Family Tree-Cargill உலகிலேயே அதிக பில்லியனர்களைக் கொண்ட முதல் குடும்பம்!
உலகில் மிக நீண்ட காலமாக இயங்கி வரும் நிறுவனங்களில் பெரும்பாலானவை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை; மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்பவை.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம், ‘கார்கில்’. அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ‘கார்கிலை’ நிர்வகிக்கும் குடும்பம், ‘கார்கில் குடும்பம்’ மற்றும் ‘கார்கில் - மேக்மிலன் குடும்பம்’ என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் நான்காவது பணக்காரக் குடும்பம் இது. விவசாயப் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து, அதை மளிகைப் பொருட்களாக மாற்றி உலகமெங்கும் விநியோகிப்பது ‘கார்கிலி’ன் முதன்மை பிசினஸ். இதுபோக உணவு, நிதி, இண்டஸ்ட்ரி, கோழிப்பண்ணை, கால்நடை வளர்ப்பு, லாஜிஸ்டிக்ஸ் என இக்குடும்ப நிறுவனம் பல துறைகளிலும் கால் பதித்து பிசினஸ் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
ஆம்; இன்று அமெரிக்காவில் உள்ள அனைத்து ‘மெக்டொனால்டு’ உணவகங்களும் ‘கார்கிலி’ன் கோழிப் பண்ணையிலிருந்துதான் முட்டைகளை வாங்குகின்றன.அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதியாகும் உணவு தானியங்களில் 25 சதவீதம் ‘கார்கிலு’டையது. தவிர, அமெரிக்காவின் மாமிச உணவுச் சந்தையில் 22 சதவீதத்தை ‘கார்கில்’ தன்வசப்படுத்தியுள்ளது. அத்துடன் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனின் உணவுத்தட்டிலும் கார்கிலின் தயாரிப்பு நிச்சயமாக இருக்கும், அல்லது கார்கிலின் தயாரிப்பை நுகராத ஒரு அமெரிக்கர் கூட இருக்க மாட்டார்கள்.
இப்படி இதன் சாதனைகளையும் பெருமைகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம். வில்லியம் வாலஸ் கார்கில் “கடந்த 200 வருடங்களில் பிறந்து, மறைந்த 100 பிசினஸ் ஜாம்பவான்களைப் பட்டியலிட்டால் முதல் 10 இடங்களுக்குள் வரக்கூடியவர் வில்லியம் வாலஸ் கார்கில்...” என்று பிசினஸ் பத்திரிகைகள் இவரைப் பாராட்டுகின்றன. வில்லியம்தான் ‘கார்கில்’ சாம்ராஜ்யத்துக்கு வலிமையாக அடித்தளமிட்டவர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய ஆண்டுகள். நியூயார்க்கில் குடியேறிய கப்பல் கேப்டன் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் வில்லியம். படிப்பில் பெரிதாக வில்லியமிற்கு நாட்டமில்லை. ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று 15 வயதாக இருந்தபோதே முடிவு செய்து விட்டார். அப்போது அமெரிக்காவில் நெருக்கடியான நிலை. உள்நாட்டுப் போர் நெருங்கிக்கொண்டிருந்த சூழல். இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை மொத்தமாக வாங்கி சில்லரை வர்த்தகத்தில் விற்று தனது பிசினஸ் வாழ்வை ஆரம்பித்தார் வில்லியம்.
6 வருடங்களாக தானியங்களை விற்பனை செய்ததில் கிடைத்த வருமானத்தை சேமித்து வைத்து, 1865ம் வருடம் ஒரு தானியக் கிடங்கை ஹானோவர் என்ற இடத்தில் நிறுவினார். அப்போது அவரது வயது 21. இந்த தானியக்கிடங்குதான் இன்று ‘கார்கில்’ நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
ஹானோவரில் இருந்த தானியக்கிடங்கு நன்றாகப் போனாலும் அங்கிருந்து மின்னசோட்டா பகுதிக்கு கிடங்கை மாற்றினார். மின்னசோட்டாவில் புதிதாக உருவான ரயில்வே போக்குவரத்து தானியங்களைப் பக்கத்து ஊர்களுக்கு அனுப்ப வசதியாக இருந்தது இதற்கு ஒரு காரணம். ரயில் போக்குவரத்தால் நாலாப்பக்கமும் பிசினஸ் பெருகியது.
இருந்தாலும் மின்னசோட்டாவிலேயே தேங்கிப் போகாமல் 1875ம் வருடம் விஸ்கான்சினுக்கு நகர்ந்தார். அங்கே அவருக்கு பிசினஸ் சம்பந்தமான நபர்களின் அறிமுகம் கிடைத்தது. பிசினஸை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்த நகர்த்த அவருக்கான பிசினஸ் வாய்ப்புகள் பெருகிக்கொண்டே போயின.
விஸ்கான்சினில் தானிய வர்த்தகத்தைத் தாண்டி நிலக்கரி, மாவு, மரம் வெட்டுதல், தீவனம், எண்ணெய் வித்துக்கள் என பல வகைகளில் பிசினஸை விரிவாக்கினார். அத்துடன் நீர்ப் பாசனம், நிலம், பண்ணை, ரயில்பாதை அமைத்தல் என பல துறைகளில் முதலீடு செய்தார். ஹானோவரிலிருந்து பிசினஸ்தான் விஸ்கான்சினுக்கு நகர்ந்தது. ஆனால், ஹானோவரின் வாடிக்கையாளர்கள் வில்லியமைவிட்டு எங்கேயும் நகரவில்லை. அத்துடன் விஸ்கான்சினில் ஆயிரக்கணக்கான புது வாடிக்கையாளர்கள் அவருக்குக் கிடைத்தனர். மட்டுமல்ல, புது இடங்களில் அவருக்குக் கிடைத்த பிசினஸ் நட்புகள் பொருளாதார நெருக்கடி காலங்களில் வில்லியமிற்குப் பேருதவியாக இருந்திருக்கின்றனர்.
ஓரிடத்திலேயே தேங்கிவிடாமல் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் புது வாய்ப்புகள் கிடைக்கும் என்பது வில்லியமின் பிசினஸ் கொள்கை. புதுப்புது நபர்களுடனான தொடர்பு பிசினஸை விரிவாக்குவதற்கான இவரது தாரக மந்திரம். 1885ல் தனது சகோதரர்களுடன் இணைந்து மின்னசோட்டா, டகோட்டாவைச் சுற்றியிருந்த பகுதிகளில் 100 தானியக் கிடங்குகளை அமைத்தார். இதன் மொத்தக் கொள்ளளவு 16 லட்சம் புஷல்கள்( ஒரு புஷல் = 25.40 கிலோ). இந்தத் தானியங்கள்தான் அப்போதிருந்து அமெரிக்கர்களின் பசியை ஆற்றி வருகிறது.
வில்லியமின் மகள் எட்னா கிளாரா, ஜான் மேக்மிலனைத் திருமணம் செய்ய, கார்கில் குடும்பம் கார்கில் - மேக்மிலன் குடும்பமாகப் பரிணமித்தது. ஆனால், நிறுவனத்தின் பெயர் கார்கிலாகவே நிலைத்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம். வில்லியமின் மரணத்துக்குப் பிறகு நிறுவனம் மருமகன் ஜான் மேக்மிலனின் கைக்கு வந்தது. இவர் அமெரிக்காவைத் தாண்டி மற்ற நாடுகளிலும் பிசினஸை விரிவாக்கினார்.
அமெரிக்காவின் முதன்மை உணவு தானிய ஏற்றுமதி நிறுவனமாக ‘கார்கில்’ வளர்ந்தது. கனடா, ரோட்டர்டாம், வின்னிபெக், அர்ஜெண்டினாவில் அலுவலகங்களைத் திறந்து, ‘கார்கிலை’ கார்ப்பரேட் நிறுவனமாக வடிவமைத்தார் ஜான் மேக்மிலன். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பா, ஆசியாவில் கால்பதித்து அங்கிருக்கும் தானிய சந்தைகளைத் தன்வசப் படுத்தியது ‘கார்கில்’.
விட்னி மேக்மிலன்
‘‘‘கார்கில் - மேக்மிலன்’ நிர்வாகத் தலைவன்...’’ என்று விட்னி மேக்மிலனைக் கொண்டாடுகிறது ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை. இவரது நிர்வாகத் திறமை, தொலைநோக்குப் பார்வை, பிசினஸ் நுணுக்கங்களால்தான் உலகளாவிய பெரு நிறுவனமாக வளர்ந்தது ‘கார்கில்’.
பிசினஸில் யாருடைய அறிவுரைகளையும் பின்பற்றமாட்டார் விட்னி. குறிப்பாக அவரது தந்தையும் நிறுவனத்தின் நிர்வாகியுமான கார்கில் மேக்மிலன் சீனியர் சொல்வதைக் கேட்கவே மாட்டார். தனது இருபது வயதில் குடும்ப நிறுவனத்தில் எண்ணெய் வியாபாரப் பிரிவில் பணியாற்ற ஆரம்பித்தார். நிறுவனத்தின் அடிமட்டத்தில் இருந்து வேலை செய்து பிசினஸைக் கற்றுக்கொண்டார் விட்னி.
அடுத்த இரண்டு வருடங்களில் பிலிப்பைன்ஸில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு தலைமையேற்றார். 1956ல் அமெரிக்கா திரும்பிய விட்னி தானியப் பிரிவைக் கையில் எடுக்க, அமெரிக்காவின் முன்னணி தானிய உற்பத்தி நிறுவனமாக மாறியது ‘கார்கில்’. 1962ல் நிறுவனத்தின் துணை அதிபரானார். சர்வதேச சந்தைகளில் கார்கிலின் தயாரிப்புகள் சக்கைப்போடு போட ஆரம்பித்தன.
1976-ல் முழுமையாக நிர்வாகம் சிட்னியின் கைக்கு வந்தது. இவரது நிர்வாகத்தில் 10 பில்லியன் டாலராக இருந்த டர்ன் ஓவர் அடுத்த பத்து வருடங்களில் 33 பில்லியன் டாலராக உயர்ந்தது. 80களிலேயே உலகின் மிகப்பெரிய உணவு தானிய நிறுவனமாக ‘கார்கிலை’ வளர்த்தெடுத்தார் விட்னி.
ஒவ்வொரு வருடமும் நிறுவனத்துக்குக் கிடைக்கும் நிகர வருமானத்தில் 80 சதவீதத்தை நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மறுமுதலீடு செய்தது இவரது தனிச்சிறப்பு. நிறுவனம், தொழில் விரிவாக்கம்தான் இவரது சொத்து. கிடைக்கும் லாபத்தை தொழிலிலேயே முதலீடு செய்ததால் உலகெங்கும் கிளைகள் துளிர்விட்டன.
விட்னியின் முதலீட்டுக் கொள்கையை இன்றும் ‘கார்கில்’ பின்பற்றி வருகிறது.விட்னியின் காலத்தில்தான் உணவு தானியங்கள், முட்டை, இறைச்சி, எண்ணெய் வித்துக்கள், காபி, சாக்லேட், உரம், நிதிச் சேவை, உப்பு, ரப்பர், பருத்தி உற்பத்தி, ஸ்டீல்... என ‘கார்கிலின்’ தயாரிப்புப் பட்டியலில் நூற்றுக்கணக்கான பொருட்கள் சேர்ந்தன.
நிறுவனத்தை அசைக்க முடியாத ஓர் இடத்துக்குக் கொண்டு வந்துவிட்டு 1995ல் ஓய்வு எடுத்துக்கொண்டார் விட்னி. ‘கார்கிலி’ன் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய கடைசி குடும்ப உறுப்பினரும் இவரே. விட்னிக்குப் பிறகு குடும்பம் சாராத திறமைசாலிகளிடம் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அது நிறுவனத்தின் வளர்ச்சியை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது. 2003ல் ஒரு பில்லியன் டாலருக்கு அதிகமாக வருமானம் ஈட்டிய நிறுவனமாக உயர்ந்தது ‘கார்கில்’.
இன்று
மின்னசோட்டாவில் தலைமையகம் இயங்கி வருகிறது. ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் நிர்வாகக் குழுவில் மட்டும் பங்குபெறுகிறார்கள். குடும்ப உறுப்பினர் அல்லாத டேவிட் மேக்லென்னன் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.
நிறுவனத்தில் 1.55 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். 70 நாடுகளில் இந்நிறுவனம் கிளை பரப்பியுள்ளது. 125க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். 2018ம் வருடத்தின் ஆண்டு வருமானம் 8,54,886 கோடி ரூபாய். 2019ம் ஆண்டு கணக்கின்படி கார்கில் - மேக்மிலன் குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு 2,92,475 கோடி ரூபாய். இக்குடும்பத்தைச் சேர்ந்த 23 உறுப்பினர்களிடம் நிறுவனத்தின் 88 சதவீத பங்கு இருக்கிறது. இதில் 14 பேர் பில்லியனர்கள். உலகிலேயே அதிக பில்லியனர்களைக் கொண்ட முதல் குடும்பம் இதுதான்.
த.சக்திவேல்
|