அறுபதை இருபதாக்கி இளமையை மீட்டுத் தரும் ஆபரேஷன்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



             நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் கவனம் ஈர்த்த பல விஷயங்களில் ஷேன் வார்னின் திடீர் இளமைத் தோற்றமும் ஒன்று! மேஜிக் மாதிரி இளமைக்குத் திரும்பியிருந்த வார்ன், தான் உபயோகிக்கிற பிரபல நிறுவனத்தின் மாயிச்சரைசரும், பின்பற்றுகிற உணவுக் கட்டுப்பாடுமே இதற்குக் காரணம் என்று மீடியாக்களின் வாயை அடைத்தார்.

ஆனால், ‘வார்ன் பொய் சொல்கிறார்... மாயிச்சரைசரோ, டயட்டோ இந்தளவு மந்திரம் செய்யாது. வார்னின் திடீர் இளமைத் தோற்றத்துக்குக் காரணம், அவர் செய்து கொண்டுள்ள காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை’ என்று பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் பலரும் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சைகளின் துணையுடன்தான் அழகாக வலம் வருகிறார்கள். கன்னச் சதைகளைத் தூக்கி நிறுத்த, கண்களுக்கு அடியில் சுருக்கம் போக்க, நெற்றிக்கோடுகளை நீக்க, மூக்கை அழகாக்க, மார்பகங்களை கவர்ச்சியாக்க, தொப்பையையும், தொடைகளையும் இளைக்கச் செய்ய... இப்படி எல்லாவற்றுக்கும் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சையில் தீர்வு இருக்கிறது இன்று!

இளமையை மீட்டுத் தரும் அழகு அறுவை சிகிச்சைகள் நம்மூரிலும் உண்டா? எந்த மாதிரி அறுவை சிகிச்சைகளுக்கு இங்கே வரவேற்பு அதிகம்?

பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் காஸ்மெடிக் சர்ஜரியில் பிரபலமான டாக்டர் ஜோத்ஸ்னா மூர்த்தியிடம் பேசினோம்.

‘‘கொழுப்பை நீக்கற லிப்போசக்ஷன், மார்பகங்களை பெரிதாக்கவோ, சிறிதாக்கவோ செய்யற ஆபரேஷன், மூக்கை அழகாக்குற அறுவைக்கெல்லாம் இருக்கிற வரவேற்பு, முகத்துக்கான ஆபரேஷன்ல இல்லைங்கிறதுதான் உண்மை. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஃபேஷியல் மாதிரியான அழகு சிகிச்சைகள் மூலமே சருமத்தை இளமையா வச்சுக்கத் தெரிஞ்சவங்க நம்மாளுங்க...’’ என்கிற டாக்டர், இங்கே பிரபலமாக உள்ள இளமை அறுவை சிகிச்சைகளைப் பற்றிப் பேசுகிறார்.

‘‘பார்ப் ஒயர்னு சொல்லக் கூடிய ஒருவித நைலான் ஒயர்களை வச்சுப் பண்ற ‘திரெட் சஸ்பென்ஷன்’ ரொம்ப லேட்டஸ்ட். முகத்துல குறிப்பிட்ட சில இடங்கள்ல இந்த ஒயரை செருகி, இழுத்துச் செய்யற சிகிச்சை. ஒரு ஒயரோட விலை 15 முதல் 20 ஆயிரம் ரூபாய். குறைஞ்சபட்சம் ஒரு சிகிச்சைக்கு 15 ஒயர்களாவது தேவைப்படும். தழும்புப்பகுதியை தலைமுடி மறைக்குங்கிறதால, ஆபரேஷன் செய்ததே வெளிய தெரியாது. இந்த ட்ரீட்மென்ட் மூலமா கிடைக்கிற பலன், 6 மாசத்துக்கு நீடிக்கும். பிறகு மறுபடி சருமம் தொய்வடைய ஆரம்பிக்கும்.
 ‘ஃபேஸ் லிஃப்ட் சர்ஜரி’ & பாலிவுட் பிரபலங்கள் பலரும் இதைப் பண்ணியிருக்காங்க. 55&60 வயசுக்கு மேல தேவைப் படும். முகத்துல உள்ள சருமத்தை வெட்டியெடுத்து, தொய்வடைஞ்ச சருமத்தைத் தூக்கித் தைக்கிற சிகிச்சை இது. காதுகளை ஒட்டித் தெரியற தழும்பு தவிர்க்க முடியாதது. மேக்கப் மூலமாகவும், தழும்பை மறைக்கிற மாதிரியான ஹேர்ஸ்டைல் மூலமாகவும் சமாளிப்பாங்க. அவங்கவங்க சருமத்தைப் பொறுத்து, இதோட பலன் 4 முதல் 6 வருஷங்களுக்கு நீடிக்கும். ஆபரேஷனுக்கு குறைஞ்சது 4 மணி நேரம் தேவைப்படும். செலவு... ஒன்றரை லட்சம் ரூபாய்!

போடாக்ஸ் இன்ஜெக்ஷன் பத்தி இங்க நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கு. நெற்றி, கண்கள் ஓரம்னு முகத்தோட மேல் பகுதில ஏற்படற சுருக்கங்களைப் போக்க இது உதவும். ஒரு ஊசியோட விலை 10 ஆயிரம் ரூபாய். 3 மாசம் வரை பலன் தரும்.

தாடை, வாய் ஓரங்கள்னு முகத்தோட கீழ் பகுதில உண்டாகிற முதுமையை மறைக்க, ஃபில்லர்ஸ் உதவும். இதுவும் ஒருவிதமான இன்ஜெக்ஷன்தான். ஒரு ஊசியோட விலை 15 முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை. இதுலயும் 3 மாசம்தான் பலன் இருக்கும். வீட்ல ரொம்ப முக்கியமான விசேஷம், மிகப்பெரிய பார்ட்டினு தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகள்ல முகம் காட்டறப்ப, முகத்துல உள்ள தழும்புகளோ, கோடுகளோ தெரியக்கூடாதுனு நினைக்கிறவங்க, இந்த ஃபில்லர் சிகிச்சையை செய்துக்கிறாங்க. பணக்காரங்க, பிரபலங்கள் மத்தில இது பிரபலமா இருக்கு.
வயசாக ஆக, கண்களுக்கடியில உள்ள பகுதி லூசாகும். அது தெரிய வேண்டாம்னு நினைக்கிறவங்களுக்கு, அவங்க வயிற்றுப் பகுதிலேர்ந்தே கொழுப்பை எடுத்து, ஊசி மூலமா செலுத்தற ‘ஃபேட் ஃபில்லிங்’ சிகிச்சையும் இப்ப ரொம்பப் பிரபலம். அவங்களோட உடம்பு கொழுப்பை வச்சே செய்யறதால, இதோட பலன் நிரந்தரமானது’’ என்கிறார் ஜோத்ஸ்னா.

 விரைவில் வரவிருக்கிற ஸ்டெம்செல் சிகிச்சைகள், அழகு அறுவைத் துறையில் பெரிய புரட்சியை உருவாக்கலாம் என்று நம்பிக்கை தருகிற டாக்டர், இயற்கையான முறையில் இளமையைத் தக்க வைத்துக் கொள்ள டிப்ஸ் தருகிறார்.

மனசளவுல எப்போதும் சந்தோஷமா இருக்கிறவங்களுக்கு முகம் இளமையா இருக்கும்.

வெயில், புவி ஈர்ப்பு சக்தின்னு ரெண்டு விஷயங்களால சருமத்துக்கு வயசாகுது. ரெண்டாவது விஷயத்துக்கு எதிரா நாம எதுவும் பண்ண முடியாது. ஆனா, வெயில்லேர்ந்து பாதுகாக்கலாம்.
ஆரோக்கிய சாப்பாடும் சரும அழகுக்கு அவசியம். முறையான ஃபேஷியல்கள், மிதமான மசாஜ் எல்லாமும் ஓரளவு உதவும்.
ஆர்.வைதேகி