வாழ்க்கை வேண்டும்... காதல் வேண்டாம்..! தப்ஸி



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



             
        அன்றிலிருந்து இன்றுவரை பனி படர்ந்த லொகேஷன்களில் படமெடுக்கும்போது ஹீரோவுக்கு கதகதப்பான உடை தரும் காஸ்ட்யூமர்கள், ஹீரோயினை மட்டும் ‘ஆள்பாதி, ஆடைபாதி’யாகத்தான் தவிக்க விடுகிறார்கள். இதிலிருந்து பாவம், தப்ஸியும் தப்பவில்லை..!

வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிக்கும் ‘வந்தான் வென்றான்’ படத்தின் பாடல் ஒன்றுக்காக சுவிட்சர்லாந்து போனபோது தப்ஸியும் இப்படி பாதி உடைக்குத் தப்பாமல் மாட்டிக் கொண்டாலும், நிலைமையை சமாளித்து நடித்த கதையைச் சொன்னார் படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன்.

‘‘படத்தில அஞ்சு பாடல்கள். ஒரு பாடலை கோவாவில எடுத்தோம். இன்னொரு பாடலை கர்நாடகா பாதாமியில ஷூட் பண்ணினோம். மூணாவது பாடலை புதுச்சேரியிலும், நாலாவது பாடலை மும்பையிலும் எடுத்தோம். இதெல்லாம் ஏற்கனவே ப்ளான் பண்ணியபடியே முடிஞ்சது. அஞ்சாவது பாடலுக்கு ஸ்விஸ் போன காரணம், எங்க ஹீரோ ஜீவா. படத்துக்கு ஒப்பந்தம் செய்யும்போது இருந்த இடத்தைவிட இப்போ உயரத்துக்குப் போயிட்டார். அவருக்காக எங்கள் கட்டுகளை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணியப்ப, வெளிநாடு போகிற திட்டம் வந்தது. அதேபோல மும்பை பாடலையும் கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு ‘ஹியூமன் பிரமிட்’னு சொல்லக் கூடிய பத்தடுக்கு மனித பிரமிட் உச்சியில ஜீவாவை வச்சு 100 டான்சர்களோட பிரமாண்டமா எடுத்தோம்.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில எஸ்.தமன் இசைச்சிருக்க பாடல்கள் இந்த வருஷ ஹிட்லிஸ்ட்ல இருக்கும். அதுல ஒண்ணுதான் ஸ்விஸ்ல எடுத்த ‘அஞ்சனா... அஞ்சனா...’ங்கிற யுகபாரதியோட பாடல். ஜீவாவோட முந்தைய சூப்பர் ஹிட்டான ‘என்னமோ ஏதோ...’வைப் பாடிய ஆலாப் ராஜு பாடிய ரெண்டாவது பாடல் இது.

ஸ்விஸ்ல மேற்படி பாடலை மூணுவிதமான லொகேஷன் கள்ல எடுத்தோம். மூணு லொகேஷன்கள் லயும் தப்ஸிக்கு விதவிதமான காஸ்ட்யூம்கள் இருக்கு. அதில ஒண்ணுதான் வான் நீலத்தில இருக்கிற காஸ்ட்யூம். நாகரிகமான உடைன்னாலும் அங்கே இருந்த மைனஸ் டிகிரி குளிருக்கு அதெல்லாம் போதவே இல்லை. ஸ்விஸ் தலைநகரான ‘பெர்ன்’ங்கிற அந்த லொகேஷன் ஒரு மலைப் பகுதியானதால, கேரவனெல்லாம் போக முடியாது. அதனால தப்ஸிக்கு ஒரு காரும், பிளாஸ்க்கும் ஏற்பாடு பண்ணியிருந்தோம். நடிச்சு முடிச்சதும் காருக்குள்ள ஓடிப்போய் கண்ணாடியை உயர்த்திவிட்டு கதகதப்பாக்கிக்கிட்ட தப்ஸிக்கு, அந்த பிளாஸ்க் நிறைய ஹாட் டீ போட்டுத் தருவாங்க. அதைக்குடிச்சு குளிரைப் போக்கிட்டு அடுத்த ஷாட்டுக்கு வெளியே வருவாங்க.

ஆனாலும் தப்ஸியோட மன உறுதி அசாத்தியமானது. ஒரு நாள் அப்படி கதகதப்பு தேடி காருக்குள்ள போனாங்கன்னாலும், மத்த ரெண்டு நாளும் குளிரை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு எங்களோடவே இருந்து பழகிட்டாங்க. அதேபோல தமிழ் தெரியாத பஞ்சாபிப் பெண்ணா இருந்தாலும், ஒரு சீனுக்குக் கூட ‘ப்ராம்ப்ட்’ கேக்காம எல்லா வசனங்களையும் முன்னாடியே மனப்பாடம் செஞ்சு தப்பில்லாம பேசி அசத்தினாங்க. அதிலும் காதலைப் பத்தி கேட்கிற ஜீவாகிட்ட, வாழ்க்கையை நேசிச்சும் காதலை நேசிக்காத தன்னோட மன நிலையை தத்து வார்த்தமா தப்ஸி சொல்றதுபோல எழுதியிருந்தேன். அதை அற்புதமா பேசி முடிச்சப்ப அசந்து போனேன். படத்தில தப்ஸிக்கே பிடிச்ச சீன் அதுதான். குடும்பத்தோட ஷூட்டிங்குக்கு வர்ற நடிகைகள் மத்தியில, உலகத்தில எந்த மூலைன்னாலும் தனியாவே வந்து தனியாவே போற தப்ஸிக்கு பெரிய இடம் காத்திருக்கு..!’’
 வேணுஜி