பேப்பர் நகைகளில் பேஷா கிடைக்கும் லாபம்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



             
        பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கலாம்’ என்பார்கள். ‘பேப்பர்’ வைக்கலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உஷா கிருஷ்ணன். தங்கமும் வெள்ளியும் நாளுக்கு நாள் விலையேறிக் கொண்டிருக்க, நகை ஆசையைத் தியாகம் செய்யத் தயாராகிறார்கள் பலரும்.

‘‘தங்கத்துலயும் வெள்ளிலயும்தான் போடணுமா என்ன? பேப்பர் நகைகள் போட்டுப் பாருங்க. பேப்பர்ல பண்ணினதுனு நீங்க சத்தியம் பண்ணினாகூட யாரும் நம்ப மாட்டாங்க. அவ்ளோ அழகு’’ என்கிற உஷா, 15 ஆண்டுகளாக கைவினைக்கலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

‘‘பேப்பர்ல பண்ற குவில்லிங் ஆர்ட் இப்ப ரொம்ப பிரபலம். வெளிநாட்லேர்ந்து நமக்கு வந்திருக்கிற இந்தக் கலையை வச்சு கிரீட்டிங் கார்டு, வால் ஹேங்கிங்னு என்ன வேணா பண்ணலாம். நான் அதுலயே நகைகள் செய்யப் பழகினேன். காதுக்குத் தோடு, கழுத்துக்கு பென்டென்ட் வச்ச செயின், வளையல்னு கற்பனைக்கேத்தபடி என்ன வேணா செய்யலாம்’’ என்கிறவர், கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘குவில்லிங் ஸ்ட்ரிப்புகள் (வேற வேற அளவுகளில்), குவில்லிங் செட், பசை, தோடுக்கான கொக்கி, செயினுக்கான கயிறு, பிளெயின் வளையல், டிசைன்களுக்காக குவில்லிங் புத்தகம்... குவில்லிங் பேப்பர் 55 ரூபாய்லேர்ந்து கிடைக்கும். கிராஃப்ட் பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கலாம். மத்ததுக்கெல்லாம் சேர்த்து 150 ரூபாய் முதலீடு போட்டா போதும்.’’

என்ன ஸ்பெஷல்?

‘‘குவில்லிங் மிஷின் செட்ல உள்ள டிசைன்களை வச்சு, நம்ம கற்பனைக்கேத்தபடி விதம் விதமான மாடல்களை உருவாக்கலாம். உடைக்கு மேட்ச்சா என்ன கலர்ல வேணாலும், என்ன அளவுலயும் பண்ண முடியும். 50 ரூபாய்க்குள்ள ஒரு செட்டே வாங்கிடலாம். தண்ணீர் படாம வச்சிருந்தா, எத்தனை நாளானாலும் அப்படியே இருக்கும்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘ஸ்கூல், காலேஜ் பிள்ளைங்க விரும்பி வாங்குவாங்க. எக்ஸிபிஷன்ல கடை போடலாம். வர்றவங்களுக்கு அங்கயே அவங்க டிரஸ் கலருக்கேத்தபடி 5 நிமிஷத்துல பண்ணிக் கொடுத்து அசத்தலாம். ஒரு நாள் கூத்துக்கு வாங்கி, யூஸ் அண்ட் த்ரோ மாதிரி உபயோகிக்கிறவங்களும் இருக்காங்க. 5, 10 ரூபாய்னு விலை வச்சா அதிக விற்பனையாகும். தோடு, கழுத்துக்கான செயின், வளையல் & மூணும் சேர்த்து 50 ரூபாய்க்குள்ள பண்ணி, 150 ரூபாய்க்கு விற்கலாம். ஒரு முழு செட் பண்ண வெறும் அரை மணி நேரம் போதும். 3 மடங்கு லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?

‘‘தேவையான பொருட்களோட சேர்த்து, 2 நாள் பயிற்சிக்குக் கட்டணம் 200 ரூபாய்.’’
 ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்