கலக்கலான சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



                   பட்டுச்சேலைகளே பக்கத்தில் நிற்கமுடியாத அளவுக்கு அழகும் பொலிவும் கொண்டவை கலம்காரி சேலைகள். கும்பகோணத்தை அடுத்துள்ள சிக்கல்நாயக்கன் பேட்டையில் இவை தயாராகின்றன. இயற்கை வண்ணங்களைக் கொண்டு, கைகளால் அங்குலம் அங்குலமாக இழைக்கப்படும் இந்தச் சேலைகள் உலகின் பலநாடுகளுக்கும் பயணிக்கின்றன.

ஆந்திர ஓவியக்கலையே கலம்காரி. இயற்கை வண்ணங்கள், வரைபொருட்களைக் கொண்டு துணிகளில் வரையப்படும் இக்கலையை தமிழகத்துக்குக் கொண்டுவந்தவர்கள் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாக தஞ்சைக்கு வந்த நாயக்கர்களே. காளஹஸ்தி மரபு, மசூலிப்பட்டினம் மரபு என ஆந்திர கலம்காரியில் இரண்டு வகை உண்டு. ஆந்திராவில் இப்போது இக்கலையில் பல நவீனங்கள் புகுந்துவிட்டன. ஓவியங்களை வடித்து, அச்சாக்கம் செய்து அதைப் பயன்படுத்தி இயந்திரங்கள் உதவியோடு துணிகளை அச்சிடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் தஞ்சாவூர் மரபு இன்னும் கலம்காரியை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. ஆதியில் கடைப்பிடித்த அதே இயற்கை வண்ணங்கள். அதே கைத்திறன்!

கோயில்கள், குகைகளில் வரையப்பட்டிருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களை, அதைப்போன்ற இயற்கை வண்ணங்களையே பயன்படுத்தி துணிகளில் வரைவதுதான் கலம்காரி. தொடக்கத்தில் தேர்களில் தொங்கவிடப்படும் தொம்பைகள், திருவிழா பந்தல்களில் கட்டப்படும் அஸ்மானகிரி போன்றவை கலம்காரி ஓவியங்கள் மூலம் உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் அரச குடும்ப உடைகள் போன்றவையும் கலம்காரி ஓவியத்தில் உருவாக்கப்பட்டன. இன்று பெட்ஷீட்டுகள், தலையணை உறைகள் வரை கலம்காரி வந்து விட்டது. இந்தத் தொடர்ச்சிகளில் ஒன்றுதான் கலம்காரி சேலைகள்.

சிக்கல்நாயக்கன்பேட்டை ரைஸ்மில் தெருவில் இருக்கும் எம்பெருமாள் மட்டும்தான் இப்போது கலம்காரி சேலைகள் தயாரித்து வருகிறார். எம்பெருமாளின் மூதாதைகள் செவ்வப்ப நாயக்கரோடு தஞ்சைக்கு வந்தவர்கள். கலம்காரி ஓவியத்துக்கு ஆற்றுத்தண்ணீர் அவசியம் என்பதால், கொள்ளிடத்துக்கு அருகில் உள்ள சிக்கல்நாயக்கன்பேட்டையை தேர்வு செய்து குடியிருக்கிறார் எம்பெருமாள். 16ம் நூற்றாண்டு ஓவியங்களை, அதே பாணியில் துணிகளில் காட்சிகளாக்கும் எம்பெருமாள், அதற்காக மத்திய, மாநில அரசுகளின் பல கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

60&ம் நம்பர் காட்டன் நூலை பாவாகவும், 40&ம் நம்பர் காட்டன்  நூலை ஊடாகவும் கொண்டு கலம்காரி சேலைகள் நெய்யப்படுகின்றன. இதை காடாத்துணி என்கிறார்கள். வெளியூரில் இருந்து காடாத்துணி வாங்கி பதப்படுத்துகிறார்கள். இயற்கை பிளீச்சிங்.

முதற்கட்டமாக பசுஞ் சாணத்தை நன்றாகக் கரைத்து, அதில் சேலையை நனைத்து, முறுக்கிப் பிழிந்து, புல்தரையில் நிழலில் உலரவைக்கிறார்கள். இதுபோல மூன்றுமுறை. காயும்நேரத்தில் தண்ணீரைத் தெளித்துக் கொண்டே இருக்கவேண்டும். பின், லேசாக அடித்துத் துவைக்கிறார்கள். ஓட்டமுள்ள தண்ணீரே துவைக்கத் தகுந்தது. அதற்காக கொள்ளிடத்துக்குச் செல்கிறார்கள். அந்தத் தண்ணீரில் நிறைய கால்சியம் இருப்பதால் துணியின் உறுதித்தன்மை அதிகமாகிறதாம். துவைத்த துணியை 6 மணிநேரம் காயவைத்து, மடித்து, அதன்மேல் ஒரு கருங்கல்லை வைக்கிறார்கள். இயற்கை அயர்னிங்!

அடுத்து மூலிகையில் குளிக்கிறது துணி. விதையெடுத்த கடுக்காய் தோலை ஓரிரவு ஊறவைத்து அரைக்கிறார்கள். அதோடு வடித்த கஞ்சி, பசும்பால் சேர்த்து நன்றாக கலக்கி அக்கலவையில் துணியை நனைத்துப் பிழிந்து காயவைக்கிறார்கள். இதுவும் 3 முறை. காய்ந்த துணியை மடித்து, ஒரு கட்டையில் வைத்து மரச்சுத்தியலால் லேசாக அடிக்கிறார்கள். துணியின் கடினத்தன்மை கரைந்து லேசாகிறது. அடுத்து கைவண்ணம்.

டிசைன், பார்டர் உள்ளிட்ட சேலையின் முழு வடிவத்தையும் காகிதத்தில் வரைந்து கொள்கிறார்கள். வண்ணம் மட்டுமின்றி வரையும் பொருட்களும் இயற்கையானதுதான். புளியங்குச்சிகளை எரித்துக் கிடைக்கும் கரிதான் பென்சில். ஹெச்.பி. பென்சிலை விட ஷார்ப். மூங்கில் குச்சி, தென்னை மட்டை, ஈச்சங்குச்சியை சீவிக் கூராக்கி, மேல்பகுதியில் துணியைச் சுற்றி பிரஷ்ஷாக பயன்படுத்துகிறார்கள்.

கறுப்பு, மஞ்சள், சிவப்பு... இவைதான் முதன்மை வண்ணங்கள். மற்றவை கலப்பு வண்ணங்கள். இரும்புத்தூள், வெல்லம், கடுக்காய்பொடி மூன்றையும் சேர்த்து 21 நாள் ஊறவைக்கிறார்கள். கரிசலாங்கண்ணிச்சாற்றில் பஞ்சை நனைத்து, நல்லெண்ணெய் விளக்கில் திரியாக்கி எரியவிட்டு அதன்மேல் ஒரு சட்டியை கவிழ்த்து வைக்கிறார்கள். சட்டியில் படியும் புகைப்படிமத்தை சுரண்டி எடுத்து, மேற்கண்ட ஊறலோடு கலந்தால் கறுப்பு வண்ணம் தயார். கடுக்காய்ப்பூ, மஞ்சள், விரளிமஞ்சள், படிகாரம் நான்கையும் கலந்து மஞ்சள் வண்ணத்தை உருவாக்குகிறார்கள். மந்துஷ்டா கொடி, சுருளிப்பட்டை, கடுக்காய்பொடியைக் கொதிக்கவைத்தால் சிவப்பு. அவுரிச்செடியின் இலை மற்றும் வேர் மூலம் ஊதாவை உருவாக்குகிறார்கள்.

சேலையின் முதன்மைக் கோடுகளை புளியங்குச்சியால் வரைந்து, நிதானமாக வண்ணம் கூட்டுகிறார்கள். சேலை ஓவியக்கூடமாக மாறிவிடுகிறது. ஓவியங்கள் முழுமை பெற்றதும் மீண்டும் கொள்ளிட ஆற்றில் துவைத்து பிழிந்து, இயற்கை முறையில் அயர்னிங் செய்தால் கலம்காரி சேலை தயார்!

‘‘100 வருடங்கள் ஆனாலும் வண்ணங்கள் சிதைந்து போகாது. மூலிகைகள் கலந்திருப்பதால் உடம்புக்கும் பாதுகாப்பு. பட்டுப்புடவைகளைவிட பார்வையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். பராமரிப்பு எளிது. சீயக்காய் அல்லது பூந்திக்காய் போட்டு அலசினால் போதும். ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இச்சேலைகளுக்கு நல்ல வரவேற்பு. கோ&ஆப்டெக்ஸ் மூலம் தமிழகத்தில் மார்க்கெட்டிங் செய்வது பற்றி பேசிவருகிறோம்’’ என்கிறார் எம்பெருமாளின் மகன் ராஜ்மோகன். இவரும் கலம்காரி ஓவியர்தான்.

அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் உருவாக்கப்படும் இச்சேலைகள் 4 ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்கின்றன. உருவாக்கும் நுட்பத்தையும் உழைப்பையும் உற்று நோக்குகையில் விலை ஒன்றும் அதிகமில்லை!

எங்கு கிடைக்கும்?

டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் கைத்தறித்துறை கலம்காரி சேலைகளை விற்பனை செய்கிறது. தமிழகத்துக் கடைகளில் இச்சேலைகள் கிடைப்பதில்லை. எம்பெருமாளிடம் வாங்குவதற்கு தொடர்பு எண்: 9976241924, 9443920439, 0435&2456730.  
வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்
மாடல்: தனலட்சுமி