பழங்களில் பிறந்தநாள் கேக்!
வண்ணங்களாலான கிரீம் கேக்குகளைப் பார்த்திருப்போம். ஆனால், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி முழுக்க முழுக்கபழங்களைக் கொண்டே கேக் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த டில்லி முருகன். அதுவும் யாருக்கு பிறந்தநாளோ அல்லது மணநாளோ அவர்களின் புகைப்படத்தையும் அப்பழ கேக்கிலேயே அழகாக வரைந்து தருகிறார். இதனால், பழ கேக்கை பலரும் நாடி வருவதாகச் சொல்கிறார். பழங்களில் கேக் என்கிற கான்செப்ட் தமிழகத்தில் இதுவே முதல்முறை.
‘‘இது பழங்களை மட்டுேம வச்சு கார்விங் மூலம் செய்ற கேக். இதுல எந்தவிதமான ரசாயனமோ, வண்ணங்களோ சேர்க்கறதில்ல. அப்புறம், இதை பதப்படுத்தியும் செய்றதில்ல. ஃப்ரெஷ்ஷா பண்ணித் தர்றேன். உடலுக்கு எவ்வித கெடுதலும் ஏற்படுத்தாத ஆரோக்கிய கேக் இது...’’ என உற்சாகம் பொங்க பேசுகிறார் டில்லி முருகன்.
‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் திருக்கழுக்குன்றம் அருகில் கரியச்சேரி கிராமத்துல. எனக்கு ஹோட்டல் வச்சு நடத்தணும்னு ஆசை. அதனால, பள்ளிப் படிப்பு முடிச்சதும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க சென்னைக்கு வந்தேன். 2015ம் ஆண்டு கல்லூரியில் ஒரு விளம்பரத்திற்காக கார்விங் செய்தாங்க.
அதுக்கு முன்னாடி வரை எனக்கு கார்விங் பத்தி துளியும் தெரியாது. இதைப் பார்த்ததும் கார்விங் பண்ணணும்னு ஆர்வம் வந்தது. இதை முறையா கத்துக்கலாம்னு தேட ஆரம்பிச்சப்ப செஃப் உமாசங்கர் தனபால் சாரை ஃபேஸ்புக் மூலம் சந்திச்சேன். அவர்தான் எனக்கு கார்விங் கலையைக் கத்துத்தந்த குரு. உமாசங்கர் சார் பத்து நாட்கள்னு ஒரு வொர்க் ஷாப் போட்டார். ‘பத்து நாட்கள்ல கத்துக்க முடியுமா’னு அவர்கிட்ட கேட்ேடன். ‘கத்துக்கலாம். இல்லனா, நான் பணத்தை திருப்பிக் கொடுத்திடுறேன்’னு சொன்னார். எனக்கு நிறைய நம்பிக்கை வந்தது. அவர் சொன்னமாதிரி பத்து நாட்கள்ல கத்துக்கிட்டேன். உடனே, ஒரு நிறுவனத்தின் புரொமோஷனுக்காக லைவ்வா கார்விங் பண்ற ஈவென்ட்ல என்னைக் கலந்துக்க சொன்னார். சிறப்பா செய்தேன். அந்த வினாடியே கார்விங்தான் என் முழுநேரப் பணிஎனத்தீர்மானிச்சேன்.
பிறகு, 2017ல் உமாசங்கர் சாருக்கு குவைத்ல இருந்து கார்விங் பணிக்கு ஒரு ஆஃபர் வந்தது. அந்த வேலைக்கு என்னை அனுப்பினார். அங்க 28 மாதங்கள் ேவலை செய்தேன். பொதுவா, வெளிநாடுகள்ல பழங்களுக்கான கார்விங்க்கு ஸ்பெஷல் கிச்சன் இருக்கும். இங்க பிறந்தநாள்னா எப்படி கேக் வெட்டிக் கொண்டுபோறோமோ அங்க அதுமாதிரி எல்லா விசேஷங்களுக்கும் பழங்கள் வாங்கிட்டு போவாங்க.
அங்கதான் பிறந்தநாள் கேக்கை பழங்கள்ல செய்ற ஐடியா வந்துச்சு. ஆனா, அதுக்கு முன்னாடியே கார்விங்ல இந்தமாதிரி செய்யணும்னு நினைச்சிருந்தேன். ஆனா, அதுக்கான விதை அங்க ஆழமா பதிஞ்சது. 2019 அக்டோபர் மாசம் ஊருக்குத் திரும்பினேன். முழுநேரமும் கார்விங் பண்ணப் போறேன்னு சொன்னதும் வீட்டுல ஒரே பிரச்னை. அவங்களுக்குப் புரிய வச்சு டிசம்பர்ல சென்னைக்கு வந்து கார்விங்கை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல சரியா போகல. இதை மக்களுக்குப் புரிய வைக்க முடியல. எல்லோருமே இதை ஒரு கலையாதான் பார்த்தாங்க. அப்புறம், இந்தப் புகைப்பட கான்செப்ட்தான் மக்களை ரொம்ப ஈர்த்தது...’’ என்கிற டில்லி முருகன் புகைப்பட கார்விங் கான்செப்ட்டினுள் வந்தார்.
‘‘முதல்ல பழங்கள்ல பிறந்தநாள் கேக்கும், தட்டு, கூடைகள்ல பழங்கள் செய்றதுமா இருந்தேன். அப்புறம், திருமணத்துக்கான கார்விங் எல்லாம் செய்தேன். திருமணத்துக்கான கார்விங்ல மணமக்கள் படங்களை தர்பூஸ்ல கார்விங் செய்து கொடுப்பேன். பிறந்தநாள் கேக்கைப் பொறுத்தவரை ஒரு நண்பர் ஹெல்த்தி கேக் வேணும்னு கேட்டார். அவருக்காக ஐந்து கேக் செய்து பார்த்து அதில் சிறப்பா வந்த ஒண்ணைக் கொடுத்தேன். பிறகு, ஜனவரியில் இன்னொரு நண்பர் கேட்டார்.
அவருக்கும்செய்து கொடுத்தேன். அப்படியே அடுத்தடுத்து பழ கேக் ஆர்டர்கள் வந்தது. இதுல புகைப்படம் எதுவும் போட்டு செய்யல. அப்படி வேணும்னு யாரும் கேட்கவுமில்ல. இந்நேரம், கொரோனா வர ஊருக்கே போக வேண்டிய நிலை ஏற்பட்டுச்சு.
ஊர்ல ஒரு நண்பர் பிறந்தநாளுக்கு பழ கேக்கை புகைப்படம் போட்டு செய்து தர முடியுமானு கேட்டார். நான் அதுக்குமுன்னாடி வரை முழு தர்பூஸ் பழத்துல பெரிசா மணமக்கள் படங்களும், சினிமா நடிகர் படங்களுமே போட்டிருக்கேன். இப்ப பிறந்தநாள் கேக்ல சின்னதா புகைப்படம் வரணும். கொஞ்சம் சவாலானது. சரினு அந்த ஆர்டரை ஏற்றுக்கொண்டு அவங்க உருவத்தை ஸ்கெட்ச் செய்தேன். சிறப்பா வந்துச்சு.
உங்களுடைய பிறந்தநாளுக்கு உங்க புகைப்படம் போட்டு பழ கேக் கொடுத்தால் எப்படியிருக்கும்? ரொம்ப சந்தோஷமா இருக்கும் இல்லையா? அப்படி இந்த கேக் பலரைக் கவர்ந்து சந்தோஷப்படுத்தியது. நிகழ்ச்சிக்கு வந்தவங்க இதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸா வச்சாங்க. தங்கள் முகநூல் பக்கத்துல போட்டாங்க. இதைப் பார்த்து ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. நானும் ‘FruitArt’னு ஒரு முகநூல் பக்கத்தை ஆரம்பிச்சு அதுல படங்களை ஏற்றினேன். பழ கேக்ல புகைப்பட கான்செப்ட் பிரபலமாச்சு.
2020ம் ஆண்டு அக்டோபர்ல சென்னை வந்து புகைப்பட கான்செப்ட்டை ஆரம்பிச்சேன். மாசத்துக்கு 15 ஆர்டர்னு இப்ப வரை அறுபது ஆர்டர் பண்ணியிருக்கேன். சிலர் தங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கிற டோரா, சின்ஷாங், டிட்டூ கதாபாத்திரங்களை பழ கேக்ல கார்விங் பண்ணித் தரச் சொல்லி கேட்பாங்க. அதுவும் செய்து கொடுத்தேன்.
இதுதவிர, விரதம் இருக்கிறவங்க, முட்டையோ, மட்டனோ சாப்பிடாதவங்க, டயட்ல இருக்கிறவங்க, கெமிக்கல் விரும்பாதவங்க எல்லாம் இந்த கேக்கை விரும்பிக் கேட்டாங்க. செய்தேன். பொதுவா, கேக் ஆர்டர் வந்ததும் வீட்டுல கட் பண்ற நேரத்தை வச்சுதான் கார்விங் செய்வேன். சிலர் இரவு 12 மணிக்கு கட் பண்ணணும்னு கேட்பாங்க.
அவங்களுக்கு கார்விங் பண்ணிட்டு ஃப்ரிட்ஜ்ல வைக்க சொல்லிடுவேன். கூலிங் உடலுக்கு ஒத்துக்கும்னா அப்பவே எடுத்து வெட்டச் சொல்வேன். இல்லனா ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி எடுத்து வைக்க சொல்லிடுவேன். இதுக்கேத்த மாதிரி பேக் பண்ணி கொடுப்பேன். நானும் கையுறை போட்டுப் பண்றதால அவ்வளவு எளிதில் பழங்கள் கெடாது.
தோராயமா ஒரு கேக் ஒரு கிலோவில் இருந்து ரெண்டு கிலோ வரை வரும். ஆனா, சிலர் ரெண்டு, மூணு அடுக்குல வேணும்னு கேட்பாங்க. அதுக்கேத்த மாதிரி பணம் வாங்குவேன். நார்மலா புகைப்படம் போட்டுத் தர்ற கேக் ஆயிரத்து 500 ரூபாய்ல செய்றேன். புகைப்படம் இல்லனா 900 ரூபாய் வரும். இதுக்கு தர்பூஸ், அன்னாசி, கிர்ணி, கிவி, ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, கொய்யா, மாம்பழம் உள்ளிட்ட பழங்கள் போடுவேன். தவிர, அவங்க விருப்பப்பட்டு பழங்கள் சொன்னாலும் அதிலும் செய்றேன்...’’ என்கிறவருக்கு இன்னும் போதுமான வருமானம் கிடைக்கவில்லையாம்.
‘‘ஒரு ஆர்டருக்கு 1500 ரூபாய் கிடைக்கும். மாசம் 15 ஆர்டருனு வச்சா 22 ஆயிரம் ரூபாய் வரும். இதுல பழம் வாங்கினது போக நான் புதுசா எதாவது முயற்சி செய்வேன். அதனால, இப்போதைக்கு வருமானம் பத்தல. இதனாலயே என்னை மாதிரி கார்விங்ல உள்ளவங்க பகுதிநேரமா இதை செய்வாங்க. ஆனா, என்னால பண்ண முடியும்னு நினைச்சே முழுநேரமா கார்விங்ல இறங்கினேன். இன்னைக்கு இல்லனாலும் பின்னாடி நல்லா பிக்அப் ஆகும்னு நம்பிக்கை இருக்கு.
வெளியில் சாதாரண கிரீம் கேக்கை பத்தாயிரம், பதினைஞ்சாயிரம் ரூபாய்னு ஆர்டர் செய்து வாங்கறாங்க. நம்ம பழ கேக்கிற்கான தொகை இதுல பாதிதான் வரும். என்னுடைய நோக்கமே ஆரோக்கியமான பழ கேக்கை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கணும் என்பதுதான்...’’ நம்பிக்கையாகச் சொல்கிறார் டில்லி முருகன்.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்:ஆர்.சி.எஸ்.
|