கடைசியா விவேக் சார் எங்க படத்துலதான் நடிச்சார்...
தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ஜனங்களின் கலைஞன் விவேக்கின் திடீர் மரணம். ‘‘750 ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத வண்டி யாடா எட்டணா எலுமிச்சம் பழத்துல ஓடப்போகுது...’’ என சிந்தனையைத் தூண்டிய சின்னக் கலைவாணர். தமிழில் அவர் கடைசியாக நடித்த படம், ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணா நடிக்கும் படம்தான்.
‘‘விவேக் சாரோட இழப்புச் செய்தியைக் கேட்டதில் இருந்து நொறுங்கிப் போயிட்டோம். இன்னும் மனசு ஏத்துக்க மாட்டேங்குது. ரெண்டு நாளா யார் போனையும் எடுத்துப் பேசல. எங்க மன வலியை இந்த பேட்டி மூலமாகத்தான் பகிர்ந்துக்கறோம்...’’ குரல் உடைந்து, கண்களில் ஈரம் கசிய பேசுகிறார்கள் ஜேடியும் ஜெர்ரியும்.
‘‘விவேக் சார் எங்களோட நீண்ட கால நண்பர். கிட்டத்தட்ட 20 வருட நட்பு. நாங்க டிவி சீரியல் பண்ணின காலத்துல இருந்து அவரோட பயணிக்கிறோம். அற்புதமான காமெடி கலைஞன். படித்த அறிஞர். சின்னக் கலைவாணர் என்கிற பெயருக்கு பொருத்தமானவர். எந்த விஷயத்தையும் மேலோட்டமாக அணுகாமல் தீர்க்கமாக படித்து அறிபவர்.
நாங்க இயக்கின ‘விசில்’ல அவரோட காமெடி ட்ராக் எபிக் காமெடியா இன்னிக்கும் பேசப்படுது. நாங்க இயக்குநர் ஆனதுக்கு அவரும் ஒரு காரணம்னு சொல்லலாம். ஏன்னா, நாங்க விளம்பரப் படங்கள் பண்ணின டைம்ல ‘நீங்க எப்போ படம் டைரக்ட் பண்ணப் போறீங்க..? சினிமாவுக்கு சீக்கிரம் வாங்க. எல்லாவிதத்திலும் நானும் உதவியா இருக்கேன்’னு சொல்லி எங்களை அன்போடு கூப்பிட்டுக்கிட்டே இருப்பார்.
‘சிவாஜி’ பட இன்ஸிடென்ட் ஒண்ணு சொல்றேன். அந்தப் படத்துல நாங்க ஷங்கர்கிட்ட ஒர்க் பண்ணிட்டு இருந்தோம். அப்ப ரஜினி சாருக்கு சீன் பேப்பர் படிச்சுக் காட்டுவோம். ஓஎம்ஆர்ல ஷூட் பண்ணிட்டு வடபழனிக்கு யூனிட் ஷிஃப்ட் ஆச்சு. நாங்க கிளம்பும்போது விவேக் சாரை ரஜினி சார் அவரோட வண்டியில ஏத்திக்கிட்டார். ரெண்டு பேரும் பேசிட்டே வந்திருக்காங்க. நாங்களும் வடபழனி வந்துட்டோம்.
அப்ப ரஜினி சார் ஸ்பாட்ல ரொம்ப சத்தமா, ‘ஜேடி சார்... ஜெர்ரி சார்... வர்ற வழியில நிறைய ஹோர்டிங்ஸ் பார்த்தோம். நகைக்கடை, துணிக் கடைனு எல்லாம் நீங்க பண்ணினதுதான்னு விவேக் சார் சொன்னார். ஹாட்ஸ் ஆஃப்’னு சொல்லி சந்தோஷப்பட்டார். இதைச் சொல்லக் காரணம், எங்களோட எல்லா ஒர்க்கையுமே விவேக் சார் கொண்டாடி யிருக்கார்னு சொல்லத்தான்.
லெஜண்ட் சரவணா படம் பண்ணப் போறேன்னதும், செம ஹேப்பியாகிட்டார். இதுல ஒரு பியூட்டிஃபுல் கேரக்டர் பண்ணி யிருக்கார். படத்துக்கே ஒரு மையப்புள்ளியான கேரக்டர். எங்களோட ஸ்கிரிப்ட் ஒர்க்லேயும் பங்கெடுத்துப்பார். மொத்த ஸ்கிரிப்ட்டையும் வாங்கிப் படிச்சு, இம்ப்ரூவ் பண்ணுவார். அவரோட போர்ஷன் முழுவதும் கம்ப்ளீட்டா ஷூட் பண்ணிட்டோம். சென்னை, மகாபலிபுரம், பொள்ளாச்சி, அப்புறம் கடைசியா குலுமணாலினு ஷூட் போச்சு.
குலுமணாலில இருந்த ஒன்பது நாளுமே அவர் எங்களோட இருந்தார். மைனஸ் முப்பது டிகிரி குளிரிலும் அவர் வாக்கிங் போயிட்டு வருவார். அவரோட ஹெல்த் கான்ஷியஸ் பார்த்து ஆச்சரியமானோம். இந்தப் படத்துல சீனுக்கு சீன் ஹிலேரியஸ் காமெடி பண்ணியிருக்கார். ஹீரோவுக்கும் நெருங்கிய தோஸ்து ஆகிட்டார். எமோஷனல் சீன்ஸும் அவருக்கு இருக்கு. குணச்சித்திரத்துல அவரோட பர்ஃபாமென்ஸ் பார்த்து யூனிட்ல எல்லாருமே அந்த சீனுக்கு கண்கலங்கினோம். அப்படி ஒரு கிரேட் பர்ஃபாமென்ஸ்.
அந்த சீனை நேத்துகூட எடிட்பண்ணும்போது பார்த்து கண் கலங்கினோம். தியேட்டர்லயும் அந்த சீனுக்கு நெகிழ்வோம்.அவர் இவ்ளோ படங்கள் பண்ணிட்டார். ஆனாலும், ஒவ்வொரு நாளும் புதுநாளா நினைச்சு, கொண்டாட்டமா இருப்பார். ஒரு படம் டைரக்ட் பண்ணிடணும்னு சொல்லிட்டே இருப்பார். அவரோட மிகப்பெரிய ஆசை, நிறைவேறாமலேயே போனதுல எங்களுக்கும் வருத்தம்தான்.
அவரோட கடைசி படம் எங்க படமா அமைஞ்சதுனு சொல்லவே கஷ்டமா இருக்கு. இறந்துபோகும் வயசா அவருக்கு..? இன்னிக்கும் காலேஜ் ஸ்டூடண்ட் கேரக்டர்ல அவரால நடிக்க முடியும். அப்படி ஒரு லுக் அவருக்கு இருக்கு. எங்க படம் நல்லா வரணும்னு எப்பவும் என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். இப்பவும் கூட அவர் மேல இருந்து ஆசீர்வதிச்சிட்டுதான் இருப்பார்னு நம்புறோம்...’’ கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள் ஜேடியும் ஜெர்ரியும்.
மை.பாரதிராஜா
|