ரத்த மகுடம்-146
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
சாளுக்கிய மன்னரை உற்றுப் பார்த்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘என்ன அப்படிப் பார்க்கிறீர்கள் போர் அமைச்சரே..? என் கூற்றில் தங்களுக்கு நம்பிக்கையில்லையா..?’’ விக்கிரமாதித்தரின் உதடுகள் துடித்தன. ‘‘நம்பிக்கை இல்லாவிட்டால் நான் மனிதனாகப் பிறந்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் மன்னா! முழுமையாக தாங்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன். சிவகாமி கொற்றவைதான். பெண் பாவம் பொல்லாததுதான். அதற்கு நீங்களும் நானும் மட்டுமல்ல... சாளுக்கிய தேசமே சாட்சிதான்!’’
நிறுத்திய ஸ்ரீராமபுண்ய வல்லபர் நெருங்கி வந்து சாளுக்கிய மன்னரின் கரங்களைப் பற்றினார். ‘‘தங்களால் மட்டுமல்ல, என்னாலும்... ஏன், இனி பிறக்கவிருக்கும் ஒவ்வொரு சாளுக்கிய குடிமகனாலும் கூட ஆயனச் சிற்பியின் மகளான சிவகாமி அம்மையாரை மறக்க முடியாது...
தங்கள் சிறிய தந்தை அவரை விரும்பியதை நான் தவறாகவே நினைக்கவில்லை. அது இயற்கை. ஆனால், அந்த அம்மையாரை நம் சாளுக்கிய தேசத்துக்கு அவர் கடத்தி வந்ததும், நம் தலைநகரான வாதாபியில் அவரை சிறை வைத்ததும் மன்னிக்க முடியாத குற்றம்தான்... இதற்கு நம் மாமன்னரும் தங்கள் தந்தையாருமான இரண்டாம் புலிகேசி எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இன்று வரை புரியாத புதிர்...’’ நிறுத்திய ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் மன்னரின் கரங்களை அழுத்திப் பிடித்தார்.
‘‘இதற்காக நம் தேசம் கொடுத்த விலை அதிகம்... நம் தலைநகரை நரசிம்மவர்மர் தீயிட்டுக் கொளுத்தியதைக் குறிப்பிடவில்லை... அரைத் திங்களுக்கும் மேலாக வாதாபியில் இருந்த மாட மாளிகைகளும் கோபுரங்களும் எரிந்து சாம்பலானதைச் சொல்லவில்லை... இன்றுவரை பின்தொடரும் நிழலாக ஒவ்வொரு சாளுக்கியனையும் துரத்திக் கொண்டிருக்கிறதே பெண் பாவம் என்னும் பொல்லாங்கு... அதைத்தான் குறிப்பிடுகிறேன்.
ஆனால், மன்னா... இந்தப் பாவத்துக்கு தாங்கள் பிராயச்சித்தம் செய்துவிட்டீர்கள். எந்த இடத்தில் சிவகாமி அம்மையார் வாதாபியில் சிறை வைக்கப்பட்டாரோ... எங்கு சங்கிலியால் கட்டப்பட்டு வெய்யிலிலும் மழையிலும் வருடக்கணக்கில் நனைந்தாரோ... அந்த இடத்தில் கொற்றவைக்கு ஆலயம் எழுப்பி நாள்தோறும் அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கும்படி செய்திருக்கிறீர்கள். இதைவிட வேறென்ன பிராயச்சித்தம் தேவை மன்னா..?’’ கேட்ட சாளுக்கிய போர் அமைச்சர் தன் மன்னரின் கரங்களை அன்புடன் தடவினார்.
‘‘மன்னா! நீங்கள் நினைத்திருந்தால் பல்லவ தேசத்தை நாம் கைப்பற்றியதும் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம். பல்லவர்களின் தலைநகரான காஞ்சிக்குள் நாம் நுழைந்தபோது ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் அதைத்தான் எதிர்பார்த்தான். வாதாபியை எப்படி பல்லவர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்களோ அப்படி காஞ்சியை சாளுக்கியர்களான நாம் அக்னிக்கு இரையாக்க வேண்டும் என நம் படையே துடித்தது. ஆனால், மன்னா... தாங்கள் மாமன்னர் என்பதை நிரூபித்தீர்கள்! காஞ்சியில் இருக்கும் எறும்புக்குக் கூட சாளுக்கியர்கள் தீங்கிழைக்கக் கூடாது என கட்டளையிட்டீர்கள்! இதோ...
இக்கணம் வரை காஞ்சி எவ்வித பாதிப்பும் சேதாரமும் இன்றி அதே மலர்ச்சியுடன்தான் மணம் வீசுகிறது.இந்தப் பண்பு யாருக்கு வரும்..? இத்தனைக்கும் பல்லவர்களால் நம் தலைநகரே கிட்டத்தட்ட தரைமட்டமானது. உங்கள் முன்னோர்களால் பல தலைமுறைகளாக சிறுகச் சிறுக எழுப்பப்பட்ட நகரம் கணத்தில் சாம்பலானது.
இதன் குருதி சாட்சியாக இருந்த நீங்கள் மீண்டும் வாதாபிக்கு மக்கள் ஆதரவுடன் உயிர் கொடுத்தீர்கள். நியாயமாகப் பார்த்தால் ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி அம்மையார் அனுபவித்த துயரங்களுக்கு சமமான துயரம் தங்களுடையது.அப்படியிருந்தும் காஞ்சியில் சிறு சேதத்தைக் கூட தாங்கள் ஏற்படுத்தவில்லையே..? ஒருவேளை நீங்கள் ஏற்படுத்தினாலும் வரலாறு தங்களை ஆதரிக்கத்தானே செய்யும்..? பல்லவர்களின் செய்கைக்கான பதில் மரியாதை இது என்றுதானே குறிப்பிடும்! அந்தளவுக்கு நியாயம் தங்களிடம் இருக்கிறதே!
செய்தீர்களா..? இல்லையே! ஏன்..? பல்லவர்கள் போல் சாளுக்கியர்களும் கற்கால மனிதர்களல்ல என்பதை உலகுக்கு நிரூபிக்கத்தானே! சாபத்தால் விளையும் கொடுமையை அனுபவித்த தாங்கள் அதே சாபத்தை எதிரிகளின் மீதுகூட படிய விடக்கூடாது என்றுதானே நினைத்தீர்கள்; நினைக்கிறீர்கள்!
இந்தப் புள்ளியில்தானே தாங்கள் பல்லவர்களை விட மேம்பட்டவராகக் காட்சியளிக்கிறீர்கள்! உங்களை மன்னராக அடைய சாளுக்கிய தேசமே புண்ணியம் செய்திருக்க வேண்டுமே!
இதன் பொருள் என்ன..? சாளுக்கியர்களின் மீது படிந்த பெண் சாபம் நீங்கிவிட்டது என்பதுதானே! ஒருவேளை ஆயனச் சிற்பியின் மகளான சிவகாமி அம்மையாரின் சாபத்தின் எச்சம் மீதமிருந்தாலும் தங்களின் இந்தச் செய்கையால்... செய்கைகளால்... முற்றிலுமாக துடைக்கப்பட்டது என்பதுதானே இதிலிருந்து விளங்கும் நீதி!
அறிந்தோ அறியாமலோ சாளுக்கிய தேசம் குற்றம் புரிந்துவிட்டது. அதற்கான தண்டனையை மட்டுமல்ல, பரிகாரத்தையும் மக்கள் சார்பாக மன்னரான தாங்கள் செய்துவிட்டீர்கள். எனவே, இதற்கு மேலும் தாங்கள் அந்த துர்சம்பவம் குறித்தே நினைத்துக் கொண்டிருப்பது சரியல்ல...’’ நிறுத்திய ஸ்ரீராமபுண்ய வல்லபரின் கண்கள் மின்னின. ‘‘இதையெல்லாம் இப்பொழுது அடியேன் குறிப்பிடக் காரணம், பெயர் பொருத்தம் இருப்பதாலேயே ஆயனச் சிற்பியின் மகளான சிவகாமி அம்மையாரைப் போல் இந்த சிவகாமியும் கொற்றவை அல்ல என்பதை தங்களுக்கு நினைவுபடுத்தத்தான்!
சிவகாமி அம்மையார் நம்மை அழிக்க சபதம் செய்த காளி! ஆனால், இந்த சிவகாமி வெறும் பெண்தான். பல்லவர்களின் ஆயுதம். அவ்வளவுதான். இதற்குமேல் கொற்றவைக்கும் சாதாரணப் பெண்ணுக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை.இன்னொரு விஷயம் மன்னா... தங்கள் தந்தையார், ஆயனச் சிற்பியின் மகளான சிவகாமி அம்மையாருக்கு நிகழ்த்திய கொடுமை போல் இந்த சிவகாமிக்கு தாங்கள் கொடுமை எதுவும் நிகழ்த்தவில்லை. இதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.’’நிறுத்தாமல் பேசிய தன் போர் அமைச்சரை உற்றுப் பார்த்தார் விக்கிரமாதித்தர். ‘‘புரிகிறது ஸ்ரீராமபுண்ய வல்லபரே... ஆனால், இந்த சிவகாமியும் ஏதோ சபதம் செய்திருப்பதாக பேச்சு அடிபடுகிறதே..?’’
‘‘மனிதராகப் பிறந்த எல்லோருமே ஏதோ ஒரு தருணத்தில் எதற்காகவோ சபதம் செய்தபடிதான் இருக்கிறார்கள். இந்த சிவகாமியும் அப்படி நம்மை அழிப்பதற்காக சபதம் செய்திருக்கலாம். அதற்கு அவள் பல்லவ விசுவாசியாக இருப்பது காரணமாக இருக்கலாம்.அவளைப் போலவே பல்லவர்களை அழிக்க... பல்லவ நாடே தலைதூக்காதபடி செய்ய... நாமும் சபதம் செய்திருக்கிறோம்.
சபதத்துக்கு சபதம் சரியாயிற்று. இனி யார் சபதம் வெற்றி பெறுகிறது என்று பார்த்து விடுவோமே!மன்னா! இந்த சிவகாமிக்கும், இப்பொழுதும் உயிருடன் எங்கோ வசிக்கும் ஆயனச் சிற்பியின் மகளான சிவகாமி அம்மையாருக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது. அதைக் கண்டறியவும் அந்த அம்மையாரின் இருப்பிடத்தை அறியவும் இந்த சிவகாமியை தாங்கள் ஆதரிக்கிறீர்கள்!
‘இன்னமும் சாளுக்கிய தேசத்தின் மீது கோபமாக இருக்கிறீர்களா... மன்னித்து எங்கள் சந்ததிகள் நிம்மதியாக வாழ ஆசீர்வதியுங்கள்... அதற்காக என் உயிரைக் கொடுக்கவும் நான் சித்தமாக இருக்கிறேன்’ என அந்த அம்மையாரிடம் கேட்க காத்திருக்கிறீர்கள்!’’ராமபுண்ய வல்லபர் இப்படிச் சொன்னதும் சட்டென விக்கிரமாதித்தர் நிமிர்ந்தார்.
அதைக் கண்ட சாளுக்கிய போர் அமைச்சரின் கண்களில் துக்கத்தின் சாயல் படர்ந்தது. ‘‘தங்களின் நிழலாக இருக்கும் அடியேனால் இதைக் கூட உணர முடியாதா மன்னா..? இந்த உலகமே, நீங்கள் படை திரட்டி வந்தது பல்லவர்களைப் பழிவாங்கத்தான் என்று நினைக்கிறது. அது முழு உண்மையல்ல என்பது அடியேனுக்கு மட்டுமே தெரியும். காரணம், இந்த ஸ்ரீராமபுண்ய வல்லபன் மனிதனல்ல. தங்கள் நிழல்! இருளிலும் ஒளிரும் தங்கள் குணத்தின் காலடி மண்!
சாதாரண இந்த மனிதனை தங்கள் நண்பனாக்கி போர் அமைச்சன் என்ற அந்தஸ்தையும் கொடுத்து உயர்த்தியிருக்கிறீர்கள். அப்படி என்னை கோபுரத்தில் அமரவைத்த தங்களுக்கு விசுவாசத்தை மட்டுமல்ல... சுவாசத்தையே தருவேன் மன்னா. அதனால்தான் உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற அரும்பாடுபடுகிறேன்!
சாளுக்கிய தேசத்தின் மன்னனாக பல்லவர்களை வீழ்த்துவது மட்டுமல்ல... ஆயனச் சிற்பியின் மகளான சிவகாமி அம்மையாரின் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்பதும் உங்கள் கடமை எனக் கருதுகிறீர்கள். மன்னிப்பும் கேட்க வேண்டும்... அதேநேரம் மன்னருக்குரிய லட்சணத்துடன் போரிலும் வெற்றி பெற வேண்டும். அதுதான் சாளுக்கிய தேசத்துக்கு மரியாதை என்பதால் தன்னந்தனியாக நீங்கள் மாறுவேடத்தில் பல்லவ நாட்டுக்கு விஜயம் செய்து சிவகாமி அம்மையார் இருக்கும் இடத்தை அடையவில்லை.
அம்மையாரின் இருப்பிடத்தை அறிய நம் ஒற்றர் படையைப் பயன்படுத்தவில்லை. உண்மையிலேயே உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் மன்னா! தக்காணம் கண்ட மகத்தான பேரரசர் தாங்கள்தான். தலைவணங்குகிறேன்...’’ குனிந்து விக்கிரமாதித்தரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘என்ன இது...’’ பதறி விலகினார் சாளுக்கிய மன்னர்.
‘‘நெகிழ்ச்சியை வெளிப்படுத்த அடியேனுக்கு வேறு வழி தெரியவில்லை மன்னா! ஏதோ ஒரு வகையில்... நம்பத்தகுந்தவர் வழியாக இந்த சிவகாமிக்கும் ஆயனச் சிற்பியின் மகளான சிவகாமி அம்மையாருக்கும் தொடர்பிருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்கள். அதனால்தான் இந்த சிவகாமி மீது மகளுக்கு சமமான அன்பு தங்களிடம் ஊற்றெடுத்திருக்கிறது. கூட இருந்தே குழிபறிக்கப் போகிறாள் என்று தெரிந்தும் இந்த சிவகாமியை ஆதரித்தீர்கள்; ஆதரிக்கிறீர்கள்.
தங்களுக்கு உதவ அவளுக்கு நம் தேசத்தின் ஒற்றர் படைத் தலைவி பொறுப்பை வழங்கினேன். ஏன் தெரியுமா..? அப்பொழுதுதான் அவளால் சுதந்திரமாக எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும். அவளைப் பின்தொடர்ந்தால் ஆயனச் சிற்பியின் மகளான சிவகாமி அம்மையாரின் இருப்பிடத்தை அறியலாம். அறிந்ததுமே தங்களிடம் தெரிவிக்கலாம் என்றுதான். ஆனால், மன்னா... இதுவரை இந்த சிவகாமி அந்த சிவகாமி அம்மையாரைச் சந்திக்கவேயில்லை...’’ உதட்டைப் பிதுக்கினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.
‘‘இல்லை போர் அமைச்சரே... சிவகாமி அம்மையாரை சிவகாமி சந்தித்துவிட்டாள்!’’ சொன்ன விக்கிரமாதித்தரின் கண்களில் சிந்தனை படர்ந்தது.‘‘வாய்ப்பில்லை மன்னா!’’ ராமபுண்ய வல்லபர் படபடத்தார். ‘‘அந்தரங்க ஒற்றர்கள் இந்த சிவகாமியைத் தொடர்ந்து கொண் டிருக்கிறார்கள். இப்பொழுது அவள் நம் வாதாபியில் இருக்கிறாள்...’’
‘‘தெரியும் போர் அமைச்சரே... நான் சிவகாமி அம்மையாரை சிவகாமி சந்தித்துவிட்டாள் என்றுதான் சொன்னேனே தவிர சந்தித்தவள் இந்த சிவகாமி என்று குறிப்பிடவில்லையே!’’‘‘அப்படியானால்...’’‘‘ம்... சிவகாமி அம்மையாரை சந்தித்தது நாம் மலைக்குகையில் சிறை வைத்த பல்லவ இளவரசியான சிவகாமி!’’
(தொடரும்)
கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|