ஏன் வருகிறது செவ்வாய் தோஷம்?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


                      ‘‘எத்தனை வரன் வந்தாலும் தட்டிக்கிட்டே போகுது. கேட்டா செவ்வாய் தோஷம்னு சொல்லி ஜாதகத்தைத் திருப்பிக் கொடுத்துடறாங்க’’ என்று கவலைப்படும் பெற்றோர்கள் எத்தனையோ ஆயிரம். ‘அதென்ன செவ்வாய் தோஷம்’ என்று பார்ப்பதற்கு முன்பு நாம் செவ்வாயைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. அப்போதுதான் செவ்வாய் தோஷம் திருமணத்திற்கு மட்டும்தான் பார்க்கப்படுகிறதா அல்லது இன்னும் அதற்குள் என்னென்ன விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்பது புரியும்.

நவக்கிரகங்களில் சூரியன் மற்றும் குருவுக்கு அடுத்தபடியான முழுமையான ஆண் கிரகம் செவ்வாய்தான். அங்காரகன் என்று இவரை ஆசையோடு அழைப்பர். இவரை ஆள்பவரே முருகப் பெருமான்தான். பூமிகாரகன் எனும் நிலங்களுக்கு அதிபதியும் இவர்தான். உடலில் ஓடும் ரத்தம் இவருக்குரியது. அதனாலேயே ரத்த பந்தமான சகோதர உறவுக்கும் உரியவராக இருக்கிறார். நிறங்களில் சிவப்பாக இருக்கிறார். சாம்ராஜ்யங்களை உருவாக்குவதும், உருக்குலைய வைப்பதுமே இவரின் முக்கிய பணி. முக்கோணம்தான் செவ்வாயின் சின்னம். ஆயுதம் ஏந்தும் காவலும் ராணுவமும் இவரின் இரு கண்கள்.

ரோஷத்தையும் ஆக்ரோஷத்தையும் கொடுப்பவர் இவர். கூடவே சபதமும் சவாலும் இவருக்குப் பிடித்தமானவை. வீரமும் தீரமும் இவரின் உயிர்நாடி. பழிக்குப் பழிதீர்த்தலில் வேகமாக வெளிப்படுவார். விரோதத்தையும் குரோதத்தையும் தோற்றுவிப்பவரும் இவரே. ஆளுமையிலும் அதிகாரத்திலும் திருப்தி காண்பவர். மறியல், கண்டனம், ஆர்ப்பாட்டம் எல்லாம் செவ்வாயின் செல்ல விளையாட்டுகள். தன்மானம், இன உணர்வு போன்றவற்றைத் தட்டியெழுப்பி மறுமலர்ச்சி காண்பவர். பொதுவுடைமை பேசும் பெரியவரும் இவர்தான்.

மஞ்சு விரட்டு முதல் ஆகாய சாகசங்கள் வரை எல்லா வீர விளையாட்டுக்களிலும் பொழுதினைப் போக்குவார். மரங்கள் இல்லாத மலையை ஆள்கிறார். வேர் அதிகம் பாயாதும் பார்த்துக் கொள்கிறார். விலங்கில் ஆட்டுக் கிடாவாக வலம் வருகிறார். தானியங்களில் துவரையாக உள்ளார். ரத்தினங்களில் பவழமாக ஜொலிக்கிறார். பூக்களில் செண்பகமாக மணக்கிறார். மரத்தில் கருங்காலியாக உள்ளார். உலோகத்தில் செம்பு இவரின் அம்சம். மின்சாரத்தின் சக்தியும் செவ்வாய்தான். ருசிக்குள் பாக்கின் துவர்ப்பாக உள்ளார். பட்சியில் அன்னப் பறவையாக அழகூட்டுகிறார். ஆணின் மர்ம ஸ்தானத்தில் வீர்யமாக உறைகிறார்.

இவையே செவ்வாயின் காரகத்துவங்கள். அதாவது மண்ணின் மீதும், மனிதர்களின் மீதும் ஓயாது ஆட்சி செலுத்துதலும், உணர்வுரீதியாகவும் ஆதிக்கம் செலுத்துதலும் அவரது அம்சங்கள். செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் உங்களை யாரும் எளிதில் வீழ்த்த முடியாது. செயற்கரிய செயல்களைச் செய்து வரலாற்றில் இடம்பிடிக்க வைப்பார். பிரபலங்கள் பிரமிக்கிற அளவுக்கு உங்கள் நடவடிக்கை அமையும். மன எழுச்சிக் கிரகமாக செவ்வாய் இருப்பதால், சட்டென்று எதிர்த்துக் கேள்வி கேட்பீர்கள். அங்கீகாரம் தேடி அலைந்தபடி இருப்பீர்கள். பத்தோடு பதினொன்றாக வாழ்க்கையை நடத்துவதற்கு பதில் வீழலாம் என்று நினைப்பீர்கள். இளம்வயதிலேயே ‘அப்பா, இது எனக்குத்தானே... நானே வச்சுக்கட்டுமா’ என்று உரிமை கோர வைப்பார்.

இப்படிப்பட்ட வலிமையுள்ள செவ்வாய் உங்களுக்கு தோஷத்தைத் தருவாரா அல்லது சந்தோஷத்தைத் தருவாரா என்று பார்ப்போமா...

பொதுவாக தோஷம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஏதோ மாபெரும் தவறு நடந்து விட்டதாக கலங்குகின்றனர் பலர். ‘தோஷ ஜாதகமா’ என்று கேட்டால் குற்ற உணர்வு அவரைச் சூழ்கிறது. தோஷம் என்றால் இயல்பு நிலையிலிருந்து மாறுபடுதல் என்று பொருள். இங்கு மாறுபடுதல் என்பது கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ செவ்வாய் தன்னை வெளிப்படுத்துவதையே குறிக்கும்.

கம்பியில் சீராக மின்சாரம் போகிறது. மின் சாதனங்கள் பழுதடையாது இயங்குகின்றன. சட்டென்று வோல்டேஜ் கூடுகிறது; அல்லது குறைகிறது. சட்டென்று மின் சாதனங்கள் பழுதடைகின்றன. இதே விஷயத்தைத்தான் ஜாதகத்தில் தோஷம் என்கிறார்கள். கிரகங்களின் கதிர்வீச்சுகளில் நிகழும் மாற்றங்களாலேயே தோஷம் ஏற்படுகிறது. இது செவ்வாய் கிரகத்தால் ஏற்படும்போது செவ்வாய் தோஷம் என்கிறோம்.

ஏன் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உண்டாகிறது?

ஒரு தொழிலதிபரும் அவரது கல்லூரித் தோழரும் இணைந்து தொழில் தொடங்கினர். சமமாக முதலீடு செய்தார்கள். தொழில் நன்றாக வளர்ந்தது. சில கோடிகளை பங்காக பிரித்துக் கொண்டார்கள். தோழருக்கு பேராசை அதிகமாகியது. எப்படியாவது நண்பரைப் பிரித்து வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டார். ‘உனக்கும் எனக்கும் ஒத்துவராது போ’ என்று சண்டை போட்டார். ‘என்னுடைய உழைப்புதானே இதில் அதிகம்’ என்று தொழிலதிபர் உண்மையை எடுத்துப் பேசியும் பிரச்னைதான் அதிகமானது. போதாக்குறைக்கு தொழிலாளர்களையும் தன் பக்கம் வளைத்தார். ஒரு வருடத்திற்குள் அந்தத் தொழிபதிபர் தொழிற்சாலையை விட்டு வெளியேறினார். ‘‘என்னுடைய மொத்த உழைப்பையும் அந்த கம்பெனிக்குள்ள கொட்டியிருக்கேன் ஸார்... இப்படி என்னை உறிஞ்சு தூக்கிப் போட்டுட்டாங்களே’’ என்று குமுறினார். நானும் அவரது தோழரிடம் பேசிப் பார்த்தேன். ஒன்றும் பயனில்லை. வருடங்கள் உருண்டோடின.

அந்தத் தொழிலதிபரை ஏமாற்றியவர் ஒருநாள் என் அலுவலகத்திற்கு வந்தார். அவரின் இரண்டு பையன்களின் ஜாதகத்தையும், இரண்டு பெண்களின் ஜாதகத்தையும் காண்பித்தார். நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரின் நான்கு பிள்ளைகளுக்கும் செவ்வாய் எட்டில் மறைந்திருந்தது. மேலும் அவரே, ‘‘பெரியவனுக்கு ரத்தம் உறையாத ஒரு நோய் இருக்கு. சின்னவனுக்கு ஹீமோகுளோபின் குறைபாடும் இருக்கு. ரெண்டு பேருக்கும் கல்யாணத்துக்கு பார்த்துக்கிட்டிருக்கேன். பொண்ணுங்களுக்கும் கல்யாணத்தை முடிக்கணும்’’ என்று கவலையோடு பேசினார். 

கத்தரிக்காய் சாப்பிட்டால் நமைச்சல் எடுக்கும். உருளைக்கிழங்கு உண்டால் வாயுத் தொந்தரவு. அடுத்தவர் சொத்தையும், உழைப்பையும் சுரண்டினால் வாரிசுகளுக்குத்தான் தோஷங்கள் சேர்கின்றன. மலர்களையும், அருவிகளையும் நினைத்தால் மனதிலும், உடம்பிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அடுத்தவரை ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மனதிலும், உடம்பிலும், அறிவியல் சொல்லும் ஜீன்கள் வரையும் சென்று பதிகிறது. அந்தப் பதிவு அடுத்த தலைமுறையின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தோடு பிறக்க வைக்கிறது. ‘பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்’ என்று இதைச் சூட்சுமமாகச் சொல்லியிருக்கிறாள் ஔவைப் பாட்டி. கிராமத்திலும் கூட, ‘வஞ்சித்தார் வாழ்ந்தாலும், வஞ்சித்தார் வாரிசுகள் வாழ்வது அரிது’ என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனார்கள். ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருந்தாலும் உண்மை அப்படித்தான் இருக்கிறது.

உடனே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், தங்களை மகா பாவிகள் என்று எண்ண வேண்டாம். தந்தையின் ஜாதகத்தைப் பார்த்தாலே, வாரிசுகள் செவ்வாயின் பலம் குன்றித்தான் பிறப்பார்கள் என்று கூட சொல்ல முடியும். மேலே சொன்னது கடுமையான செவ்வாய் தோஷத்திற்கான உதாரணம்; அவ்வளவே! செவ்வாய் தோஷமே ஒரு செயலின் ஒரு விளைவு... அவ்வளவுதான். இதைத்தான் இந்து மதம் ‘கர்மா’ என்கிறது. ஜோதிடம், ‘பூர்வ புண்ணியம்’ என்றும், ‘கர்ம வினை’ என்றும் இந்த விஷயத்தை மிக விரிவாக அலசுகிறது. இதனால்தான் ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவரின் வாரிசுகள் எப்படியிருப்பார்கள் என்று ஜோதிடர்களால் சொல்ல முடிகிறது.

‘‘ஐயா... என் பையனுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு. எனக்கு தெரிஞ்சு நான் யாரையும் ஏமாத்தினது இல்லை. அப்படியிருக்கும்போது எப்படி செவ்வாய் தோஷம் வரும். நான் பண்ணாத பாவத்துக்கோ அல்லது அப்படியே நான் பண்ணின பாவத்துக்கோ கூட என் பையன் எப்படி தண்டனை அனுபவிக்கலாம்’’ என்று கேள்வி எழலாம்.

செவ்வாய் ராசியிலிருந்தோ அல்லது லக்னத்திலிருந்தோ எங்கிருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் தோஷத்தின் தீவிரம் தெரியும். இந்த தோஷம் எந்தெந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும், திருமணத்திற்கு மட்டும் ஏன் செவ்வாய் தோஷத்தை பார்க்கிறார்கள் என்பதையும், இந்த சிக்கலை எளிதாகத் தீர்க்கும் பரிகாரங்களையும் அடுத்த வாரம் சொல்கிறேன்.
(தீர்வுகளைத் தேடுவோம்...)
முனைவர் கே.பி.வித்யாதரன்