ஆயிரக்கணக்கான இந்திய செல்வந்தர்கள் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டனர்..?



கொரோனா தொற்றால் இந்திய பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான செல்வந்தர்கள் வெளிநாடுகளில் குடியேறி வரும் அதிர்ச்சித் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அவ்வாறு வெளியேறி யவர்கள் இதற்காக பல காரணங்களைச் சொல்லும்போது, முக்கியமாக வருமான வரி கொடுமைகளை முன்வைக்கிறார்கள். அதோடு இந்தியாவின் வலதுசாரி அரசியலும் ஒரு காரணம் என்கிறார்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு மார்கன் ஸ்டான்லி என்ற நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மில்லியனர் அந்தஸ்துள்ள சுமார் 23 ஆயிரம் பேர் இந்தியாவைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக மிக அதிகம் என்கிறது அந்தச் செய்தி.

“அயல்நாடுகளின் எளிமையான நடைமுறைகள், இந்தியாவின் கடுமையான வரி சட்டங்கள் ஆகியவை இந்தியர்கள் வெளிநாட்டில் குடியேறுவதற்கான ஒரு சில எடுத்துக்காட்டுகள்தான்...” என்கிறார் பிபிசி செய்தியாளர் நிகில் இனாம்தான்.உண்மையிலேயே இந்தியாவில் வரி சட்டங்கள் கடுமையானதாக இருக்கிறதா... அவ்வாறு பல செல்வந்தர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதால் பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு பாதிப்பு ஏதும் ஏற்படுமா... போன்ற கேள்விகளை பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சனிடம் முன்வைத்தோம்.

“அவர்களுக்கு எல்லாம் பணத்தோடு அவர்களும் பத்திரமாக இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம் அவர்களுக்கு. கீழே இருப்பவர்கள் அடிச்சுக்கலாம். ஆனால், அவர்கள் டக்குனு ஃபிளைட் ஏறி பறந்துடணும். பசங்கள படிக்க வைக்கிறதிலிருந்து, சுற்றுலா வரை எல்லாமே வெளிநாடுகள்னு வாழறாங்க. இது எப்போதும் நடப்பதுதான். இவங்க சொல்லும் காரணம் எல்லாம் சும்மா. இங்கதான் எவ்வளவோ சலுகை மேல் சலுகை கொடுத்துட்டு இருக்காங்களே!

இன்னும் சொல்லணும்னா கூகுள், ஃபேஸ்புக், அமேசான் போன்ற நிறுவனங்கள் எல்லாம் அமெரிக்காவில் வரி கட்டுகிறார்களா? நிறுவனம்தான் அமெரிக்க நிறுவனம். இதுபோன்ற நிறுவனங்கள் சில நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுக்கறாங்க. அங்கெல்லாம் இவங்களுக்கு ஸ்டேண்டர்டு வரிகள் இருக்காது. ‘இத்தனை பில்லியன் டாலர் கொண்டு வந்து வச்சிருக்கிறேன். என்ன ரேட் உனக்கு வரி...’ என்பார்கள்.

வங்கிகளுக்கும், முதலாளிகளுக்கும் இருக்கற மாதிரி ஒவ்வொருவருக்கும் தனி டீல் இருக்கும். உதாரணமா பெரிய பெரிய மல்டிநேஷனல் நிறுவனங்கள் பல அயர்லாந்தில் டீல் போட்டு இருக்காங்க. லாபத்தில் வரும் பெரும் பகுதியை அங்க கொண்டு போய் வச்சுக்குவாங்க. அவங்களும் ‘நீ… மூன்று பர்சன்டேஜ், இரண்டு பர்சன்டேஜ் கொடு’னு நிறுவனங்களுக்குத் தகுந்த மாதிரி வாங்கி வச்சுக்கிறாங்க.

இப்படித்தான் பல நிறுவனங்கள் அங்க ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி, பணத்தை டிரான்ஸ்பர் பண்ணிக்கறாங்க. புக்குல பார்த்தா வரவு - செலவு எல்லாம் அயர்லாந்தில் இருக்கும்...” என்ற ஜெயரஞ்சன், இந்திய பெரு முதலாளிகள் வெகுவாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் மட்டும் ஏன் பெருமளவு சரிவைச் சந்திக்கின்றனஎன்றும் விளக்கினார்.

‘‘இந்த ஆண்டு எல்லா தனியார் நிறுவனங்களும் வரலாறு காணாத லாபத்தை கணக்குல காட்டியிருக்காங்க. தனியாரால் சம்பளத்தைக் குறைக்க முடியும்… அரசால் குறைக்க முடியுமா? ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர்கிட்ட அதன் முதலாளி, ‘ஓர் ஆண்டா பஸ்ஸே ஓடல… பாதி சம்பளத்துக்கு வா… இல்லைனா போய்யா’னு சொல்ல முடியும். ஆனா, அரசு பேருந்துல அப்படிச் செய்ய முடியுமா?

இன்றைய தேதில தனியார் நிறுவனங்கள் எல்லாம் வேஜ் கட் பண்ணிட்டாங்க. அக்ராஸ் த போர்டு வேஜஸை குறைச்சுட்டு லாபத்தை பெருசா காட்டறாங்க. அந்நிய நாட்டினர் எப்படி இங்க முதலீடு போட்டு லாபம் சம்பாதிச்சுட்டு போறாங்களோ, அப்படிதான் நம்ம நாட்ல இருக்கறவங்களும் வெளிநாடுகளுக்குப் போய் முதலீடு போட்டு லாபம் சம்பாதிக்கறாங்க.

வெளிநாட்டினர் வந்து முதலீடு போட்டா இங்க வேலைக்கு ஆள் எடுப்பாங்க. என்ன... எட்டாயிரம், பத்தாயிரம் சம்பளத்துக்கு எடுப்பாங்க. ஒரு ஐநூறு பேருக்கு மட்டும் முப்பதாயிரம், நாற்பதாயிரம்னு கொடுப்பாங்க. சி.ஓ மாதிரி இருப்பவங்களுக்கு நிறைய காசு கொடுப்பாங்க. அவ்வளவுதான்…” என்கிறார் ஜெயரஞ் சன்.

அன்னம் அரசு