நரவாரிக் குப்பம் பேரூராட்சி :அரசு ஊழியர்கள் மனசு வைச்சா குப்பையும் பூங்காவா மலரும்!



சென்னை செங்குன்றம் அடுத்த நரவாரிக்குப்பம் பேரூராட்சியருகே ரோட்டோரப் பகுதிகள், பொட்டல் நிலங்கள் என அத்தனையிலும் மக்கள் குப்பை கொட்டி வந்தனர். ஆனால், இப்போது நிலை அப்படியே தலைகீழ்!

ஆம். குப்பை கொட்டிய பகுதிகள் எல்லாம் செடிகளும், மரங்களுமாக பூத்துக் குலுங்குகின்றன!
‘‘நான் 2017ல் இங்கே போஸ்டிங் வாங்கி வந்தேன். ஒரே துர்நாற்றம். குப்பைகள் எல்லாம் பறந்து ஏரியா முழுக்க புழுதி. நரவாரிக்குப்பம் பெயருக்கு ஏத்த மாதிரி நாறுதுன்னு கிண்டல்கள். அதை எப்படியாவது மாத்தணும்னு நினைச்சோம்…’’ நிதானமாக பேசத் தொடங்கினார் நரவாரிக்குப்பம் சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஆர்.மதியழகன்.

‘‘இந்த இடத்தை எப்படியாவது மாத்தி குப்பைகளை எல்லாம் சரியா பிரிச்சு சுத்தமாக்க நினைச்சோம். முதற்கட்டமா இடத்தை அளந்து சுத்தம் செய்ய ஆரம்பிச்ச உடனேயே ஏரியா மக்கள் சூழ்ந்துட்டாங்க. பட்டா நிலம்னு ஒரு பக்கம், நாங்க தனியாருக்கு இடத்தை விற்கறோம்னு இன்னொரு பக்கம். ஆளாளுக்கு என் இடம்னு வேற ஒரு குரூப். நாங்க ஏதோ பிளாட் போட்டு விக்கப் போறதா நினைச்சுட்டாங்க.

அவங்களை சமாதானப்படுத்தி விஷயத்தைப் புரிய வைக்கவே ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்பறம் அளந்து பட்டா இடங்களை பிரிச்சு தனியாக்கி, பொது இடத்தைக் கூட்டி சுத்தப்படுத்தினோம். குறிப்பா இங்கே இருக்கற சுகாதாரத் துறை ஊழியர்கள் அவ்வளவு ஆர்வமா வேலை செய்தாங்க...’’ என்னும் ஆர்.மதியழகன் மற்றும் அவரது குழுவினர் அடுத்தடுத்து செடிகள் வைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கின்றனர்.

‘‘ஆரம்பத்திலே நிறைய செடிகள், பூக்கள்னு திட்டமிட்டு நட்டு வெச்சோம். ஆனால், சாலையோரமா ஏரிக்கரையோரம் இருக்கறதால எந்நேரமும் ஒருத்தர் காவல் காக்க வேண்டியிருந்துச்சு. அதனால் மரங்களா மாத்தினோம். வேப்ப மரம், அரச மரம், புன்னை மரம், மகிழம்பூ ... இப்படி நிறைய மரங்கள்.

இது தவிர்த்து, கொட்டுகிற குப்பைகளை பயோ முறைப்படி பிரிச்சு திடக்கழிவு உரம் தயாரிச்சு ஊர் மக்களுடைய விவசாயப்பயன் பாட்டுக்கே விற்பனை செய்கிறோம். இதிலே வருகிற வருமானத்திலும் ஒரு சிறு தொகையை துப்புரவுத் தொழிலாளிகளுக்கு ஊக்கத் தொகையா கொடுத்துட்டு மீதியை அரசாங்கத்துக்குக் கொடுக்கறோம்.

இதிலே சிறப்பான விஷயம், குப்பைகள்ல விழுற சின்ன பிளாஸ்டிக் பாக்ஸ கூட விடாம அத்தனையிலும் சின்னச் சின்ன செடிகளா வெச்சுடுறோம். மேலும் ஷூக்கள்ல சிறு பூச்செடிகள், டயர்கள்ல செடிகள் வெச்சு அவைகளையும் அழகா மாத்தி அமைச்சோம். இந்த செடிகளைப் பார்த்துட்டு திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸ்ல கூட கேட்டதால் அவங்களுக்கும் இந்த ரீசைக்கிள்டு உரம் மற்றும் செடிகள் கொடுத்தோம்...’’ என்னும் மதியழகன் குழு அடுத்தகட்டமாக குப்பை மேடாக இருந்த நரவாரிக்குப்பம் சுடுகாட்டையும் சீரமைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.

‘‘ஆரம்பத்திலே பிரச்னை செய்த மக்கள் இப்ப நாங்க செய்த, செய்கிற மாற்றங்களை எல்லாம் பார்த்துட்டு அவங்களும் இறங்கி வேலை செய்யத் துவங்கிட்டாங்க. குறிப்பா குப்பைகளைப் பிரிச்சு அது அதுக்கான இடங்கள்ல போட ஆரம்பிச்சுட்டாங்க. தொடர்ந்து புழல் ஏரிக்கரை, சுற்றுவட்டாரம்னு எல்லாத்தையும் சரி செய்தோம். அந்த இடத்தை பூங்காவா மாத்திக் கொடுக்கச் சொல்லி மக்கள் கிட்ட இருந்துகூட வேண்டுகோள் வந்திருக்கு. நாங்களும் அதற்கான முயற்சிகள்ல இருக்கோம்.

பெரும்பாலும் சமூகநல அமைப்புகள், தன்னார்வலர்கள்தான் இந்த வேலைகளைச் செய்யறதுண்டு. ஆனால், இது அரசு ஊழியர்களின் கடமை.

இதேபோல் எல்லா பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களும் அந்தந்த ஏரியா மக்கள் கூட கைகோர்த்தாலே போதும், பல நல்ல  விஷயங்கள் செய்யலாம். மேலும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் மற்றும் விஏஓ சதீஷ் பேராதரவு கொடுத்தாங்க.

இப்படி பல ஊர்கள்ல நிறைய இடங்களை குப்பை கொட்டுகிற இடமாவே வெச்சிருக்காங்க. எல்லாரும் இறங்கினாலே சுற்றுப்புறம் தூய்மையாகும்...’’ என்கிறார் ஆர்.மதியழகன்.கடந்து செல்லும் பலரும் ‘‘ஆமாங்க, ஒரு காலத்திலே இந்த ஏரியாவை கிராஸ் செய்யவே முடியாது, அவ்வளவு அசிங்கமா, காத்துல குப்பை எல்லாம் பறக்கும். கெட்ட நாற்றம் வேற இருந்துச்சு. இப்ப அதே இடம்... கொஞ்ச நேரம் நின்னுட்டு போகலாம் என்கிற மனநிலையைக் கொடுக்குது...’’ என நிம்மதியாகச் சொல்கிறார்கள்!   
                       
செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: லூயிஸ் பால்