ரெட்டை வில்லி!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



             
          கிருத்திகாவின் வார்ட்ரோப் புதுப்புது புடவைகளாலும் விதம்விதமான நகைகளாலும் நிரம்பி வழிகிறதாம்!

‘‘செல்லமே சீரியல்ல என் கேரக்டர் அப்படி... ஷாப்பிங்னா எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி. ஆடம்பரமா டிரஸ் பண்ற கேரக்டர் அமைஞ்சது இன்னும் வசதியாப் போச்சு. சீரியலுக்குன்னு சொல்லிச் சொல்லியே வாங்கிட்டிருக்கேன்ல...’’ எனச் சிரிக்கிறவர், ‘செல்லமே’, ‘முந்தானை முடிச்சு’ என இரண்டு தொடர்களிலும் படு பயங்கர வில்லி!

‘‘வீட்டுக்குப் பக்கத்துல நடந்த ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கப் போனப்ப, என்னைப் பார்த்துட்டு, ‘நல்ல உயரமா இருக்கியே... நடிக்கிறியா’னு கேட்டாங்க. ‘ஆண்டான் அடிமை’ படத்துல சத்யராஜ் சார் தங்கச்சியா பண்ணினேன். அப்ப நான் பிளஸ் ஒன்... தொடர்ந்து நடிச்சா படிப்பு போயிடும்னு அதோட நிறுத்திக்கிட்டேன். காலேஜ்ல ஒரு கல்ச்சுரல்ஸுக்கு திருமுருகன் சார் வந்திருந்தார். அவர் ‘மெட்டி ஒலி’ல நடிக்கக் கேட்டார். மறுபடி ‘ஸ்டார்ட்... கேமரா... ஆக்ஷன்...’’ என்கிற கிருத்திகா செகண்ட் ரவுண்டில் செம பாப்புலர்!

‘‘இதுவரை எத்தனையோ சீரியல்ல நெகட்டிவ் கேரக்டர் பண்ணிருக்கேன். இப்ப ஒரே நேரத்துல ஒரே சேனல்ல ரெண்டு சீரியல்ல, ரெண்டு விதமான நெகட்டிவ் கேரக்டர்... வெளில தலைகாட்ட முடியலை. காளிகாம்பாள் கோயிலுக்கு சாமி கும்பிடப் போயிருந்தேன்... ‘பண்றதை எல்லாம் பண்ணிட்டு, நல்லவ மாதிரி சாமி கும்பிட வந்துட்டா பாரு’னு என் காதுபட பேசிக்கிறாங்க. சிரிப்பு ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம்னு ரொம்ப தர்மசங்கடமாப் போச்சுங்க...’’ & படபடப்பாகச் சொல்கிறவரின் கழுத்தில் பளபளக்கிறது புது மஞ்சள் தாலி!

‘‘மே 13&ம் தேதிதான் அருணுக்கும் எனக்கும் கல்யாணமாச்சு. அரேன்ஜ்டு மேரேஜ். ஹனிமூன்கூட பிளான் பண்ணலை. ஒருநாள் ஷூட்டிங், ஒருநாள் விருந்துனு ஓடிக்கிட்டே இருக்கேன். நாலு நாள் தொடர்ச்சியா லீவு கிடைச்சா போதும்... நானும் அருணும் எஸ்கேப் ஆயிடுவோம்...’’
 பாவமாகச் சொல்லுது புதுப்பொண்ணு!

குறிஞ்சி கொடி!

சன் டி.வியில் ‘சூப்பர் டென்’ நிகழ்ச்சியில் அறிமுகமாகி, இப்போது நடிகர் அவதாரம் எடுத்திருப்பவர் மிமிக்ரி கலைஞர் குறிஞ்சி. ‘முந்தானை முடிச்சு’ தொடரின் மூன்று ஹீரோக்களில் ஒருவர். எல்லா நாளும், எப்போதும், சட்டையில் தேசியக் கொடியுடன் வலம் வரும் பழக்கம் உள்ளவர்.

‘‘பத்து வருஷமா இப்படி! சும்மா சீன் போடறதுக்காக பண்ணலை. நிஜமாவே எனக்கு தேசப்பற்று அதிகம். யார், என்ன கிண்டலடிச்சாலும் காதுல வாங்க மாட்டேன். ‘முந்தானை முடிச்சு’ல எனக்கு ரவுடி கேரக்டர். அதனால டைரக்டர் கொடி வேண்டாம்னுட்டாரு. தாய்நாடு மேல எனக்குள்ள அக்கறையை, அன்பை வெளிப்படுத்த ஏதோ என்னால முடிஞ்ச சின்ன விஷயம்...’’ & என சிலிர்க்க வைக்கிறார் கொடி குத்திய குறிஞ்சி!

திருந்தவே மாட்டியா?

‘‘யாரைப் பார்த்தாலும், ‘ஏன்யா இப்படி அநியாயம் பண்றே... திருந்தவே மாட்டியா’னு கேட்டுட்டுத்தான் அடுத்த வார்த்தை பேசறாங்க. துக்கம் விசாரிக்கப் போற இடத்துலகூட அட்வைஸ்தான்...’’ என்கிறார் ‘திருமதி செல்வ’த்தில் நடிக்கிற ராமச்சந்திரன்.

சாருக்கு ஆஸ்கர் வாங்கியது போன்ற சந்தோஷம்! ‘பிரமாதமா நடிக்கிறடா...’ என இயக்குனர் பாலச்சந்தர் பலமுறை பாராட்டியதே காரணம். ‘‘எந்த ஒரு மனுஷனோட வெற்றிக்கும் அவனோட குடும்பத்துக்கு பெரிய பொறுப்பு உண்டு. அது எனக்கு அமைஞ்சிருக்கு. என் ஒரே மகன் அண்ணா யுனிவர்சிட்டில ஐடி படிக்கிறான். தொடர்ந்து முதல் அஞ்சு ரேங்க்ல வர்ற அளவுக்குப் பிரமாதமா படிக்கிறவன். நச்சரிக்காத, அன்பான மனைவி... இதுக்கு மேல என்னங்க வேணும்...’’  பெருமையாகச் சொல்கிறார் ராமச்சந்திரன்.
 ஆர்.வைதேகி
படங்கள்: புதூர் சரவணன்