கொலைக்களமா சென்னை சாலைகள்?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



             
             சர்வசாதாரணமாகி விட்டன விபத்துகள். தினம் தோறும் பல குடும்பங்கள் நிராதரவாகின்றன. ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். இந்தியாவில் அதிக விபத்துகளைச் சந்திக்கும் நகரம் என்ற இடத்தை நோக்கி அதிவேகத்தில் நகர்கிறது சென்னை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பாதசாரிகளும் சைக்கிளில் செல்வோரும்தான்! அதிநவீன வாகனங்கள் பயணிக்கும் சாலைகளில் இவர்களுக்கு பயணிக்கும் உரிமை இல்லையா?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் விபத்துகளால் இறக்கிறார்கள். இதில் டெல்லி, பெங்களூருவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது சென்னை. புறநகரையும் உள்ளடக்கி, கடந்த ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை, 1415. இதில் 40 சதவீதம் நபர்கள் பாதசாரிகள். ‘‘வாகனங்களுக்கு மட்டுமே சாலைகள் என்ற மனநிலை உருவாகி விட்டது. பல நாடுகளில் வாகனப்பாதைகளுக்கு இணையாக சைக்கிள் பாதைகளும் நடைபாதைகளும் அமைக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில் சென்னையில் சாலை மேம்பாடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மிகவும் பின்தங்கியுள்ளன’’ என்கிறார் சமூகவியலாளர் ‘பாடம்’ நாராயணன்.

‘‘வீட்டுக்கு ஒரு வாகனம் என்ற நிலை மாறி ஆளுக்கொரு வாகனமாகிவிட்டது. சைக்கிளில் செல்பவர்களை வாகனஓட்டிகள் எதிரிகளைப் போல பார்க்கிறார்கள். சென்னை நடைபாதைகளில் நடப்பதும் கொடுமையான அனுபவம். திறந்தவெளி கழிப்பிடமாக நடைபாதைகள் மாறிவிட்டன. அதோடு ஆக்கிரமிப்பு வேறு...’’ என்கிறார் அவர்.

விபத்துகள் பற்றி ஆய்வு செய்துவரும் ‘டிரான்ஸ்பரன்ட் இந்தியா’ நிறுவனத்தைச் சேர்ந்த தோஸ்னிவால், ‘‘சென்னை நகரில் 829 கிலோமீட்டர் நீளத்துக்கு நடைபாதை உள்ளது. ஆனால், ‘இந்தியன் ரோடு காங்கிரஸ்’ அறிவித்துள்ள விதி முறைகளின்படி நீள அகலத்தோடு இல்லை. ஏதோ கட்ட வேண்டும் என்பதற்காக கட்டியிருக்கிறார்கள். சில பகுதிகளில் கீழே பாதாள சாக்கடை ஓடுகிறது. அதற்கான ‘மேன்ஹோல்’ சரியாக மூடப்படுவதில்லை. பலர் அதில் விழுந்தே காயமடைகிறார்கள். நடக்கவே அச்சமாக இருக்கிறது. 29 கி.மீ நடைபாதை ஆக்கிரமிப்பில் இருக்கிறது’’ என்கிறார் தோஸ்னிவால்.

‘‘இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முனையும்போது நீதிமன்றத் தடை வாங்கி விடுகிறார்கள். பிரதான சாலைகளில்கூட நடைபாதையை அடைத்து கடை வைத்திருக்கிறார்கள்’’ என்று புலம்புகிறது காவல்துறை.

‘‘பெரும்பாலான வாகன ஓட்டிகள், நடந்துசெல்லும் மக்களை மதிப்பதே இல்லை. சிக்னலையும் சட்டை செய்வதில்லை. பலநேரங்களில் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிக்னல்கள் இயங்குவதில்லை. போக்குவரத்து போலீசாரும், தேவைப்படும் நேரத்தில்தான் வழக்குப்பதிவு செய்கிறார்கள். மற்ற நேரங்களில் வேடிக்கை பார்ப்பதோடு சரி’’ என்று குற்றம்சாட்டுகிறார் நாராயணன்.

இக்குற்றச்சாட்டை மறுக்கும் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, ‘‘மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. தினமும் சராசரியாக 3 ஆயிரம் வழக்குகள். விதிமுறைகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக வரவேண்டும். சென்ட்ரல் போன்ற பரபரப்பான பகுதிகளில் கூட மக்கள் சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்துவதில்லை. சாலைகளை கிராஸ் செய்கிறார்கள். வாகன ஓட்டிகளும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். சிக்னல்களை மதிக்க வேண்டும். தமது உயிரைப் போல மற்றவர்கள் உயிரையும் மதிக்க வேண்டும்’’ என்கிறார்.

பெரும்பாலானவை மாலை 6 மணிக்கு மேலே நடந்தவை. வீட்டுக்குப் போகும் அவசரம். இரவில் பல சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருக்கும். சிக்னலை கண்டுகொள்ளாமல் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளாலேயே அதிக விபத்துகள் நடக்கின்றன. 

‘‘சாலை விபத்துகளை குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் வேகம் போதாது. போலீசார் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சாலை பாதுகாப்புக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். 2010&11 நிதியாண்டில் ரூ.15.5 கோடி சாலை வரியாக பெறப்பட்டுள்ளது. ஆனால், ரூ.2.31 கோடி ரூபாய் மட்டுமே சாலைப் பாதுகாப்புக்குச் செலவிடப்பட்டுள்ளது. நடந்து செல்பவர்களையும், சைக்கிள் ஓட்டுபவர்களையும் மனதில் வைத்து சாலைகள் போடப்பட வேண்டும். மக்களும் நடைபாதை, சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும்’’ என்கிறார் தோஸ்னிவால்.

விபத்தைத் தவிர்க்கலாம்!

சென்னையில் 100 அடி சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகியவற்றில்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. இந்த சாலைகளின் நடைபாதைகளில் அதிக ஆக்கிரமிப்புகள் உண்டு. விதிமீறல்களும் அதிகம். இச்சாலைகளில் கண்காணிப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தினால் பல விபத்துகளைத் தவிர்க்க முடியும்.

நடைபாதை மற்றும் சுரங்கப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, செப்பனிடுவதோடு, சாலை விதிகளை மீறுவோர்மீது கனிவுகாட்டாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
 வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்