கபடி கபடி கபடி கபடி வருகிறது கே.பி.எல்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



                 மூச்சுப்பயிற்சி, உடல் வலிமை, போர் தந்திரம் என பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட கபடி, மகாபாரத காலம் முதல் விளையாடப்படுகிறது என்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் கபடி உணர்வுடன் கலந்துள்ளது. தமிழரின் விருப்ப விளையாட்டான கபடிக்கு பல பண்பாட்டுப் பதிவுகள் உண்டு. இவ்விளையாட்டில் இன்னும் சுவாரஸ்யம் சேர்க்கும் வண்ணம் வருகிறது கே.பி.எல். என்கிற கபடி பிரீமியர் லீக்!

மண்தரைகளில் ஆடப்பட்ட போதும், நவீன செயற்கை களங்களில் ஆடுகிறபோதும், சர்வதேச அளவில் நடக்கும் பல போட்டிகளில் இந்தியாவுக்குத் தங்கம் தப்புவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜப்பான், ஈரான், வங்கதேசம், மலேசியா என ஆசிய நாடுகளில் கபடி முக்கிய விளையாட்டாக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, ஜெர்மனி, பிரேசில், நைஜீரியா, எகிப்து, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மெக்சிகோ, எத்தியோப்பியா உள்பட சுமார் 50 நாடுகளில் ஆர்வமாக விளையாடப்படுகிறது. பல நாடுகளில் தமிழர்களே பயிற்சியாளர்களாக உள்ளனர். வரும் ஒலிம்பிக்கில் கபடியை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வளவு சிறப்பு பெற்ற கபடி விளையாட்டு, மெல்ல மெல்ல மறைந்து வருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. திறமையான வீரர்கள் பலர் வாய்ப்பின்றி முடங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கபடியைப் பிரபலப்படுத்தவும், வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கவும் இந்திய அமெச்சூர் கபடி கழகத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதன்படி ‘கிரிக்கெட் ஐபிஎல்’ போல, கபடிக்கு ‘கே.பி.எல்.’ (கபடி பிரீமியர் லீக்) தொடங்கியுள்ளனர்.

‘‘முதல் போட்டி ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கும் 8 அணிகள் ஆடின. ஒவ்வொரு அணியிலும் இந்திய வீரர்கள் 6, வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் என முன்னணி வீரர்கள் 80 பேர் பங்கேற்றனர். உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்களுக்கு ஒரே ஊதியம் வழங்கப்பட்டது. இரண்டாவது கே.பி.எல். போட்டியை தமிழ்நாட்டில் நடத்த இருக்கிறோம். கபடிக்கு புத்துணர்வு ஊட்டும் வகையில் இப்போட்டிகள் அமையும்’’ என்கிறார் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநிலப் பொதுச்செயலாளர் சபியுல்லா.
ஜோ.மகேஸ்வரன்