வேங்கை சினிமா விமர்சனம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


            
        வன்முறை வேண்டாம் என்று ஒதுங்கிப்போகும் இளைஞன் பதுங்கிப் பாயும் வேங்கையாக மாறும் கதை. அதில் உறவுகளின் சிறப்புகளையும் தந்து தன் முத்திரையுடன் கதை சொல்லி யிருக்கிறார் இயக்குநர் ஹரி.

சிவகங்கையில் ஆரம்பிக்கும் கதை. ஊர் மக்கள் நலனுக்காக அநியாயங்களைத் 'தட்டி’க் கேட்கும் வல்லமை கொண்ட ராஜ்கிரண் வார்த்தைக்காக, அவரது ஆதரவாளரான பிரகாஷ்ராஜை எம்.எல்.ஏ. ஆக்குகிறார்கள் மக்கள். ஆனால் அவர் ராஜ்கிரணுக்கு எதிரான செயல்களில் இறங்க, சம்பந்தமில்லாமல் ராஜ் கிரணின் மகனான தனுஷுக்கு சதிவலை விரிக்கப்படுகிறது. எப்படி அதிலிருந்து தப்பி தந்தையின் உயிரைக் காத்து, உறவுகளைக் காத்து தனுஷ் வெல்கிறார் என்பது மீதிக்கதை.

இதுவரை அப்பாவுக்கு ஆகாத பிள்ளையாகவே வந்திருப்பதை மாற்றி, ராஜ்கிரணின் செல்லப்பிள்ளையாக தனுஷ் வருவதே வித்தியாசமாக இருக்கிறது. ஊரில் கஞ்சா கருப்புவுடன் சேர்ந்துகொண்டு அவர் அடிக்கும் லூட்டிகளிலும், சண்டியராக வரும் அப்பாவின் ஆசைக்காக வன்முறை வாழ்க்கையிலிருந்து மறைந்து வாழ திருச்சிக்குப் போய், அங்கே சிறுவயதுத் தோழி தமன்னாவை சந்தித்து காதல் வயப்படும் காட்சிகளிலும் இளமைத் துள்ளல் தூக்கலாக இருக்கிறது. காதலியைக் காக்க தன் சமாதான முகமூடியைக் கழற்றிவிட்டு சண்டையில் இறங்கும்போதும், அப்பாவின் ஆணைப்படி ஓடி ஒளிந்தாலும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நேரும்போது அரிவாளைத் தூக்குவதுமாக ஆக்ஷனிலும் வேங்கையாகியிருக்கிறார் அவர்.

படத்துக்குப் படம் மெழுகு பொம்மை போல நிறமும், மினுமினுப்பும் ஏறிக்கொண்டே போகிறது தமன்னாவுக்கு. தனுஷை தெரியாதவர் போல் காட்டிக்கொள்ள மலையாளம் பேசும் அழகிலும், பின் மாட்டிக்கொண்டு முழிப்பதிலும் பார்பி பொம்மைக்கு உயிர் வந்ததைப்போல்
அத்தனை அழகு. பல்லியிடமிருந்து பூச்சியைக் காப்பாற்றும் அஹிம்சை யிலும், காபியில் நஞ்சைக் கலந்து கொல்ல நினைக்கும் வன்மத்திலும் இரு எல்லைகளுக்கு இயல்பாகச் சென்றிருக்கிறார். பாடல் காட்சிகளில் பளபள பட்டாம்பூச்சி.

ராஜ்கிரணுக்கும், ஊர்வசிக்கும் கணவன் மனைவியாக உருவப் பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ... நடிப்புப் பொருத்தம் நிறையவே இருக்கிறது. விழிகளை உருட்டியே வீரத்தை மெய்ப்பிக்கும் ராஜ்கிரணின் தந்தைப் பாசம் நெகிழ வைக்கிறது.

‘‘இதுவரைக்கும் நாயா இருந்தது போதும், இனி நரியா இருக்க வேண்டியதுதான்...’’ என்று உறுமும் பிரகாஷ்ராஜ், வில்லத்தனத்துக்கென்றே பிறப்பெடுத்து வந்தவர் போலிருக்கிறார். ராஜ்கிரணை எதிர்த்து ஊருக்குள் வர முடியாமல் தந்திரத்தால் மந்திரியாகி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் காட்சி மிரட்டல். சின்னச்சின்ன வேடங்களில் வரும் லிவிங்ஸ்டன், ஜி.சீனிவாசன், சுதா சந்திரன் போன்றோருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.

கஞ்சா கருப்புவின் காமெடிக் காட்சிகளிலும் வண்டிகள், லாரிகள், டிராக்டர்கள் என்று யோசிப்பது டைரக்டர் ஹரியால்தான் முடியும். படம் முழுவதையும் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்து பார்ப்பதுபோல் அத்தனை வேகமான திரைக்கதை. அதனாலேயே படத்தின் நெகிழ்ச்சியான பகுதிகளும் எண்ணத்தில் நிலைக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒளிப்பதிவாளர் பிரியன் இல்லாத குறையை நன்றாகவே ஈடு செய்திருக்கிறார் வெற்றி. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை வழக்கம்போல் துள்ளல்.

கமகமக்கும் சமையலுக்குக் ‘கறி மசாலா’ போல கமர்ஷியல் படத்துக்கு ‘ஹரி மசாலா’ என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறது ‘வேங்கை’.
 குங்குமம் விமர்சனக்குழு