம் பீதி எகிறியது. உயிர்ப் பயம். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லோரையும் அள்ளிக் கொண்டு போனார்கள். அப்பாவையும் விட்டு வைக்கவில்லை.‘‘எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதுதான் பெரும்பாலான சங்கடங்களுக்குக் காரணம்...’’ என்று அம்மா எல்லோருக்கும் சேர்ந்து சமாதானம் செய்ததாள்.

அப்பாவிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தாலும் எந்த விஷயத்திலும் குறை காண்பவராக இருப்பது, வாழ்வில் பிடிமானம் இல்லாமல் ஒருவித விரக்தி யுடன் வாழ்வது போன்றவை அவரது நல்ல குணங்களை சில நேரங்களில் விழுங்கி விடும். பொதுவாக எல்லோருக்கும்  பிடிக்கும் ஒரு விஷயம் அவருக்குப் பிடிக்காது. ஒன்றுமில்லாத சினிமாவாக இருக்கட்டும், வாய்க்கு ருசியான தின்பண்டமாக இருக்கட்டும், வீடே பாராட்டினால் அப்பா அதில் ஏதாவது ஒரு குறையைக் கண்டு பிடித்துப் பந்தல் போடுவார். தனது நிறைவேறாத படிப்பு, விரும்பாத பணி, தன்னை விட நல்ல நிலையில் இருக்கும் சகோதர சகோதரிகள் என்று ஆயிரம் காரணங்கள்.

அம்மா ஒரு சிறந்த மென்டர். பலவிதமாக அப்பாவுக்கு நல்லது சொல்வாள். அம்மாவின் குரலுக்கு ஒரு சர்வதேச சமாதான த்வனி இருக்கும். அப்பா அதிலும் குறை காணுவார். அப்பாவின் குடும்பத்தில் மற்ற மருமகள்களைப்  போலன்றி, தான் பார்க்கும் அரசு உத்யோகம், எவ்வித கல்விக் கடனுமின்றி இரண்டு பெண்களும் நல்ல கல்வி பெற்றது, வசிக்கும் ஊரிலேயே லதிகாவிற்கு நல்ல வேலை கிடைத்தது என்று அவ்வப்போது அம்மா ஆயிரம் சமாதானம் செய்தாலும் அப்பாவின் குறை மனது நிரம்பவே நிரம்பாது.

‘‘எனக்குத் தெரியும். நீங்க நிச்சயமா குணமாயிடுவீங்க. தைரியமா இருங்க. சேர்த்திருக்கும் ஆஸ்பத்திரி நல்ல ஆஸ்பத்திரி. உங்க பெரியப்பா பிள்ளை ரகு தினம் போன் பண்ணி உங்களோட நோய் பற்றி சொல்லிண்டே இருக்கான். கொரோனா ரிசல்ட் கூட நெகட்டிவ் வந்திட்டா ரெண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்களாம்...’’ அம்மா தடுமாற்றமின்றி கோர்வையாகச் சொல்லி முடித்தாள். அம்மா பேசாமல் ஒரு நர்ஸாகப் போயிருக்கலாம். முடிவில் அம்மா புன்னகை செய்ய, அப்பாவும் லேசாகச் சிரித்தபடி தலையாட்டினார்.

இந்த ஒருவாரத்தில் அப்பா சிரிப்புடன் பேசி முடித்திருப்பது இதுதான் முதல் முறை. அம்மாவின் தைரியத்தில்தான் மொத்த குடும்பமும் நிற்பதாக லதிகாவிற்குத் தோன்றியது.
‘‘என்னடி புதுசா கட்டிப் பிடிச்சுக்கற?’’‘‘தோணித்து...’’சொன்னபடியே அப்பா நான்கு நாட்களில் வீட்டுக்கு வந்து விட்டார்.கறுத்து, இளைத்து கண்களின் அடியில் கருவளையங்களை வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தார்.அவர் தங்கியிருந்த வார்டில் இருந்த கொரோனா நோய்த்தொற்று நோயாளிகளின் நிலையை விஸ்தாரமாகச் சொல்ல ஆரம்பிக்க அம்மா இடை மறித்து தீர்மானமாக, தான் அந்தக் கதைகளைக் கேட்க விரும்பவில்லை என்று கூறிவிட்டாள்.

லதிகாவைப் பெண் கேட்டு போனில் விசாரித்த இரண்டு வரன்களைப் பற்றிக் கூறினாள். மித்ரா இரண்டாவது செம்மில் யூனிவர்சிட்டியில் முதலாவதாக வந்ததைக் கூறினாள். அரசு சம்பளக் கமிஷன் அவர்களது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதைச் சொன்னாள்.அப்பா பழையபடி வாக்கிங் போய்விட்டு வாசலில் மர நாற்காலியில் அமர்ந்து ஆங்கில செய்தித் தாளை விரித்து வைத்துக் கொண்டு அரசாங்க  நடவடிக்கைகளைத் தனது உரத்த குரலில் விமர்சிக்க ஆரம்பித்தார்.‘‘பார்வதி, உன் புருஷன் ஜெகன் நார்மலாயிட்டாரு. நான் கண்ட பல் விழுந்த சொப்பனத்தைக் கூறட்டுமா?’’ என்று லதிகா அம்மாவை சமையல்கட்டில் வைத்துக் கேட்டாள்.

அம்மா பெரிய கும்பிடு போட்டு லதிகாவைத் தடுத்தாள்.லதிகா அந்த வாரத்தில் ஒருநாள்  பல்மருத்துவரிடம் சென்று ஓட்டை விழுந்த பல்லில் சிமெண்ட் அடைத்துக் கொண்டு வந்தாள். கனவுகளில் பல் விழுவது பற்றியும் அதனோடு தொடர்புடைய மரணம் குறித்த மூடநம்பிக்கையையும் கூறினாள். பல் மருத்துவர் வசீகரமாகச் சிரித்தபடி, எண்ணங்களின் வலிமையைக் குறித்துப் பேசினார். மனம் எளிதில் தீமை தரும் விஷயங்களை உடனே நம்பிவிடும் தன்மையையும் கூறினார்.

அன்றிரவு அப்பா நெஞ்சில் லேசாக எரிச்சல் இருப்பதாகக் கூறியதும் லதிகாவை மீண்டும் பயம் தொற்றிக்கொண்டது. மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு அன்று கொஞ்சம் அதிகம் சாப்பிட்டது காரணமாக இருக்கும் என்று அம்மா சமாதானம் கூறிவிட்டு மோரில் கொஞ்சம் பெருங்காயம் கலந்து கொடுத்தாள். வீட்டில் இப்போது புதிதாக வாங்கியிருக்கும் இரத்த அழுத்தம் பார்க்கும் கருவியில் அவரது இரத்த அழுத்த அளவுகள் இரண்டும் சரியாக இருப்பதைக் காட்டி விட்டு அப்பாவைப் படுத்துக் கொள்ளச் சொன்னாள். அப்பா நிம்மதியாக உறங்கப் போனார்.

அப்பா நல்லவிதமாக மருத்துவமனையில் வந்து சேர்ந்ததற்கு சாமிக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்களை முடித்து விட்டு அவருக்கு மிகவும் பிடித்த பொருள்விளங்கா உருண்டை பிடித்து வைத்தாள்.லதிகா சமையல்காட்டிற்குள் நுழைந்து எவர்சில்வர் சம்படத்திலிருந்து ஒரு பொருள்விளங்கா உருண்டையை எடுத்துக் கடித்தாள்.கடக்.ஈறுகளில் பயங்கர வலி. ஆள்காட்டி விரலால் கடைவாய்ப் பற்களைச் சோதித்தாள்.‘‘அம்மா...’’அம்மா அருகில் வந்து நின்றாள். மணி அதிகாலை ஐந்தரையைத் தாண்டியிருந்தது.

‘‘அப்பா எங்கம்மா?’’
‘‘சீக்கிரமே எழுந்து வாக்கிங் போய்விட்டார்...’’லதிகாவின் முன் நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன.
‘‘என்னடி திருப்பியும் சொப்பனமா?’’
லதிகா ஒருமுறை முழுக் கனவையும் நினைவூட்டிக் கொண்டாள்.

‘‘பல் கனவா?’’
‘‘ஆமாம். ஆனா, இது வேறு மாதிரி...’’
‘‘என்ன வேற மாதிரி?’’
‘‘ஆமாம். ஆனா, ரெண்டு கடைவாய் ஓரத்திலும் இரண்டு பல் முளைப்பதாகக் கனவு...’’

நாக்கினால் இரண்டு கீழ்க்கடைவாய் ஈறுகளைத் துழாவினாள். வலிக்கவில்லை. உப்புக்கரிக்கவில்லை. மாறாக இரண்டு பால்முளைப்  பற்கள் ஈறுகளை வெடித்துக் கிளம்பியிருந்தன.
அம்மா லதிகாவின் தலையைக் கோதிவிட்டு, ‘‘சிலபேருக்கு இருபத்திரண்டு வயதிலும் பல் முளைக்கும்...’’ என்றாள்.‘‘என்னது?’’
‘‘ஞானப்பல்!’’ என்று அம்மா கூறியதும் இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

 - சத்தியப்பிரியன்