கொரோனா வந்தது... மிடில் கிளாஸ் சிதைகிறது...



அமெரிக்காவில் உள்ள ப்யூ (PEW) எனப்படும் சர்வதேச சமூக, ஜனநாயக ஆய்வுகளுக்கான அமைப்பு தெற்கு ஆசியாவில் மத்தியதர வர்க்கத்தினர் இந்தக் கொரோனாவால் எப்படி தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பரிதவிக்கின்றனர் என்று ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கை உலகம் முழுதும் உள்ள 160 நாடுகளைச் சேர்ந்த மக்களை வறியவர்கள், குறைவான வருமானம் உடையவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், உயர் நடுத்தர வர்க்கத்தினர், செல்வந்தர்கள் என ஐந்து நிலைகளாகப் பிரித்து ஆராய்ந்தது.

நாள் ஒன்றுக்கு நூற்று ஐம்பது ரூபாய் வரை வருமானம் உடையோர் வறியவர்கள்; நாள் ஒன்றுக்கு நூற்று ஐம்பது முதல் எழுநூற்று ஐம்பது ரூபாய் வரை வருமானம் உடையோர் குறைவான வருமானம் உடையோர்; தினசரி எழுநூற்று ஐம்பது முதல் ஆயிரத்து ஐநூறு வரை வருமானம் உடையோர் மத்திய தர வர்க்கத்தினர்; உயர் மத்தியதர வர்க்கத்தினர் என்போர் ஆயிரத்து ஐநூறு ரூபாய் முதல் மூன்றாயிரத்து ஐநூறு வரை வருமானம் உடையோர்; அதற்கு மேல் வருமானம் உடையவர்கள் செல்வந்தர்கள் என்று உலக வங்கி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பிரித்தார்கள்.

இந்த அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுமார் ஆறு கோடி மக்கள் மிக மோசமாக வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள்; மேலும் பதிமூன்று கோடிப் பேருக்கு மேல் வறுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்; மத்தியதர வர்க்கத்தினர் என்ற நிலையிலிருந்து வறியவர்கள் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்ட அவலம் தெற்கு ஆசியப் பகுதியில்தான் அதிகம் நடந்துள்ளது என்கிறார்கள். அதேபோல் கிழக்காசிய பகுதி களும் பசிபிக் பகுதி நாடுகளுமேகூட கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தெற்கு ஆசியா மற்றும் சகாராஆப்பிரிக்கப் பகுதிகள்
மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் இந்தியா போன்ற பகுதி களில் சமீபத்திய பொருளாதார ஏற்றத்தினால் வறுமையின் பிடியிலிருந்து சற்றே முன்னேறியவர்கள்தான் இப்போது மீண்டும் வறுமையின் குழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்களாம். இந்த மக்களை ஜாண் ஏறினால் முழம் சறுக்கியது போலாக்கிவிட்டிருக்கிறது கொரோனா. 

உலக அளவில் குறைவான வருமானம் உடையோர் எண்ணிக்கை 21 லட்சமாக உயர்ந்துள்ளது. உயர் மத்தியதர வர்க்கத்தினருக்கான வருமானம் மூன்று கோடியே அறுபது லட்சம் பேருக்கு கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் இவர்கள் மத்திய வர்க்கத்தினராக மாறியுள்ளார்கள். அதேபோல் செல்வந்தர்களில் ஆறு கோடிப் பேருக்கு மேல் மத்திய வர்க்கத்தினராக மாறும் அளவுக்கு வருமானம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில் உலக அளவிலான வறியவர்கள் எண்ணிக்கை 60 கோடியாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், இது 80 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவிலான வறுமை விகிதம் 10.4% அதிகரித்துள்ளது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலவரம்.

அப்படியானால் கடந்த நான்கு ஆண்டு கால உலகப் பொருளாதார வளர்ச்சியை கொரோனா காலி செய்துவிட்டது என்றாகிறது.

பல கோடிப் பேர் வேலையை இழந்துள்ள சூழலில் மேலும் பல கோடிப் பேருக்கு மாதச் சம்பளப் பிடிப்பு, சம்பள இழப்பு ஆகியவையும் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்தியாவில் நிகழ்ந்த நான்கு மாத லாக் டவுன் இந்தியப் பொருளாதாரத்தில் என்ன விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு நமக்கு ஓர் ஒருங்கிணைந்த ஆய்வு விவரங்கள் ஏதும் இல்லை என்பதுதான் பரிதாபம்.

இந்த ப்யூ அறிக்கையின்படி, கொரோனாவுக்கு முன்பு 2020ம் ஆண்டு பத்து லட்சம் பேர் மட்டுமே மத்தியதர வர்க்கத்தினர் என்ற வகைமையில் இருந்தார்கள். இப்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது இவர்களில் பலர் வறியவர்களாகிவிட்டார்கள்.
இந்தச் சூழல் சீனாவில் இல்லை. இத்தனைக்கும் உலக அளவில் மூன்றில் ஒரு மத்தியதர வர்க்கத்தினர் சீனராகவே உள்ளார். ஆனால், அங்கு இந்த சரிவு ஏற்படவில்லை.

வளர்ந்த நாடுகளில்தான் செல்வந்தர்கள் அதிகம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், இந்நாடுகளில் இவர்களில் கணிசமானோர் மத்திய வர்க்கத்தினராகிவிட்டார்கள். செல்வந்தர்களில் 4 கோடியே 70 லட்சம் பேரை கொரோனா நொறுக்கிப் போட்டிருக்கிறது. ஆனால், செல்வந்தர்களாக இருந்து மத்தியதர வர்க்கத்தினர் ஆன விகிதத்தைவிட மத்தியதர வர்க்கத்தினராக இருந்து வறுமையானவர்கள் விகிதம் உலக அளவில் அதிகம்.

வளர்ந்த நாடுகளில் 40% பேர் செல்வந்தர்கள்தான். இப்படியான சூழலில்தான் நாம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறோம்.

இதைத்தான் வறியவர்கள் மேலும் வறியவர்களாகிறார்கள் என்று பொருளாதார அறிஞர்கள் சொல்வார்கள். ஆனால். மறுபுறம் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாவது குறைந்துள்ளது. இதுதான் உலகப் பொருளாதாரத்தில் கொரோனா உருவாக்கியுள்ள முக்கியமான மாற்றம்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2019 வரை உலக அளவில் வறியவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியில் இருந்து 60 லட்சமாகக் குறைந்தது. சராசரியாக ஐந்து லட்சம் பேர் வறுமையின் பிடியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இந்த கொரோனா இந்த சூழலை தலைகீழாக மாற்றியுள்ளது. உலக அளவில் வறுமை ஒன்பது சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலே சொன்னது போல் ஆசிய அளவில்தான் மிக மோசமான பாதிப்பு உருவாகியுள்ளது. தெற்காசியாவில் 32 லட்சம் பேரும், கிழக்கு ஆசியாவில் 19 லட்சம் பேரும் வறுமைக்குள் விழுந்துள்ளனர். ஆசியாவில் பிராந்திய அளவில்கூட வித்தியாசம் நிறைய உள்ளது. உலக அளவில் தெற்காசியாவில்தான் அதிகமான மத்தியதர வர்க்கத்தினர் வசிக்கிறார்கள். அதாவது இங்குள்ளவர்களில் 26% அவர்கள்தான். இதில் மூன்று சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சப் சஹாரா ஆப்பிரிக்க பகுதியில் பலகோடிப் பேர் வறுமையில்தான் வாடுகிறார்கள். தெற்கு ஆசியப் பகுதியில் வசிக்கும் வறியவர்களைவிட இங்கு ஐந்து மடங்கு வறியவர்கள் அதிகம். மத்திய ஆசியா, கரிபிய கடற்கரைப் பகுதிகள், லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் வறுமையுற்றோர் எண்ணிக்கை 17% அதிகரித்துள்ளது. மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் 20% உயர்வு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) தனி நபர் பங்களிப்பு கடந்த ஆண்டு 4.3% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அது கொரோனாவின் தாக்கத்தினால் வழக்கத்தைவிட 7.8% குறைந்ததாக மாறிவிட்டது.

இந்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்திலேயே எத்தனை கோடிப் பேருக்கு வேலை இல்லை... கொரோனா கால மரணங்கள் எவ்வளவு... என்பதற்கு எல்லாம் தங்களிடம் தரவுகள் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. உண்மையில் பரிதாபம் என்றால் இதுதான். நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைவிட, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக்கூட மதிப்பிடஇயலாத நிலையில் ஒரு தேசம் இருப்பதுதான் நிஜமான அவலம்.

இந்த கொரோனா என்னும் பெருந்தொற்று எப்போது தீரும் எனத் தெரியவில்லை. இந்த பொருளாதாரப் பின்னடைவுகளில் இருந்தெல்லாம் எப்போது மீள்வோம் என்ற கேள்விக்கும் யாரிடமும் பதிலே இல்லை. இந்தியாவுக்கு மட்டுமல்ல,ஒட்டுமொத்த உலகுக்கும் உள்ள நிலை இதுதான்.

இளங்கோ கிருஷ்ணன்