‘வலிமை’ exclusive



வருகிற மே 1 அஜித்தின் ரசிகர்களுக்கு செம ஸ்பெஷல் டே. அன்று அஜித்தின் பிறந்தநாள். அன்றே, ‘வலிமை’யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தெறிப்பதால், குஷியில் மிதக்கிறார்கள் தல ரசிகர்கள். நாம் முன்பே சொன்னது போல, ‘அம்மா - மகன்’ சென்டிமென்ட்தான் படத்தின் நாட். ‘வலிமை’யின் இப்போதைய நிலவரம் என்ன? முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதா? இல்லை, ஷூட் பேலன்ஸ் இருக்கிறதா? ஹைதராபாத் ஷூட்டில் நடந்த சுவாரஸ்யம் என்ன? இதுகுறித்து ‘வலிமை’ வட்டாரத்தில் விசாரித்தோம். சீறி வந்த இன்ட்ரஸ்டிங் புல்லட்ஸ் இனி...

அஜித் இதிலும் செம ஸ்பீடு. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் ஒர்க் பரபரப்பதால், தனது டப்பிங்கை நான்கே நாட்களில் முடித்துக் கொடுத்திருக்கிறார் அஜித்.

நேர்மையான போலீஸ் அதிகாரி அர்ஜுனின் வாழ்க்கையில் என்ட்ரி ஆகிறார் தப்பு பண்ணும் வில்லன் கார்த்திகேயா (தெலுங்கு ஹீரோ). சமூகத்துக்குத் தீங்கு இழைக்கும் அந்த வில்லனை சட்டத்தின் முன் நிறுத்துகிறார் ஹீரோ. இதுதான் படத்தின் ஒன்லைன்.கதைக்கரு சிம்பிளாக இருந்தாலும், திரைக்கதை ட்ரீட்மென்ட் பக்கா பரபர. ஆக்‌ஷன் + ஃபேமிலி சென்டிமென்ட். விறுவிறுப்புக்கு ஃபுல் கேரண்டி கொடுக்கிறார் இயக்குநர் எச்.வினோத்.

ஹீரோயினாக ‘காலா’ ஹூமா குரேஷி, அஜித்தின் அம்மாவாக சுமித்ரா, தவிர யோகிபாபு, புகழ், அச்யுத்குமார், ராஜ் அய்யப்பன், பாவெல் நவகீதன் என பலரும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். நெட்ஃபிளிக்ஸில் ‘ஃபோர்மோர் சாட்’ஸில் நடித்த பஞ்சாபி நடிகை குர்பானி ஜட்ஜ், ‘வலிமை’ மூலம் தமிழுக்கு வருகிறார். மலையாள நடிகர் சிவாஜி குருவாயூருக்கு பிரமாதமான கேரக்டராம்.

ஆக்‌ஷன் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துக் கொடுத்திருக்கிறார். மூன்று ஃபைட்களை ஹைதராபாத்திலும், மீதமுள்ள ரெண்டு ஃபைட்களை சென்னையிலும் ஷூட் செய்திருக்கிறார்கள். டாக்கி போர்ஷனும் ஆக்‌ஷன் ப்ளாக்குகளும் நிறைவடைந்தாலும், ஆக்‌ஷன் போர்ஷனில் இன்னும் மூன்று பேட்ச் ஒர்க் இருக்கிறது என்கிறது யூனிட்.

ஃபிட்னஸில் தாறுமாறாக கவனம் செலுத்தும் அஜித், ஹைதராபாத்தில் ஷூட் நடந்தபோதெல்லாம், தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சைக்கிளிலேயே வந்து, சென்றிருக்கிறார். அவரது உதவியாளர்கள் தலயின் பாதுகாப்பு கருதி, காரில் பின் தொடர்ந்திருக்கின்றனர்.

ஆகஸ்ட்டில் ஸ்ரீதேவியின் பிறந்தநாள் வருகிறது. அன்று படத்தை ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் தரப்பில் சொல்கிறார்களாம். அந்த மாதத்தில் அஜித்தின் சென்டி மென்ட்படி ஏதாவது ஒரு வியாழக்கிழமை அன்று படம் ரிலீசாகலாம்.

ஹைதராபாத்தில் நடந்த ஒரு சேஸிங் ஃபைட் சீக்குவென்ஸில் அஜித், பஸ் ஒன்றையும் ஓட்டியிருக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்றி’ல் வரும் பஸ் ஃபைட் போல, இதிலும் அந்த ஃபைட் பேசப்படும் என்கிறார்கள். வழக்கம்போல, சேஸிங், சண்டைக்காட்சி களில் டூப் உதவி இல்லாமல் ரிஸ்க் எடுத்து மிரட்டியிருக்கிறார் அஜித்.

அஜித் - போனிகபூர் - இயக்குநர் எச்.வினோத் கூட்டணி, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப்பின் மீண்டும் இணைகிறது! ஆனால், இதற்கான வேலைகள் அடுத்தாண்டுதான் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

கொரோனா காரணமாக ஸ்பெயினில் எடுக்கத் தீர்மானித்த சண்டைக்காட்சியை சென்னையிலேயே செட் போட்டு எடுத்துவிட்டார்கள். ஹீரோயின் ஹூமாவுக்கு பெரியளவில் ஸ்கோப் இல்லை என்கிறார்கள். அதாவது ‘தீரன்’ படத்தில் ரகுல் எப்படியோ அப்படி இதில் ஹூமாவின் போர்ஷன் இருக்கிறதாம்.

டப்பிங்கின்போதே, படத்தைப் பார்த்துவிட்ட அஜித்திற்கு திருப்தி. ஏற்கனவே அவர் சொன்னது போல, லாக்டவுன் இல்லாத சூழலில் தியேட்டரில் நூறு சதவிகித இருக்கைகள் வசதி வந்த பிறகுதான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அஜித்.

மை.பாரதிராஜா