ஜவுளிக்கும் எண்ணெய்க்கும் வரி... மக்களுக்கு அடிமேல் அடி!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



             
        அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், அவசரகதியில் சிகரெட், மது, புகையிலை வரிசையில், சமையல் எண்ணெய், துணி வகைகளுக்கும் கூடுதல் வரிகளை விதித்திருக்கிறது தமிழக அரசு. இதுவரை வரிவிலக்குப் பட்டியலில் இருந்த துணிவகைகளுக்கு இப்போது 5 சதவிகித வாட் வரி விதிக்கப்பட்டிருப்பது கொதிப்பை உருவாக்கியுள்ளது.

நூல்விலை உயர்வு, மின்தடை, சாயப்பட்டறை விவகாரம், மத்திய அரசின் கலால்வரி போன்ற பிரச்னைகளால் ஏற்கனவே அல்லலில் இருக்கும் ஜவுளித் தொழிலை தமிழக அரசின் இந்த வரிவிதிப்பு முற்றிலும் முடக்கி விடும் என்கிறார்கள் ஜவுளி உற்பத்தியாளர்கள். இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் மட்டுமே இப்போது ஜவுளிக்கு இப்படி வாட் வரி நடைமுறையில் இருக்கிறது.

‘‘ஜவுளிக்கு தமிழகத்தில் இதுவரை வரி போட்டது இல்லை. புதிதாக வரிபோடும் முன்பாக அதுசார்ந்த சங்கங்கள், உற்பத்தியாளர்களைக் கலந்து பேச வேண்டும். கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலிருந்து நமக்கு ஆர்டர் வருகிறது. குறைந்த விலையில் கிடைப்பதால்தான் நம் மாநிலத்துக்கு வருகிறார்கள். இந்த வரிவிதிப்பால், அந்த ஆர்டர்கள் பறிபோய்விடும். பவானி ஜமுக்காளம், சென்னிமலை டெக்ஸ்டைல்ஸ் எல்லாம் இப்போதே சரிவைச் சந்திக்கத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் 20 லட்சம் பேர் ஜவுளித்தொழிலை நம்பியிருக்கிறோம். சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இந்த வரி விதிப்பு எல்லாவற்றையும் குலைத்துவிடும். பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்’’ என்கிறார் ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன்.

‘‘சேலை முதல் பனியன் வரை எல்லா துணிகளுமே 10 முதல் 15 சதவீதம் விலை உயரும் ஆபத்து உள்ளது. அரசின் அறிவிப்பில் நிறைய குழப்பம் இருக்கிறது. ஜவுளி வகைகள் என்றால் அதில் என்னென்ன துணிகள் அடங்கும் என்று தெளிவாகச் சொல்லவில்லை. கைத்தறிக்கு மட்டும் விலக்கு என்கிறார்கள். இலவச வேட்டி சேலையையே பல பகுதிகளில் விசைத்தறிகளில்தான் நெய்கிறார்கள். மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் இந்த வரிவிதிப்பு உள்ளது. இதை உடனடியாக வாபஸ் பெற்று ஜவுளித்தொழிலைக் காக்க வேண்டும்’’ என்கிறார் தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனப் பொதுச்செயலாளர் முத்துக்குமார்.நெசவுத்தொழிலில் பல்லாயிரம் மக்களின் வாழ்க்கை இருக்கிறது. வரி விதிப்பால் கிடைக்கும் கோடிகளைவிட மக்களின் சாபத்துக்கு சக்தி அதிகம்!

எண்ணெய் விலையும் விர்ர்!

சமையல் எண்ணெய்க்கும் வரி வந்திருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், ‘‘கடலை எண்ணெய் தவிர பிற ஆயில்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி ஆகின்றன. குரூடாயிலாக இறக்குமதி செய்து இங்கே ரீஃபைண்ட் செய்யப்படுகிறது. வரியால் 10 சதவிகிதம் விலையேறும். இதுதான் யதார்த்தம். பாமாயில், சன்ஃபிளவர், நல்லெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எண்ணெய்களும் விலை ஏறிவிட்டன. இது நடுத்தர மக்களின் மேல் விழுந்த எதிர்பாராத அடி...’’ என்கிறார். குடும்பத்
தலைவிகளும் குமுறுகிறார்கள்...
நிர்மலா, காஞ்சிபுரம்

எண்ணெய், துணி இரண்டும் அத்தியாவசியமானவை. வரி விதிப்பால் உடனடியாக விலை உயர்ந்துவிட்டது. இதனால் பெண்களுக்குத்தான் அதிக பாதிப்பு. முதல்வரும் ஒரு பெண். பெண்களின் கஷ்டத்தை அவர் புரிந்துகொள்ள வேண்டும். 
            சத்யா, தண்டலம்

சும்மாவே விலைவாசி ஏறிக்கிட்டிருக்கு. இப்போ இதுவேற... புள்ளை குட்டிகளை வச்சுக்கிட்டு எப்பிடி பிழைக்கிறதுன்னு தெரியலே. விலை ஏர்ற மாதிரி கூலி மட்டும் ஏறமாட்டேங்குது.
        சுமதி சேகரன், தஞ்சாவூர்

கொஞ்சநாள்ல பட்ஜெட் வரப்போகுது. அதுக்குள்ள தனியா வேற வரி. சிகரெட், புகையிலைக்கு எல்லாம் வரி போட்டது சரிதான். எண்ணெய்க்கும் துணிக்கும் போட்டா என்ன நியாயம்? ஏழைங்க எப்பிடி பிழைக்கிறது?
        அமுதா மோகன், மெலட்டூர்

எந்தத் தகவலும் இல்லாம திடீர்னு வரி போட்டா எப்பிடிங்க? போன வாரம் 85 ரூபாய்க்கு கடலை எண்ணெய் வாங்குனேன். இன்னைக்கு 90 ரூவா. இப்பிடியே போனா எப்படி குடும்பம் நடத்துறது? ஓட்டு போட்ட மக்களுக்கு இது தண்டனை போலிருக்கு...
 வெ.நீலகண்டன்
படங்கள்: பாஸ்கரன், சி.எஸ்.ஆறுமுகம்