பட்டம் பார்த்திபன்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


                         ‘‘என்ன படிச்சிருக்கீங்க?’’

இப்படிக் கேட்டதும் பதினைந்து வரிகள் வருகின்றன பார்த்திபன் பெயருக்குப் பின்னால்! இளங்கலை, முதுகலைப் பட்டங்கள், பட்டயங்கள் என 94 படிப்புகளைத் தொட்டுவிட்ட பேராசிரியர் பார்த்திபனை ‘பட்டம் பார்த்திபன்’ என்றே அழைக்கிறார்கள்! சீக்கிரமே நூறு பட்டங்கள் வாங்கிய பெருமையைப் பெறப் போகிறார் இவர்.

‘‘சென்னை கொடுங்கையூர் பூர்வீகம். தாத்தா பாட்டி காலம் படிப்பு வாசமே இல்லாதது. அப்பாவும் அம்மாவும் பள்ளிக்கூடத்துல பாதிகூடத் தாண்டாதவங்க. வீட்டுக்கு மூத்தவன் நான். பள்ளிக்கூடம் முடிக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு சொல்ல முடியாதது. ‘படிச்சு என்னத்த கிழிக்கப் போறான்’ங்கிற வழக்கமான பேச்சுகள் அந்தச் சின்ன வயசுலயே என்னை நறநறன்னு பல்லைக் கடிக்க வைக்கும். பேசறவங்களை ஒரு முறை முறைச்சுட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்திடுவேன். ‘எப்போ கடைக்கு அனுப்புவாங்களோ’ன்னு பயந்துக்கிட்டே படிச்சு முடிச்சேன். எங்க வம்சத்துலயே முதன்முதலா பி.யூ.சி. முடிச்சது நான்தான்.

அதுக்குப் பிறகு ஓரளவு நம்பிக்கை வந்துச்சு. ‘எப்படியும் கவர்மென்ட் வேலைக்குப் போயிடுவேன்’னு சொல்லிச் சொல்லியே படிப்புக்குப் பங்கம் வந்துடாம பார்த்துக்கிட்டேன். அதுக்கேத்த மாதிரி உயர்நீதிமன்றத்துல ஸ்டெனோகிராபர் வேலை கிடைச்சது. அங்க கறுப்பு கோட் போட்டுட்டு வர்ற வக்கீல்களைப் பார்க்கப் பார்க்க... வக்கீலாகணும்னு ஆசை. பார்ட் டைம் பி.எல். சேர்ந்தேன். முடிச்சிட்டு பிராக்டீஸ் ஆரம்பிச்ச பிறகு ‘ஸ்டெனோ’வா இருக்கப் பிடிக்காம வேலையையும் விட்டாச்சு.

வக்கீல் தொழிலையே பார்க்க ஆரம்பிச்சிருந்தேன்னா இப்ப இத்தனை படிப்பையும் படிக்க முடிஞ்சிருக்காது. சட்டத்துலயே பல சட்டங்கள் பத்தி தனித்தனிப் படிப்பு இருக்குன்னு தெரிஞ்சதும் ஒவ்வொண்ணா படிக்கத் தொடங்கினேன். கவனம் அப்படியே போக, வக்கீல் தொழிலையும் முழுமையாப் பண்ண முடியலை.

பொழைப்புக்கு ஏதாச்சும் வழி வேணுமில்லையா? வீட்டுலயே டியூஷன் சென்டர் ஆரம்பிச்சேன். எங்க ஏரியா, ‘நாமதான் படிக்கலை... பிள்ளைங்களாச்சும் படிக்கட்டுமே’ன்னு ஆசைப்படற மக்கள் வசிக்கிற பகுதி. அவங்க கொடுக்கிற கட்டணத்தை வாங்கிக்கிட்டதால எங்கிட்ட வந்து குவிஞ்சாங்க பசங்க. காலையிலயும் சாயங்காலமும் டியூஷன். ஒரு பள்ளிக்கூடம் ரேஞ்சுக்கு நடந்த அந்த நாட்கள்தான் எனக்குள்ள படிக்கிற வேட்கையையும், பிற்காலத்துல வாத்தியாரா ஆகணும்ங்கிற வெறியையும் தூண்டுச்சு.

காரணம், பல பாடங்களைப் படிக்கிற மாணவர்கள்கிட்ட இருந்து வந்து விழுந்த கேள்விகள். வாத்தியாரா இருந்தா பசங்க கேக்குற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியாகணும். சில நேரங்கள்ல அந்தக் கேள்விகளுக்குப் பதில் எனக்கே தெரியாது. தேட வேண்டியிருக்கும். ஒரு சப்ஜெக்ட்ல ஒரு சந்தேகம் வந்தா, அதுல உயரிய படிப்பு என்னன்னு பார்த்து அதைப் படிக்க முடியுமான்னு யோசிப்பேன். குறிப்பிட்ட சில படிப்புகளைத் தாண்டி மத்த எந்தப் படிப்புக்குமே வயசு வரம்பு இல்லைங்கிறது எனக்கு ரொம்ப வசதியாப் போச்சு.

விரும்பினதைப் படிக்க ஆரம்பிக்க, நாளடைவுல அதுவே ஒரு ஆசையான பொழுதுபோக்கா ஆகிடுச்சு. எப்படியும் இன்னும் ரெண்டு மாசத்துல சதம் போட்டுடுவேன்னு நினைக்கேன். சில தேர்வுகளோட ரிசல்ட்ஸ் வெயிட்டிங்ல இருக்கு’’ என்கிற பார்த்திபன் அறிவியலில் ஆரம்பித்து, பொது நிர்வாகம், நிதி மேலாண்மை, சைக்காலஜி, வணிகவியல், பொருளாதாரம், இதழியல், சட்டம், வங்கியியல், பிசினஸ் மேனேஜ்மென்ட், சூழலியல், தொழிலாளர் கல்வி, அரசியல், அறிவியல் வரை எல்லா பாடங்களிலும் ஒரு பட்டமோ, பட்டயமோ வைத்திருக்கிறார். தொலை
தூரக்கல்வி மூலம் படித்தவை ஒருசிலதான். மற்றவற்றை பகுதிநேரமாகவோ, மாலைநேரக் கல்லூரியிலோ படித்திருக்கிறார். ‘அஞ்சல்வழிக் கல்வி மூலமா படிக்கிறதுல, படிச்ச திருப்தி இருக்காது’ என்கிறவருக்கு இப்போது பார்க்கும் பேராசிரியர் வேலையை வாங்கித் தந்ததும் இந்தத் தொடர்ச்சியான படிப்புதான்.

‘‘வணிகவியல் முடிச்சிட்டு யு.ஜி.சி. நடத்துன ஸ்லெட் தேர்வு எழுதி பாஸ் பண்ணியிருந்தேன். மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு இன்டர்வியூ வந்திச்சு. என்னோட சர்டிபிகேட்ஸ் எல்லாம் பார்த்தவங்க உடனே பணியில சேரச் சொல்லிட்டாங்க. நான் கனவு கண்ட வாத்தியார் வேலை கிடைச்சதும் தேடல் இன்னும் அதிகமாயிடுச்சு. பள்ளிப் பசங்களைவிட அதிகமா சந்தேகம் கேக்கறவங்க இல்லையா கல்லூரி மாணவர்கள்!’’ என்கிறார்.

எம்.பில்., பிஎச்.டி எல்லாம் கடந்துவிட்ட பிறகும் படிப்பை நிறுத்த மனசில்லாத பார்த்திபன், ‘வாழ்வின் கடைசி வரை படித்துக் கொண்டிருக்கத்தான் விருப்பம்’ என்கிறார். பார்த்திபனின் படிப்பாசை அவரோடு நிற்கவில்லை. பி.எஸ்சி. மட்டுமே படித்து அவருக்கு வாழ்க்கைப்பட்ட மனைவியையும் 9 டிகிரி வாங்க வைத்துள்ளது!
அய்யனார் ராஜன்
படங்கள்:புதூர் சரவணன்