இயற்கைக்காக இறங்கிய தம்பதி!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



       சுற்றுச்சூழல் மாசு பரிசளிக்கும் பயங்கர நோய்கள் காரணமாக, மீண்டும் இயற்கைக்குத் திரும்பும் கட்டாயம் இன்று. இந்த மாற்றம் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என முதல் அடி எடுத்து வைத்திருக்கிறார் சேலம் சுமதி. இவரது கணவர் செந்தில்குமார், தமிழகத்தின் 6 மாநகராட்சிகளுடன் இணைந்து, திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பான செயல்பாட்டுக்காக ‘கார்பன் கிரெடிட்’ பெற்றுள்ளார். இயற்கை வேளாண்மை, திடக்கழிவு மேலாண்மை, வீடுகள் தோறும் இயற்கை உணவு என களம் இறங்கியுள்ளது இந்த ஜோடி!

திடக்கழிவு மேலாண்மையின் தொடர்ச்சியாக, சேலத்தில் பயோஜென் ஃபெர்டிலைசர் நிறுவனத்தைத் தொடங்கி கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளார் செந்தில்குமார். ‘பசுந்துளிகள் இயற்கை நல அங்காடி’யைத் தொடங்கி, இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளை ஒன்றிணைத்து பெரிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார் சுமதி.

இளங்கலையில் தாவரவியல் கற்ற சுமதி முதுகலையில் படித்தது மரபணுக்கள் பற்றி. நுண்ணுயிரியலில் எம்.பில். பட்டம் முடித்துவிட்டு சென்னையில் மரபணு ஆய்வகம் நடத்தியுள்ளார். செயற்கை உரங்களின் மோசமான விளைவுகளை உணர்வுபூர்வமாக உணர்ந்த பிறகு, ஆய்வகத்தை மூடிவிட்டு மண்ணை பண்படுத்தும் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

‘‘இயற்கை வேளாண்மையை வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். பெண்கள் இயற்கை உரம் இட்டு விளைவித்த பொருட்களை சமையலுக்குப் பயன்படுத்த முடிவெடுத்தால் கண்டிப்பாக மாற்றம் வரும். ரசாயன உரப் பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய் பயங்கரங்கள், மனிதன் எப்போதும் பயத்துடன் வாழ வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த அடிப்படையில்தான் எங்கள் செயல்பாட்டைத் திட்டமிட்டோம்.

இந்தியா முழுக்க இயற்கை விவசாயிகளைத் தேடித்தேடி மொத்தமாக பொருட்களை வாங்குகிறோம். கூட்டுப் பண்ணைகள் அமைப்பதற்கான ஆலோசனைகள் வழங்குகிறோம். சிறிய விவசாயிகளின் தன்னம்பிக்கையை உறுதியாக்குவதுதான் இந்தப் புரட்சியின் தொடக்கம். இவர்களின் வெற்றி இந்த மண் முழுவதையும் உயிருள்ளதாக்கும். பெரிய மாற்றம் வரும்போது விளைச்சல் பெருகும். எல்லாருக்கும் இயற்கை உணவு கிடைக்கும்’’ என்கிற சுமதி, ‘‘வீட்டிலேயே சிறிய தோட்டங்கள் அமைப்பதன் மூலம் இயற்கை வேளாண்மையை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம். எதிர்காலத்தில் குரோட்டன்ஸ் களுக்கு பதிலாக காய்கறித்தொட்டிகளே தோட்டங்களாக மாற வேண்டும்’’ என்ற நம்பிக்கையோடு பேசுகிறார்.
ஸ்ரீதேவி
படங்கள்: சங்கர்