99 SONGS



கதையும், இசையும் ஏ.ஆர்.ரஹ்மான் என்பதாலேயே கொண்டாட்ட படமாகிவிட்டது ‘99 ஸாங்ஸ்’.தாய் இல்லாத தன் மகனை, இசை வாசனையே படாமல் வளர்க்க நினைக்கிறார் அப்பா. மகனுக்கோ (ஜே) இசைதான் உயிர். உலகின் மற்ற போதைகளை விடவும், இசை தரக்கூடிய போதை அபரிமிதமானது என எண்ணும் ஹீரோ, சோஃபியா மீது காதலில் விழுகிறார்.

சோஃபியாவின் அப்பாவுக்கும் ஜேவை பிடித்துவிடுகிறது. ஆனால், அவரோ, மருமகன் தன்னைப் போல் பிசினஸிலும் பெயரெடுக்க வேண்டும் என நினைக்கிறார். அதற்கு ஹீரோ உடன்படாததால், ‘இந்த உலகத்தை மாற்றும் ஒரு பாடலை எழுதிக் கொண்டுவா. அதுவரை சோஃபியைப் பார்க்காதே’ எனச் சொல்லிவிட, அவரது சவாலை எதிர்கொள்ள ரெடியாகிறார் ஹீரோ.

இதையறிந்த ஜேவின் உயிர் நண்பன் போலோ, ‘நீ பாடல்கள் எழுத சிறந்த இடம் எனது ஊர்தான்’ எனச் சொல்லி ஷில்லாங் அழைத்துச் செல்கிறான்.
அங்கே  ஷீலாவைச் சந்திக்கிறான் ஜே. அதன்பிறகு நடக்கும் திடுக்கிடும் திருப்பங்களும், ஹீரோவின் காதல் நிறைவேறியதா என்பதும் மீதிக்கதை.

பழக்கப்பட்ட காதல் கதைதான். ஆனாலும் அதற்குள் ரொமான்ஸ், சஸ்பென்ஸ், த்ரில்,எமோஷன்ஸ் என அத்தனையும் தொடுத்து, ஏ சென்டருக்கான நாலு முழம் பூவாக கதையை எழுதி யிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதை ஆங்கிலப் பட பாணியில் மிரட்டலான மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி. வசனம் கவுதம் மேனன்.

ஹீரோ ஜே ஆக இஹான்பட். ஹேண்ட்சம் லுக். டயலாக் எல்லாம் மணிரத்னம் ஸ்டைலில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போல. பர்ஃபெக்ட்டாக ஃபாலோ செய்திருக்கிறார். ஹீரோயின் எடில்ஸி வர்கஸ், ஹோம்லி கோதுமை அல்வா. ஃபேஷன் ஷோவில் ரேம்ப் வாக் வருவதாகட்டும், காதலனுக்கு லிப்லாக் கொடுப்பதாகட்டும், தலைவனைப் பிரிந்த வலியையும் வேதனையையும் அள்ளித் தெளிப்பதிலாகட்டும்... வொண்டர்ஃபுல்.
சில காட்சிகளே வந்தாலும் ஷீலாவாக முன்னாள் சூப்பர் மாடல் அழகி யான லிசா ரேவும், சில காட்சி களில் மட்டுமே தலைகாட்டும் மனிஷா கொய்ராலாவும் மனதில் நிற்கிறார்கள்.

படத்தில் மொத்தம் 14 பாடல்கள். ஒவ்வொன்றும் சிச்சுவேஷனுக்கான மெட்டுகள், வரிகள் என்பதால் இழைத்து இழைத்து இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இசைப்பிரியர்களை இழுக்கும் ஆல்பம்!  

குங்குமம் விமர்சனக்குழு