நான் யாரோ... அவர் யாரோ! செல்வராகவன் பற்றி சோனியா



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



         கதாநாயகிகளாக நடிக்கிறவர்களின் தலையெழுத்து, கல்யாணத்துக்குப் பிறகு மாறிப் போவது கோலிவுட்டின் எழுதப்படாத சட்டம்! சோனியா அகர்வாலும் விதிவிலக்கல்ல...  ‘வானம்’ படத்தில் அவரது கேரக்டர் அப்படித்தான் அமைந்திருந்தது. இன்னொரு அழகான அக்கா, அண்ணி ஆவார் என்று நினைத்த வேளையில், மூன்று தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக  புக் ஆகியிருக்கிறார் சோனியா! இன்னும் ஒரு மலையாளப் படம் என சோனியாவின் கால்ஷீட் டைரி இந்த வருடம் முழுக்க ஃபுல்!

எடை குறைத்து, இன்னும் இளமையாகியிருக்கிறார் சோனியா. பேச்சில் பக்குவமும் நிதானமும் இனிமையும் கூடியிருக்கிறது.

‘‘வானம் படத்துல என் கேரக்டர் சின்னதுனு தெரிஞ்சுதான் நடிச்சேன். தெலுங்கு வெர்ஷனை பார்த்ததுமே எனக்குப் பிடிச்சுப் போச்சு. படத்துல எனக்கு அபார்ஷன் ஆகிற அந்த ஒரு சீன் பர்சனலா ரொம்ப திருப்தியா அமைஞ்சது. நிறைய பாராட்டையும் வாங்கிக் கொடுத்தது.

‘மாதா பிதா குரு’ படத்துல ஹீரோயின், பத்திரிகையாளர், மீரா மாதிரி ஒரு துறவி கேரக்டர்னு 3 வேற வேற கெட்டப். ‘பொய் சொல்லாதே’னு ஒரு ட்ரையாங்கிள் லவ் ஸ்டோரி. ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’னு இன்னொரு படத்துல நடிகையாவே பண்றேன். முகேஷ் ஜோடியா மலையாளத்துல ஒரு படம். கணவன் சரியில்லாத ஒரு குடும்பத்துல போராடி ஜெயிக்கிற யதார்த்தமான மனைவி கேரக்டர்... இப்படி நான் பண்ற எல்லாமே முக்கியமான கேரக்டர்ஸ். எனக்கு 28 வயசுதான் ஆகுது. கல்யாணமாயிட்ட காரணத்தாலயே ஒரு நடிகை, அக்கா, அண்ணி கேரக்டர்ஸ்தான் பண்ணணும்னு நினைக்கிறது என்ன நியாயம்?’’ & கோபமாகக் கேட்கிற சோனியா, நடிகையாக அறிமுகமாகி, புகழ் வெளிச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு, நடிப்பிலிருந்து ஒதுங்கியவர்.

அந்த முடிவு தப்புன்னு ஃபீல் பண்ணி இருக்கீங்களா?

‘‘எல்லா சம்பவங்களும் நமக்கு எதையோ ஒண்ணைக் கத்துக் கொடுக்குது. அது மூலமா நம்மை இன்னும் பெட்டராக்குது. அன்னிக்கு எடுத்த முடிவு அப்ப எனக்கு சரின்னு பட்டது; சந்தோஷத்தைக் கொடுத்தது. கல்யாண வாழ்க்கை சரியில்லாமப் போனது விதி. அதுக்காக, தப்பு பண்ணிட்டோமோன்னு நடந்ததை நினைச்சு புலம்பற ஆளில்லை நான். கடவுள் என் விஷயத்துல கருணை காட்டினார்னுதான் சொல்லணும். பின்னே? கல்யாணத்துக்குப் பிறகு நான் குண்டாகலை. மறுபடி எனக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. என்னை இன்னும் அழகா, இளமையா வச்சுக்க மெனக்கெட ஆரம்பிச்சிருக்கேன்...’’

கல்யாணத்துக்குப் பிறகு உங்களோட போதுமான நேரத்தை ஒதுக்க முடியாமப் போனதுதான் உங்க உறவுல விரிசல் விழ முக்கியமான காரணம்னு செல்வா ஒரு பேட்டில சொல்லிருக்கார்... உண்மைல என்னதான் நடந்தது?

‘‘இதுதான் காரணம்னு எதையும் குறிப்பிட்டுச் சொல்றதுக்கில்லை. வாழ்க்கைல சில விஷயங்களை மறக்கறதுதான் நல்லது. அதை ஞாபகப்படுத்தறதுல மீடியாவுக்கு அப்படி என்ன சந்தோஷமோ தெரியலை. இப்ப அவருக்குனு ஒரு லைஃப் இருக்கு. முடிஞ்சு போன ஒரு விஷயத்தைப் பத்திப் பேசறதுல எனக்கு இஷ்டமும் இல்லை. ப்ளீஸ்...’’

செல்வராகவனோட திருமணத்துக்கு உங்களுக்கு அழைப்பு வந்ததா?

‘‘என்னைக் கூப்பிடுவாங்கனு நீங்க எப்படி எதிர்பார்க்கலாம்? கூப்பிடுவாங்கனு நானும் நினைக்கலை. கூப்பிடணும்னு அவங்களும் நினைச்சிருக்க மாட்டாங்க. நான் அந்த வாழ்க்கைலேர்ந்து விலகி வந்தாச்சு. இப்ப நான் யாரோ... அவர் யாரோ...’’

சமீபத்துல நடந்த அமீர்கானோட பட விழாவுக்கு அவரோட முதல் மனைவியும் வந்திருந்தாங்க. விவாகரத்துக்குப் பிறகு முன்னாள் கணவன் & மனைவிக்குள்ள நட்பு தொடர்வது சாத்தியம்னு நினைக்கிறீங்களா?

‘‘ஒவ்வொருத்தரோட இயல்பு ஒவ்வொரு மாதிரி இருக்கும். டைவர்ஸுக்குப் பிறகு நட்பு சாத்தியம்னா, அவங்க கணவன் & மனைவியாவே இருந்திருக்க முடியுமே! என் விஷயத்துல அதுக்கு வாய்ப்பே இல்லை. முறிஞ்சு போனது போனதுதான். டைவர்ஸுக்குப் பிறகு ஃப்ரெண்ட்ஷிப், லவ்னு எதுவும் இருக்க முடியாது.’’

நீங்க உங்களோட அடுத்த கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிறதுண்டா?

‘‘அதைப்பத்தின நினைப்புகூட எனக்கு வர்றதில்லை. நடிப்பு மட்டும்தான் இப்ப என் சிந்தனை. எனக்கு சரினு படற நல்ல கேரக்டர்ஸை பண்றேன். நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிச்சு, இன்னிக்கிஇருக்கிற சந்தோஷத்தைக் கெடுத்துக்கற ஆளில்லை நான். லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!’’
ஆர்.வைதேகி
‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’