அணுக்கழிவுகளை கடலில் கலக்கப் போகும் ஜப்பான்!



அலறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்...

1 லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவு நீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன

இரண்டாம் உலகப் போரின்போது - 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 9ம் தேதிகளில் அமெரிக்க அணுகுண்டால் தாக்கப்பட்ட இரண்டு ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியில் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த அணுகுண்டின் கொடூர தாக்கத்தை முதலில் உணர்ந்தவர்கள் ஜப்பானியர்கள். இப்பொழுதும் கதிரியக்கத்தின் தாக்கம் அங்கு தொடர்வதாக சுற்றுச்
சூழல்வாதிகள் தெரிவிக்கின்றனர். அங்கு வாழும் மக்களில் பலருக்கும் பல்வேறு நோய்கள் வந்திருப்பதும் இதற்கு சாட்சி.

அணுகுண்டின் தாக்குதலுக்கு உள்ளாகி அதன் மோசமான விளைவுகளை எதிர்கொண்ட ஜப்பான் இப்போது அதன் புகுஷிமா அணு உலையில் இருந்து கழிவு நீரை கடலில் கலப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவது உலக நாடுகளிடையே பெரும் வியப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பசிபிக் பெருங்கடலின் வடக்கு புகுஷிமா பகுதியில் உள்ள செனடாய் நகரத்தில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலையில் உள்ள அணுக் கழிவு நீரை கடலில் திறந்து விடுவதற்கு ஜப்பானிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஒரு புறம் ஆதரவும் மற்றொரு புறம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்பாக தாக்கிய சுனாமியால் உலகிலேயே மிகப் பாதுகாப்பான அணு உலை என்று பெயர் பெற்ற புகுஷிமா அணு உலை உருக்குலைந்து போனது.ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 9.0 புள்ளிகள் அளவில் பதிவான அதிபயங்கர நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  

புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்ததால் உலைகளைக் குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்தன. இதனைத் தொடர்ந்து சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. 1986ம் ஆண்டு ரஷ்யாவில் ஏற்பட்ட செர்னோபில் அணு உலை விபத்தை அடுத்து உலகிலேயே 2வது மிகப்பெரிய அணு உலை விபத்தாக வரலாற்றில் இது பதிவானது.

அணு உலை விபத்து நடந்து 10 ஆண்டுகளைக் கடந்து சென்றாலும் உலையிலிருந்து கேசியம் - 137 என்னும் கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் பசிபிக் பெருங்கடலில் பல இடங்களில் இன்னமும் இருக்கிறது. இந்நிலையில் அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 100 கிமீ தூரத்தில் உள்ள ஊர்களில் நிலத்தடி நீரில் அதிகமான அளவு கதிர்வீச்சு தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்தநேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஆராய்ச்சியாளர்கள், ‘பசிபிக் பெருங்கடலில் அதிகமாகக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து கதிரியக்க கதிர்கள் கடலின் அடிப்பகுதிக்குள் செல்கிறது. அடிப்பகுதியில் உட்புகும் கதிர்வீச்சானது உள்ளே இருக்கும் நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. இதனால் அணுஉலையிலிருந்து 100 கிமீ தள்ளி இருக்கும் பல ஊர்களில் நிலத்தடி நீரில் கேசியம் - 137 எனும் கதிர்வீச்சின் தாக்கம் இருக்கிறது...’ எனத் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

10 ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் தாக்கம் இப்போதும் காணப்படுகிறது. இதனிடையே புகுஷிமா அணு உலையில் உள்ள அணுக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணு உலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.  

புகுஷிமா அணு உலையில் அணுக் கழிவுகள் நிறைந்த சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவு நீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் அணுக் கழிவுகள் அகற்றப்பட்ட இந்தக் கழிவு நீரை கடலில் திறந்து விட ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. 2022ம் ஆண்டுக்குள் அணு உலையின் கழிவு நீரை கடலில் விடும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, “அணுக்கழிவுகளை கடலில் வெளியேற்றுவது இன்றிமையாத பணி. இது ஓரிரு நாளில் முடியக்கூடியது அல்ல. பல ஆண்டுகள் இந்தப் பணி தொடரும். அப்போதுதான் புகுஷிமா அணு உலையை முழுமையாகச் செயலிழக்கச் செய்யமுடியும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னரே கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும்...” எனக் கூறினார்.

இதனிடையே அணு உலையின் கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான் அரசின் முடிவுக்கு சர்வதேச அணுசக்தி முகமை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல் ஜப்பானின் இந்த முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடித்து ஜப்பான் இந்தப் பணிகளை மேற்கொள்ளும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஜப்பான் அரசின் இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உள்ளூர் மீனவர்களும், அந்த நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அணு உலையின் கழிவு நீரைக் கடலில் கலந்தால் அது கடல் வளத்தை முற்றிலுமாக அழிக்க வாய்ப்புள்ளது என்றும், மேலும் அது மனித மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கிரீன்பீஸ் என்கிற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.

அதேபோல் சீனா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் ஜப்பான் அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்துள்ளன. இந்த முடிவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், எனவே இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் ஜப்பானை அந்த இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

என்னதான் அணுக்கழிவுகளைச் சுத்திகரித்து கடலில் விடப் போவது என்றாலும் அந்தக் கழிவில் உள்ள டிட்ரியத்தை முழுமையாக அகற்றுவதற்கான தொழில்நுட்பம் உலகத்திடம் இல்லை. அணுசக்தியும் மானுடமும் ஒன்றாக வாழமுடியாது என்கிற கூற்று மீண்டும் உண்மையாகியுள்ளது.

பா.ஸ்ரீகுமார்