ஒரு எஸ்பியின் டைரி



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



       இருபது ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் மூன்றெழுத்து ஊரில் காவல் ஆய்வாளராக பணியாற்றினேன். இந்தியாவின் மிக முக்கிய அரசியல் தலைவர் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்த நேரம் அது. அந்த வழக்கின் புலன்விசாரணையும் தீவிரமாக நடைபெற்ற காலகட்டம். மத்திய உளவுத்துறையிலிருந்து தமிழக காவல்துறை வாயிலாக எனக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வந்தது.

‘நீங்கள் பணிபுரியும் இடம் அல்லது சுற்றியுள்ள பகுதியில் அதிநவீன வயர்லெஸ் கருவி பயன்பாட்டில் உள்ளது. அது பக்கத்து நாட்டு முக்கிய போராளிகள் அமைப்பின் செயல்பாடாக இருக்கலாம்...’ & இதுவே அந்த உளவுச்செய்தி. குறிப்பிடப்பட்ட போராளிகள் இயக்கத்தின் லட்சியம், அவர்களின் வழிமுறைகள், போர்த்திறன் உள்ளிட்டவை நான் ஏற்கனவே அறிந்தவைதான்.

முக்கியத் தலைவர் கொலை வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நேரமாயிற்றே... இந்த வயர்லெஸ் உரையாடல்களுக்கும் முக்கிய தலைவர் கொலையாளிகளுக்கும் தொடர்பிருக்கலாம். அதனால் உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். பின்னர், பெண் காவலர்கள் சிலரை சோப்பு, பவுடர் போன்ற பொருட்கள் விற்கும் விற்பனைப் பிரதிநிதிகள் ஆக்கினேன். அவர்கள் வாயிலாக அப்பகுதியில் புதிதாக குடிவந்தவர்கள், சந்தேகத்துக்கு இடமானவர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டேன்.

அதிநவீன வயர்லெஸ் பயன்பாட்டில் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ. சுற்றளவில் உள்ள தொலைக்காட்சிகளில் படம் தெளிவாகத் தெரியாது. நாம் செல்போனை டிவி அருகே பயன்படுத்தும்போது அலையலையாக வருவது போலவே வரும். இந்தத் தகவலும் எங்கள் விசாரணைக்கு உதவியாக இருந்தது.

அன்று வழக்கம் போல உடற்பயிற்சியை முடித்து விட்டு, தொலைக்காட்சியை ‘ஆன்’ செய்தேன். படம் தெளிவில்லாமல் அலையலையாக இருந்தது. மத்திய உளவுத்துறையின் அறிவுறுத்தல் நினைவுக்கு வந்தது. உடனே பக்கத்து அறையில் இருந்த எனது வயர்லெஸ்ஸை பார்த்தேன். ஆஃப் செய்யப்பட்டிருந்தது. உளவுத் துறையின் தகவல் உண்மையாகிவிட்டது. மனதுக்குள் ஒரு இனம்புரியாத உணர்வு. பதற்றமில்லாமல், விரைவாகச் செயலாற்ற வேண்டும் என்று உள்மனது கூறியது. இதை ஒரு சவாலாக எடுத்து, மத்திய புலனாய்வுத்துறையினர் பிடிப்பதற்கு முன், தமிழக காவல்துறை அவர்களைப் பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அலுவலகத்துக்குச் சென்றேன். ஆழ்ந்த சிந்தனையுடன் இருக்கையில் அமர்ந்திருந்தேன். ‘‘ஐயா, உங்களைப் பார்க்க வேண்டும் என்று காலையில் இருந்து ஒருவர் காத்திருக்கிறார். உங்களிடம்தான் பேச வேண்டும் என்கிறார். பதற்றமாக இருக்கிறார்’’ என்றார் காவலர். வழக்கமான வழக்கு விபரமாக இருக்கும் என்ற நினைப்பில் வரச் சொன்னேன்.

உள்ளே வந்தவர் ஒரு இளைஞர்...

‘‘உங்களை எங்கேயோ பார்த்தது போல் உள்ளதே’’ என்றேன்.

‘‘நேற்று நடந்த விளையாட்டுப்போட்டியை நீங்கள்தான் தொடங்கி வைத்தீர்கள். நானும் விளையாடினேன். நீங்கள் உரையாற்றியபோது உங்கள் மீது ஈர்ப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டது. அந்த தைரியத்தில் ஒரு சேதியைச் சொல்ல வந்தேன்’’ என்றார்.

‘‘நல்லது... என்ன சேதி? விபரமாகச் சொல்லுங்கள்...’’

‘‘சார்... என் வீடு உள்ள பகுதியில், நான்கு நாட்களுக்கு முன்பு ஒருத்தர் வீட்டுக்கு 3 இளைஞர்கள் வாடகைக்குக் குடிவந்துள்ளனர். அவர்களுடைய பேச்சு வழக்கு மாறுபட்டுள்ளது. போர் நடந்து கொண்டிருக்கும் பக்கத்து நாட்டு இளைஞர்கள் என்று தெரிந்துகொண்டோம். அடுத்த நாள் ஒரு பெண்ணும் வந்து சேர்ந்தார். அவர்களில் இருவர் மட்டும் அடிக்கடி வெளியில் சென்று வருகின்றனர். ஒரு ஆணும் பெண்ணும் வீட்டினுள் இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு பெரிய பேட்டரியை வீட்டுக்குள் கொண்டு சென்றனர். இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் உடற் பயிற்சி செய்கிறார்கள். காலையில் லிட்டர் கணக்கில் பால் வாங்குகிறார்கள். முக்கியமாக வயர்லெஸ்ஸில் அடிக்கடி பேசுகிறார்கள். துப்பாக்கி வைத்துள்ளார்கள் என்பதும் தெரிகிறது. எங்கள் யாருடனும் பேசுவது கிடையாது’’ என்று படபடப்புடன் விவரித்தார்.

அவர் சொல்லி முடிக்கையில் இருவரும் வியர்த்திருந்தோம். 

ஒருநாள் முழுக்க உளவுத்துறை தகவல் பற்றியே சிந்திக் கொண்டிருந்த வேளையில் இந்த இளைஞர் வந்திருக்கிறாரே என்று வியந்தேன். இளைஞர் குறிப்பிட்ட வீட்டில் நாம் தேடிக்கொண்டிருப்பவர்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. உடனே உயரதிகாரிகளிடம் தொடர்புகொண்டு விபரம் தெரிவித்தேன். அப்போது காவல்துறை இயக்குநராக ஸ்ரீபால், ஏடிஜிபியாக தேவாரம், மாவட்ட எஸ்.பியாக ஜெகன்னாதன் ஆகியோர் இருந்தனர். ‘போதுமான போலீஸ் படையுடன் சுற்றி வளையுங்கள்’ என்று டிஜிபி உத்தரவிட்டார். ஆனால் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள போலீஸ் படையினர், அவர்கள் தங்கியுள்ள இடத்துக்கு வருவதற்கு குறைந்தது 2 மணி நேரம் ஆகும். அதற்குள் அவர்கள் தப்பிவிட வாய்ப்பிருக்கிறது. அதனால் இருக்கும் காவலர்களைக் கொண்டு உடனே களத்தில் இறங்க வேண்டும் என்ற ஏடிஜிபியின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டேன்.

கடமை உணர்வோடும் சாதிக்கும் துடிப்போடும் பணியாற்றிய காலம் அது... 30 காவலர்களுடன் அந்த வீட்டுக்குச் செல்ல ஆயத்தமானேன். இறங்கியுள்ள செயலின் பின்விளைவை அறிந்தோ, தற்செயலாகவோ தெரியவில்லை... நான் அமர்ந்திருந்த வாகனத்தில் 2 இளம் போலீசார் மட்டுமே துணிச்சலுடன் ஏறினர். மற்றவர்கள் பின்னால் வந்த வேனில் ஏறவே ஆர்வம் காட்டினர். தகவல் சொன்ன இளைஞரையும் அழைத்துக்கொண்டு, புறப்பட்டோம். சென்று கொண்டிருக்கும்போது, மீண்டு(ம்) வீடு திரும்புவோமா என்ற சிந்தனை எழுந்தது. மனைவி, பிள்ளைகள், உறவினர்களின் முகங்கள் ஏனோ வந்து போனது. எங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து, வருவதை எதிர்கொள்வோம் என்ற துணிச்சலோடு சென்றோம்.

எங்கள் வாகனங்கள் அந்த கிராமத்தை அடைந்தது. ஜீப்பில் இருந்தாலும் கவனமாகவும், லோட் செய்யப்பட்ட துப்பாக்கியுடனும்தான் அமர்ந்திருந்தேன். ஜீப் வேகத்தை குறைத்து மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு வீட்டுக்கு அருகில் சென்றபோது, ‘‘சார்... அதோ அந்த வீடுதான்’’ என்று கூறிவிட்டு, எங்கள் முகத்தைக் கூட பார்க்காமல் ஓடி மறைந்தார் எங்களுடன் வந்த அந்த ஊர் இளைஞர். அவர் குறிப்பிட்ட வீட்டின் முன் எங்கள் ஜீப் நின்றது. தமிழக காவல்துறைக்கே உரிய மிடுக்குடன், நானும் இரண்டு காவலர்களும் அந்த வீட்டுக்குச் சென்றோம்.
(பெயர்களும் ஊர்களும் மாற்றப்பட்டுள்ளன)
துப்பறிவோம்!
அ.கலியமூர்த்தி