எப்படி நடிக்கணும்னு அனுராக் காஷ்யப்கிட்ட கத்துக்கிட்டேன்! சொல்கிறார் ‘கண்ணபிரான்’
‘‘என்ன திட்டாதீங்க எப்போவ், ஆத்தோவ், அண்ணோவ்... கண்ணபிரா னாக நடிச்சுதான்பா இருந்தேன். போன் மெசேஜ்ல திட்டாதீங்கப்பா... முடியலப்பா... அது வெறும் நடிப்புப்பா... ரசிகர்களுக்கு நன்றி...’’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ‘நட்டி’ நடராஜ்.
‘கர்ணன்’ படத்தில் அவர் ஏற்று நடித்த கண்ணபிரான் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பாராட்டு களைவிட, கூடுதலான வசவுகளை அள்ளிவரு கிறது. அந்தளவுக்கு ஈவு, இரக்கமற்ற வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருக்கிறார் நட்டி. பாலிவுட்டின் மெகா பட்ஜெட் படங்களின் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டியுடன் அரங்கேறியது சிறு உரையாடல்.
சமீப காலமாக நெகட்டிவ் வேடம்...‘சதுரங்க வேட்டை’யில் காந்தி கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு தான் என்னை அந்த முடிவு எடுக்க வைத்தது. ‘இப்படியெல்லாம் உங்களை ஏமாற்றுவார்கள், இப்படியான மனிதர்கள் உள்ளார்கள், கவனமாக இருங்கள்’ என நெகட்டிவ் ரோல் வழியாகச் சொல்லவும் முடிந்தது.
160 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வருகிறார்கள். `இவர் படங்கள் இப்படித்தான்’னு என்னை யாரும் நினைச்சுடக்கூடாது. அதனாலதான் கொஞ்சம் கவனித்து நடிக்கிறேன். இருந்தும் முதல் பட இயக்குநர்களுக்குத்தான் என் முன்னுரிமை. எப்போது வேண்டு மானாலும் என்னைத்தேடி வந்து கதை சொல்லலாம். நான் அவர்களுக்கான நாயகன். பாலிவுட் இயக்குநர், நடிகர் அனுராக் காஷ்யப்புக்கும் உங்களுக்குமான நட்பு...அனுராக்கிடம் உரிமையோட ‘வாடா போடா மச்சான்...’, ‘இது வேணாம்டா...’னு சண்டை போடுவேன். ‘இப்படி வேணும், எதைக் காட்சிப்படுத்தணும்’னு முன்னாடியே அனுராக் தெளிவு படுத்திடுவான். வக்கிர புத்தி கொண்ட ஒருத்தனுடைய மனநிலையைக் காட்டணும்னா, அவன் எந்த சூழல்ல, எப்படி வளர்ந்திருப்பான்னு திரையில காட்டணும். இதுக்கான மெனக்கெடல்,. கிரியேட்டிவ் சிந்தனைகள் அனுராக்கிட்ட அபரிமிதமா வெளிப்படும்.
அனுராக்கின் மேனரிஸம் என்கிட்ட அடிக்கடி எட்டிப்பார்க்கும். ‘சதுரங்க வேட்டை’ படத்துல நிறைய இடங்கள்ல அவனை மாதிரியே கைகளை ஆட்டிப் பேசியிருப்பேன். அனுராக்கைத் தெரிஞ்சவங்களுக்கு அது புரியும். அவன்கிட்ட இருந்துதான் எப்படி நடிக்கணும், நடிக்கக் கூடாதுன்னு கத்துக்கிட்டேன். இப்போ அவனும் நடிக்க வந்துட்டான். ரொம்பவே மிகிழ்ச்சியா இருக்கு.
அடுத்து நடிக்கும் படங்கள், ஒளிப்பதிவு...
புதுமுக இயக்குநர் ஜெய்சீலன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். ஒரு நாளில் நடக்கும் கதை இது. இதுபோக வெப் சீரிஸில் நடிக்கிறேன். இந்தியில் பெரிய இயக்குநரின் படத்தில் ஒளிப்பதிவு செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கொரோனா முடிவுக்கு வந்தால்தான் அனைவருக்கும் ஒரு வழி பிறக்கும்.
உங்க நடிப்புல ஒரு பதட்டம் தெரியுதே...
அது பதட்டம் இல்லை. சின்ன வயசுல இருந்தே நான் ஹைப்பர் ஆக்டிவ் சைல்ட். எங்க அப்பா என்னை விட அதிகமான ஹைப்பர் ஆக்டிவ். கேமராமேனாக ஷூட்டிங் ஸ்பாட்டில் படுவேகமாக வேலை செய்வேன். என் வேகத்தைப் பற்றி பாலிவுட்டில் அனைவரும் பேசுவார்கள். நடிக்கும்போதும் கூட அந்த வேகம் உடல் மொழியில், பேசும் தொனியில் வெளிப்படும்.
ஆனால், ‘கர்ணனி’ல் மாரி செல்வராஜ் அதை மாற்றியிருப்பார். ஆரம்பத்தில் வழக்கமாக எனது ஸ்டைலில் நடித்தேன். ‘இவ்வளவு வேண்டாம். பத்து சதவீதம் மட்டும் வெளிக்காட்டுங்கள்...’ என ஒவ்வொரு அசைவின் தன்மையையும் குறைத்தார். குறிப்பாக கண் பார்வையில் எப்போதும் ஒரு வில்லத்தனம் இருக்க செய்தார். ‘ஒரு புழுவைப்பார்ப்பது போலவும், பருந்து கோழியைப் பார்ப்பது போலவும் கண் பார்வை இருக்க வேண்டும்...’ எனச் சொன்னார்.
பாலிவுட்டில் உங்கள் நடிப்பைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
கோவிட் சூழலால் நண்பர்கள் யாரும் படம் பார்க்கவில்லை. தகவல் கேள்விப்பட்டு பலரும் பாராட்டி வருகிறார்கள். பாலிவுட்டில் தமிழ் சினிமாவை அதிகமாக கவனிக்கிறாங்க. தமிழில் வந்த பல மசாலா படங்கள், ‘அப்படிப் போடு...’ , ‘ரவுடி பேபி...’ போன்ற பாடல்கள் அங்கே மிகப்பெரிய ஹிட்.
தமிழ் சினிமா பற்றிய பார்வையை பாலிவுட்காரர்களுக்குப் புரிய வைத்தது அனுராக்தான். எந்த மேடைக்குச் சென்றாலும் பாலா படங்கள், சசிகுமார், ராம் போன்றவர்களைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். மணிரத்னத்தை மட்டுமே பிரமித்த பாலிவுட்காரர்கள் இப்போது தமிழில் இருந்து யார் வந்தாலும் கவனிக்கிறார்கள். சிறப்பாக இருந்தால் கொண்டாடவும் செய்கிறார்கள்.
‘கர்ணனு’க்குள் எப்படி...
தாணு சார்தான் முதலில் போன் செய்து அழைத்தார். அவரை நேரில் பார்த்தபோது மாரி செல்வராஜ் உடன் இருந்தார். ‘வில்லன் கதாபாத்திரம். நீங்கள் செய்வீர்களா..?’ என்று கேட்டார். ‘ஓ... யெஸ். கண்டிப்பா பண்றேன் சார்...’ என்று சொன்னென். ஐபிஎஸ் ஆபீசர் கேரக்டரை விவரித்தார். சின்ன தயக்கம் வந்தது. ‘என்னை ஷேர் ஆட்டோ டிரைவரா பார்த்திருக்காங்க, கூலி வேலை செய்ற கேரக்டர் பண்ணி இருக்கேன். அதிகாரி வேடம் எனக்கு எப்படி செட் ஆகும்..?’னு ஆச்சரியமா கேட்டேன்.
‘இல்லை சார். நான் பார்த்த பெரும்பாலான ஐபிஎஸ் அதிகாரிகள் உங்களைப் போலதான் இருந்தாங்க. நீங்க உடலை எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். மீசை மட்டும் கொஞ்சம் பெருசா வளத்துடுங்க...’னு மாரி செல்வராஜ் சொன்னார். அவ்வளவுதான்.
திலீபன் புகழ்
|