திருமணம் டூ தற்கொலை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



             
சாஃப்ட்வேர் எஞ்சினியரை ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்டு, மூன்றே மாதங்களில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அஸ்தி சேகர் என்கிற ஸ்வீட்டி என்ற பெண் எழுதி வைத்திருந்த சோக டைரியின் தொடர்ச்சி இது...

ஏப்ரல் 13: வழக்கம் போல எந்தவித சந்தோஷமும் இல்லாத இன்னொரு நாள். திருமணத்துக்குமுன் என் வாழ்க்கை ஒரு போதும் இப்படி இருந்ததில்லை. அஸ்தி என்றால் ஜாலி, கலகலப்பு, சிரிப்பு, சந்தோஷம். என்னைச் சுற்றியிருக்கும்
அத்தனை பேரின் முகத்திலும் புன்னகையைப் பார்க்க முடியும். ஆனால் இப்போது என் வாழ்க்கையிலேயே சந்தோஷம்
காணாமல் போய்விட்டது. வெற்றியைத் தராத இந்த வாழ்க்கையிலிருந்து விலகி ஓட விரும்புகிறேன். ஆனால் என்
குடும்பத்தை நினைத்தே குற்ற உணர்வால் தவித்துவருகிறேன். எனக்குத் திருமணம் செய்துவைத்து தங்கள் கடமையை நிறைவாக முடித்துவிட்டதாக அம்மாவும் அப்பாவும் நம்புகிறார்கள். நான் சந்தோஷமாக வாழ்வதாக என் தம்பி நம்புகிறான். கடவுளே, என்னைக் காப்பாற்று! இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை எனக்குக் கொடு. என் வாழ்க்கையில் இருக்கும் புதிர் முடிச்சை அவிழ்த்துவிடு... முடியாவிட்டால் என்னைக் கொன்றுவிடு!

ஏப்ரல் 22: எதுவுமே மாறவில்லை. திருமணத்துக்குப் பிறகு என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று கனவிலும்
நினைக்கவில்லை. திருமண வாழ்க்கையில் ரொமான்ஸும் மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்திருக்கும் என்று நினைத்திருந்த
முட்டாள் பெண் நான். என் கண்களுக்கு எதிரே இருட்டான ஒரு குகைதான் பாதையாகத் தெரிகிறது. மாமியார் போன் செய்து,
‘நீ சந்தோஷமாக இருக்கிறாயா?’ என்று கேட்கிறார். ‘ஆமாம்’ என்றேன். ‘உனக்கு வாழ்க்கையில் எல்லாம் கிடைத்துவிட்டது. நீ ஜாலியாக இருக்கிறாய். ஆனால் என் மகன் சந்தோஷமாக இல்லையே?’ என்று கேட்கிறார். என் கணவர் சந்தோஷமாக
இல்லாதபோது நான் மட்டும் எப்படி சந்தோஷமாக இருப்பேன்? இது அவருக்குப் புரியவில்லையா? என் துயரங்களும் வேதனைகளும் அவருக்கு ஒன்றுமே இல்லையா? என் வாழ்க்கையை சீரழித்த குற்ற உணர்வு அவருக்கு இருக்காது! என் பெற்றோரை தொந்தரவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. பிறகு நானும் யாரிடம்தான் என் கவலைகளைச் சொல்லி அழுவது? நேற்றும் அழுதேன்; இன்றைக்கும் அழுகிறேன்.

ஏப்ரல் 24: நான் கர்ப்பமாக இருக்கிறேனா என்று சோதித்துப் பார்க்கச் சென்றிருந்தேன். நெகட்டிவ் என்றுதான் ரிசல்ட் வந்தது. வாழ்க்கையில் எந்த நல்ல விஷயமுமே எனக்கு நடக்காது போலிருக்கிறது. இந்த ரிசல்ட்டைப் பார்த்து சந்தோஷப்படுவதா அல்லது கவலைப்படுவதா என்றுகூட புரியவில்லை. ஆனால் என் கணவருக்கு சந்தோஷம்தான்; எந்த குற்ற உணர்வும்

இல்லாமல் என்னை வெட்டிவிட முடியும் இல்லையா? அவருக்கும் ரம்யாவுக்குமான தனி உலகத்தில் அவர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.எங்கள் திருமண உறவை முறித்துக்கொள்ளும் நாளாக ஜூன் 17ம் தேதி இருக்கும் என்று அவர் இன்று சொன்னார். இதை
எப்படி என் பெற்றோரிடம் சொல்லப்போகிறேன் என்று புரியவில்லை. மாமியாரிடம் இதைச் சொல்வது வெட்டி வேலை. என் பிரச்னைகளும் உணர்வுகளும் அவருக்குப் புரியாது. ஒவ்வொரு நாளும் கடவுள் முன்னால் அழுது மன்றாடுகிறேன். என் பிரச்னைகளைத் தீர்த்து வைக்குமாறு கெஞ்சுகிறேன். எனக்கு ஒரு வழிகாட்டு என்று கூக்குரலிடுகிறேன். அவர் எப்படியும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் என் ஒவ்வொரு நாளின் அழுகையும் தீர்கிறது.

ஏப்ரல் 26: இன்று எல்லா விஷயமும் என் கையை மீறிப் போய்விட்டன. இந்த உலகிலேயே துரதிர்ஷ்டசாலி பெண்
நானாகத்தான் இருப்பேன். என் கணவரை இன்று முற்றிலுமாக இழந்துவிட்டேன். இப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று நான் பதைபதைப்போடு தவித்த விஷயம் இன்று நடந்துவிட்டது. ஆம், என்னைத் தனியாக விட்டுவிட்டு என் கணவர் வேறொரு அறையில் போய் தூங்கினார். ஏன் இப்படி நடக்கிறது? என் அப்பா பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள கண்ணை மூடிக்கொண்டு சம்மதம்
சொன்னது என் தவறு. அந்தத் தவறுக்கான தண்டனையை இப்போது அனுபவிக்கிறேன். இந்த நிமிடமே செத்துப் போய்விடலாம் என்று தோன்றுகிறது. என்னைத் திருமணம் செய்துகொண்டவர் எப்போதுமே என்மீது அன்பு காட்டவில்லை;

இன்று எங்கள் படுக்கைகளும் பிரிக்கப்பட்டு விட்டன. இனிமேல் எங்களுக்குள் எதுவுமே இல்லை. நான் இன்று எவ்வளவு

அழுதேன் என்பது எனக்கே தெரியவில்லை. அவர் தூங்கிவிட்டார்; என்னால் தூங்க முடியவில்லை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று தெரியாமல் தவிக்கிறேன். ஒருவேளை நான் இங்கிருந்து கீழே குதித்தால் என் வாழ்வை
முடித்துக் கொள்ளலாம். ஆனால் நான் அவர்மீது வெறித்தனமான அன்பை வைத்துக்கொண்டு தவிக்கிறேன். என் அன்பு அவருக்கு எப்போது புரியும்?

ஏப்ரல் 29: என் கண்களில் ஒரு கறுப்புத்துணி நிரந்தரமாகக் கட்டப்பட்டிருப்பது போலவும், ஒவ்வொரு கணமும் அதனுடனே வாழ்க்கையை நகர்த்துவது போலவும் உணர்கிறேன். அவரது வாழ்க்கையிலிருந்து நிரந்தரமாக விலகிப் போகுமாறு இன்றும்
என்னிடம் சொன்னார் என் கணவர். நான் அவருக்குத் தகுதியான மனைவி இல்லையாம். என்னைத் திருமணம்
செய்து கொண்டது தான் அவர் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறாம். எனக்கு அழக்கூட திராணி இல்லாமல் போய்விட்டது.

மே 2: கடந்து சென்ற இரண்டு நாட்கள் மிக மோசமானவை. எல்லோருமே அப்செட்டில் இருக்கிறார்கள். பிரச்னைகள் தீர
வேண்டும் என பிரார்த்தனை செய்தபடி இருக்கிறார்கள். என் குடும்பத்திலோ, என் கணவர் குடும்பத்திலோ யாரும் கண்ணீர்
சிந்துவதில் எனக்கு இஷ்டம் இல்லை. நான் வேதனையில் துடித்தாலும், என் கணவரை காயப்படுத்த விரும்பவில்லை. எது எப்படி ஆனாலும், நான் அவரது மனைவி. அவர் என்ன விரும்புகிறாரோ, அதைச் செய்வது என் கடமை. நான் அவரை விட்டுப் பிரிய வேண்டும் என அவர் விரும்பினாலும், ஒரு மனைவியாக அதை நான் செய்துதான் ஆக வேண்டும். அவர் அழுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது.

நிபந்தனையற்ற அன்பை அவர்மீது செலுத்தி, எப்போதும் அவரை சந்தோஷத்தில் வைத்திருப்பேன் என்று திருமணத்தின்போதே சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். அவரது சந்தோஷத்துக்காக நான் எதையும் செய்வேன். அவரது அழகிய முகத்தில் சிறு கீற்றாக ஒரு புன்னகை வரும் என்றால், அதற்காக அவரை விட்டுப் பிரியவும் தயாராக இருக்கிறேன். எப்படி இருந்தாலும் என் வாழ்க்கை இன்னும் சில நாட்களே என்பது புரிகிறது. சில நாட்களில் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும். எல்லாம் 4 மாதங்களுக்கு முன்பாக இருந்ததுபோல இயல்பாகிவிடும். இந்த மாற்றங்களைப் பார்க்க நான் இருக்க மாட்டேன் என்ற ஒரே
ஒரு விஷயத்தைத் தவிர. என் வாழ்க்கையின் எஞ்சிய கடைசி நிமிடங்களை வாழ்ந்து தீர்க்கிறேன்...     
(அடுத்த இதழில்...)