கொரோனா 2ம் அலையால் இந்திய மக்கள் பாதிக்கப்பட மத்திய அரசின் அலட்சியமே காரணம்!
டாக்டர் சென்பாலன்
தடுப்பூசி தயாரிக்காத நாடுகள் எல்லாம் தங்கள் மக்களை பாதுகாத்தபோது, தடுப்பூசியைத் தயாரித்த இந்தியா பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது...
கொரோனா வைரஸ் மனித உடலில் பல்கிப் பெருகுவதைத் தடுக்கும் ரெம்டெசிவிர் மருந்துக்கு 2ம் அலையில் தட்டுப்பாடு...
மத்திய அரசின் மூலமே மாநில அரசுகள் கொரோனா மருந்துகளை வாங்கவேண்டும் என்ற அரசாணை...
மருத்துவப் பணியாளர்களின் சோர்வை நீக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத அரசாங்கம்...
இந்தியாவில் கொரோனா உறு பிணி பரவத்தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில், இப்போது வேறொரு பரிமாணத்தில் பெரும் வேகமெடுத்து இரண்டாவது அலையாகத் தாக்கி வருகிறது. ‘‘மருத்துவமனையில் படுக்கை வேண்டும், ஆக்சிஜன் வேண்டும், ரெம்டெசிவிர் மருந்து வேண்டும்...” என உதவிகோரும் குரல்கள் டுவிட்டரிலும் வாட்ஸ் அப்பிலும் நிறைந்துள்ளன.
மைல் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஒரே படுக்கையில் மூன்று நோயாளிகள், தொடர்ந்து எரிந்ததால் உருகிய தகனமேடைகள்... என இதுவரை வாழ்நாளில் கண்டிராத காட்சிகளை இந்தப் பேரிடர் காலம் கண்முன்னே நிகழ்த்துகிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என உலகநாடுகள் பலவும் இரண்டாவது அலையை எதிர்கொண்டு இப்போது மீண்டு வருகின்றன. இந்தியாவிலும் இரண்டாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் பலரும் ஊகித்து முன்னரே எச்சரித்து வந்தனர்.
ஆயினும் அவற்றை எல்லாம் புறம்தள்ளி, எந்தவித முன்யோசனையும் இல்லாமல் இப்படி ஒரு கொடுமையான உச்சத்தில் எப்படி இந்தியா நுழைந்தது? கொரோனாவைப் பொறுத்தவரை 100% தீர்க்கமான சிகிச்சை முறைகள் இதுவரை கண்டறியப்படவில்லை. வருமுன் காப்பது மட்டுமே நோய்ப் பரவலைத் தடுக்க ஒரே வழி.
இதனால் கொரோனா உறுபிணி தொடங்கிய காலத்தில் இருந்தே தடுப்பூசிகளை அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். தடுப்பூசிகள் கண்டறியப்பட்ட உடன் பல நாடுகளும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை முழுவேகத்துடன் ஆரம்பித்தனர்.
இஸ்ரேல், இங்கிலாந்து, அமெரிக்கா, மத்திய கிழக்கு போன்ற நாடுகள் தங்கள் மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி நோய் தாக்குதலின் கோரப்பிடியில் இருந்து வெளியில் வந்துவிட்டன. ஆனால், இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரானாலும், பெருவாரியான மக்களுக்குப் போடப்படவில்லை. மக்கள் தொகையில் குறைந்தபட்ச சதவீதத்தைக் கூட இன்னும் எட்டவில்லை. உள்நாட்டில் போடுவதற்கு பதிலாக தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஜனவரி மாதத்தில் இருந்து முழுவேகத்துடன் வழங்கப்பட்டிருந்தால் இந்நேரம் இரண்டாம் அலையின் தாக்கம் இவ்வளவு கொடூரமாக இருந்திருக்காது. இத்தனை உயிரிழப்புகள், ஓலங்கள் இருந்திருக்காது.
தடுப்பூசி தயாரிக்காத நாடுகள் எல்லாம் இறக்குமதி செய்து தங்கள் மக்களைப் பாதுகாத்தபோது, தடுப்பூசியைத் தயாரித்த ஒரு நாடு அவற்றை ஏற்றுமதி செய்துவிட்டு, பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதை நிர்வாகக் கோளாறு என்றுதான் கூறவேண்டும். தடுப்பூசி சிக்கலின்றி கிடைப்பதற்காக உலகநாடுகள் பலவும் தடுப்பூசி நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்தன; ஆராய்ச்சிக்குப் பண உதவி வழங்கின. இதன் மூலம் தங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்தன.
140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடு, பல தடுப்பூசி நிறுவனங்களுடன் முன் கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி இவற்றை எல்லாம் செய்திருக்கவேண்டும். ஆனால், இப்போதுதான் ரஷ்ய தடுப்பூசி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளனர். தயாரித்த தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துவிட்டு, ஆபத்தில் சிக்கிக்கொண்டு, காலம் கடந்து இறக்குமதி செய்ய முயற்சிக்கும் ஓர் அரசை இப்போதுதான் பார்க்கிறோம்.
கொரோனா வைரஸ் மனித உடலில் பல்கிப் பெருகு வதைத் தடுக்கும் மருந்தே, ரெம்டெசிவிர். கோவிட் நோய் தாக்கியவர்களின் உயிர்காக்கும் சிகிச்சையில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. முதல் அலை ஏற்பட்டபோது இந்தியாவில் பல மருந்துக் கம்பெனிகள் ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்க லைசன்ஸ் பெற்று பெருமளவில் தயாரித்தன. முதல் அலை முடிந்தவுடன் மிச்சம் இருந்த ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க ஆள் இல்லை. அரசும் கொள்முதல் செய்யவில்லை.
இதனால் மருந்துக் கம்பெனிகள் ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பை நிறுத்திக் கொண்டன. சில கம்பெனிகள் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்தன. இதனால் கையிருப்பில் மருந்துகள் இல்லை. மீண்டும் இரண்டாவது அலை தொடங்கியவுடன் ரெம்டெசிவிர் மருந்தின் பின்னால் மொத்த நாடும் ஓடுகிறது. கொஞ்சம் முன்யோசனை இருந்திருந்தால் அரசே ரெம்டெசிவிர் மருந்தை கம்பெனிகளிடம் இருந்து வாங்கி கையிருப்பில் வைத்திருந்திருக்கலாம்.
இது மக்கள் நல அரசின் கடமை. ஆனால், செய்யவில்லை. இந்த மெத்தனத்தால், மாதத்திற்கு 3.9 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யும் திறன் இருக்கும் ஒரு நாட்டில் ரெம்டெசிவிர் பற்றாக்குறையால் நோயாளிகள் இறக்கின்றனர். மாநில அரசுகள் சுயமாக கொரோனா மருந்துகளை வாங்கி வைக்கக் கூடாது; மத்திய அரசின் மூலமே வாங்கவேண்டும் என்ற அரசாணை மூலம் மாநில அரசு களின் கைகளும் கட்டப்பட்டு விட்டன. மகாராஷ்டிராவில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட மத்திய அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பின்மையை காரணமாகக் கூறுகின்றனர் மகாராஷ்டிர ஆட்சியாளர்கள்.
இரண்டாம் அலைக்கான முன் தயாரிப்பாக படுக்கை வசதிகளை அதிகரித்தல், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தல், மருத்துவர்களை நியமித்தல், மருத்துவப் பணியாளர்களை நியமித்தல் போன்றவற்றைச் செய்திருக்கலாம். முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடைப்பட்ட காலத்தில் இவை எவையுமே செய்யப்படவில்லை.
மிகப்பெரிய கூடங்கள், அரங்கங்களை தற்காலிக மருத்துவமனைகளாக எளிதில் மாற்றியிருக்கலாம். ஆனால், அவற்றை விட்டுவிட்டு ஒன்றுக்கும் உதவாத வகையில் இரயில்களை மருத்துவமனையாக மாற்றுவது போன்ற திட்டங்களில் பல ஆயிரம் கோடி பணமும், நேரமும் வீணடிக்கப்பட்டன. இப்படி வீணடித்த பணத்தில் படுக்கைகளும் ஆக்சிஜனும் வாங்கி வைத்திருந்தால் இந்நேரம் தற்காலிக மருத்துவமனைகள் மூலம் நிறைய உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
கொரோனா முதல் அலை ஆரம்பித்தபோது தமிழ்நாட்டில் மருத்துவத்துறையினருக்கும் முன்களப்பணியாளர்களுக்கும் பல உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. இரண்டாவது அலை ஆரம்பித்து பணிச்சுமை கூடியுள்ள நிலையில் மருத்துவப் பணியாளர்களிடம் ஒருவித சோர்வு தென்படுகிறது. இது நிச்சயம் சிகிச்சையில் தொய்வை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கும் இதேநிலைதான். மருத்துவப் பணியாளர்கள் சோர்வு நீங்கி உற்சாகமாக வேலை பார்ப்பதற்குரிய நடவடிக்கைகள் ஒன்றையும் இந்த அரசுகள் செய்யவில்லை. அதற்கு பதிலாக கும்பமேளா போன்ற விழாக்களை நடத்தி நோய்ப் பரவலை எளிதாக்கி மருத்துவத்துறையினரை, முன்களப்பணியாளர்களை மேலும் சோர்வடைய வைக்கின்றனர். நோய்த் தடுப்பு முறைகளில் குறைந்தபட்ச கட்டுப்பாடுகளைக் கூட பின்பற்ற அரசு முயலவில்லை.
மேற்கூறியவற்றில் சில நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொண்டிருந்தாலே இரண்டாம் அலையின் பாதிப்பு இவ்வளவு அதிகமாக இருந்திருக்காது. அனைத்து பக்கமும் குறைபாடுகளுடன் செயல்பட்டதால் இப்போது கொரோனா காட்டுத் தீ போல பரவுகிறது. உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும், வறுமையும் வேலையின்மையும் மக்களைச் சூழ்ந்துள்ளன. சென்ற வருட பாதிப்பில் இருந்தே பலரும் இன்னும் மீளாத நிலையில் இரண்டாம் அலையின் தாக்கம் இனி போகப்போகத்தான் தெரியும்.
உலகின் தலைசிறந்த மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இருக்கும் நாட்டில் இரண்டாவது அலை பற்றி இந்திய அரசை யாரும் எச்சரிக்கவில்லையா? கொரோனா தொடர்பாக அறிவுரை வழங்கி வந்த பல்வேறு நிபுணர் குழுக்கள் அரசிடம் எந்த பரிந்துரையும் வழங்கவில்லையா? இல்லை, வழங்கப்பட்ட பரிந்துரைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு தான்தோன்றித்தனமாக முடிவெடுக்கப்பட்டதா? இதுபோன்ற பதில் கிடைக்காத பல கேள்விகள் உள்ளன.
இந்த சந்தேகங்களை விளக்கும் வகையில் கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். யார் மீது தவறு எனக் கண்டறிந்து தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இனிமேலாவது மெத்தனம் இல்லாமல் அறிவியல்பூர்வமாகச் செயல்பட்டு இரண்டாம் அலையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
நோயை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும். கொரோனா பேரிடரால் உயிரை இழந்து, உடல் நலத்தை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில், கொடுமையில் உழலும் மக்களுக்காக இவற்றைச் செய்ய வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை.
|